தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் குடியரசு தின விழாவையொட்டி மாநில அளவில் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நெய்வேலியில் நடந்தது. இதில் சைக்கிள் போட்டியில் மாணவிகள் பிரிவில் திருச்சி ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
இவர் தொடர்ந்து 3-வது முறையாக தங்கம் பதக்கம் வென்றவர் ஆவார். இதேபோல சக மாணவியான லாவண்யா விருத்தாசலத்தில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். மாநில அளவிலான விளையாட்டு போட்டியில் சாதனை படைத்த மாணவிகள் ஐஸ்வர்யா, லாவண்யா ஆகிய 2 பேரையும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஆனந்தி பாராட்டி வாழ்த்தினார். அப்போது ஸ்ரீரங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை மீனலோசினி, உடற்கல்வி ஆசிரியர் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர்.