அரசு பணிகளில், எழுத்தர்களுக்கு பதில், நவீன தொழில்நுட்ப சாதனங்களை பயன்படுத்தத் தெரிந்த, நிர்வாக உதவியாளர்களை பணியில் சேர்க்க,மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு பணிகளில், எல்.டி.சி., எனப்படும், கீழ்நிலை எழுத்தர், யூ.டி.சி., எனப்படும், உயர்நிலை எழுத்தர் பணிகள் உள்ளன. மத்திய அரசின் செயலக பணிகளின் முதுகெலும்பாக இப்பணியாளர்கள் திகழ்கின்றனர்.
இவர்களுக்கு பதில், கம்ப்யூட்டர் உள்ளிட்ட நவீன சாதனங்களை பயன்படுத்தத் தெரிந்த இளைஞர்களை, நிர்வாக உதவியாளர் பணியில் சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.அடுத்த, 25 ஆண்டுகளில், இத்திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும்.
டில்லியில் உள்ள, மத்திய தலைமைச் செயலகத்தில், 21 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். அரசின் புதிய திட்டத்தால், ஊழியர் எண்ணிக்கை, 8,200ஆக குறையும்.நிர்வாக உதவியாளர்கள், பணியாளர் தேர்வாணையத்தால் நியமிக்கப்படுவர்; ஆறு ஆண்டு பணிக்கு பின், நிர்வாக அதிகாரிகளாக பதவி உயர்வு பெறுவர். இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், மத்திய அரசு பணியாளர்கள், அனைத்து வித தொழில் திறன்களையும் கொண்டவர்களாக விளங்குவர்.