அரசு பள்ளியில் படித்து ஐ.ஏ .எஸ். ஆனேன் வேளாண்மை துறை இணை செயலர் செ .ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ். பெருமிதம்


தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை இணை செயலர் செ .ராஜேந்திரன் ஐ.ஏ .எஸ். தான் அரசு பள்ளியில் படித்து ஐ.ஏ.எஸ். ஆனது குறித்து பெருமிதம் கொள்வதாக மாணவர்களிடம் பேசினார்.


கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவிகளின் அபிராமி அந்தாதி நடனம் மற்றும் திருக்குறள் நடனம் நடைபெற்றது.1ம் வகுப்பு மாணவி திவ்ய ஸ்ரீ திருப்பாவையும், திருப்பாவை போட்டிகளில் சிவகங்கை மாவட்ட அளவில் முதலிடம் பெற்று வெற்றி பெற்றுள்ள 1ம் வகுப்பு மாணவி ஜெய ஸ்ரீ திருவெம்பாவையும்,2ம் வகுப்பு மாணவர் வெங்கட்ராமன் திருமுருகாற்றுப்படை பாடல்களையும், 6ம் வகுப்பு மாணவர் ரஞ்சித் தேவாரம் பாடல்களையும் ,7ம் வகுப்பு மாணவி தனலெட்சுமி நன்னெறி பாடலையும் பாடினார்கள்.மத்திய கிழக்கு பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் ஜெகநாதன்,சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரியின் தாளாளர் சேது குமணன்,கோவில்பட்டி தொழில் அதிபர் நாகஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை இணை செயலர் செ .ராஜேந்திரன் ஐ.ஏ .எஸ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசுகையில் , உங்களை போன்று நானும் அரசு பள்ளியில் படித்து ஐ.ஏ .எஸ்.தேர்வில் வெற்றி பெற்று மாவட்ட ஆட்சியர் ஆனேன்.குட்டி கதை ஒன்றை கூறி அதன் மூலம் உண்மையாக உழைப்பவனுக்கு தான் நல்லவை அனைத்தும் கிடைக்கும் என்பதை மிக எளிமையாக மாணவர்களுக்கு புரிய வைத்தார். ஒற்றுமையே பலம், தன்னம்பிக்கை வழியாக கிடைக்கும் வெற்றி , ஆசிரியரை மதிக்கும் பண்பு,பொய் சொல்லமால் இருத்தல் ,நல்ல மாணவராக இருப்பதற்கு என்ன,என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் விளக்கினார். இயற்கை வேளாண்மை குறித்தும், ஐ.ஏ.எஸ். ஆவதற்கு எப்படி படிக்க வேண்டும் என்றும் அதற்கு இளம் வயதிலேயே தினசரி பத்திரிக்கை படிப்பது,பொது அறிவு தகவல்களை வளர்த்து கொள்ள நுலகத்தை பயன்படுத்துவது எப்படி என்பது உட்பட பல்வேறு தகவல்களை விரிவாக எடுத்துக் கூறினார். படிக்கும் மாணவர்கள் அனைவரும் நன்றாக படித்து அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கு கொண்டு அதில் வெற்றி பெற்றால் அரசு வேலை கிடைக்கும் என்றும் , ஐ.ஏ .எஸ். போன்ற பணி இடங்களுக்கு நன்றாக படித்தால் எளிதாக செல்லலாம் என தெரிவித்தார். பாரதியார் பாடல்களை பாடி காண்பித்து பொய் சொல்லாமல் இருக்க வேண்டியதன் அவசியத்தையும்,அதன் பலன்களையும் நன்றாக எடுத்து உரைத்தார்.பள்ளி நுலகத்திற்கு மாணவர்கள் படிக்கும் வகையில் புதியதாக புத்தகங்களை வழங்கினார்.நூலக புத்தகங்களை பார்வையிட்டு படித்து பார்த்தார். .

இணை செயலரிடம் மாணவிகள் தனலெட்சுமி,பிரவீனா , பரமேஸ்வரி, தனம், சந்தியா மாணவர்கள் அபினாஷ் ,ஈஸ்வரன்,ஜெகதீஷ் உட்பட பல மாணவ,மாணவியர் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர். நிகழ்ச்சியில் நடனம் ஆடிய மாணவிகள், பாடல்கள் பாடிய மாணவ,மாணவியர், கேள்விகள் கேட்டு பதில்கள் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் வேளாண்மை துறை அதிகாரிகள் ஸ்ரீதரன்,இளங்கோ,சென்னை தொழில் அதிபர் குணசேகரன்,தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் ரமேஷ் உட்பட பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி தொடர்பாக ஆசிரியைகள் வாசுகி,சாந்தி,ஆசிரியர் ஸ்ரீதர்,பெற்றோர்கள் மகேஷ், சொர்ணாம்பாள், சீதா லெட்சுமி , சத்துணவு உதவியாளர் கலா உட்பட பலர் பேசினார்கள். நிறைவாக ஆசிரியை முத்து மீனாள் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேவுகன் அண்ணாமலை கல்லூரி பேரா.கண்ணதாசன் செய்திருந்தார். 


பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவியரிடம் தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை இணை செயலர் செ .ராஜேந்திரன் ஐ.ஏ .எஸ். பேசிய போது எடுத்த படம்.


அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்களின் கேள்விகளும் , தமிழ்நாடு அரசின் வேளாண்மை துறை இணை செயலர் செ .ராஜேந்திரன் ஐ.ஏ .எஸ். அவர்களின் பதில்களும் 

பரமேஸ்வரி : தமிழ்நாட்டில் எத்தனயோ அரசு துறைகள் இருக்கும்போது ஏன் நீங்கள் ஐ.ஏ .எஸ். பணியை தேர்ந்தெடுத்தீர்கள் ?

பதில் : மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில் இப்பணியை தேர்ந்தெடுத்தேன்.


பூவதி : சிறந்த உரம் எது ?

பதில் : இயற்கை உரம்தான் சிறந்த உரம் .

மகாலெட்சுமி : 50 ஆண்டுகள் கழித்து இந்தியா எப்படி இருக்கும்?

பதில்: மிகபெரிய வல்லரசு நாடாக இருக்கும்.

சந்தோஷ் : படிக்கிற எல்லோர்க்கும் அரசாங்க வேலை கிடைக்குமா?

பதில் : படிக்கிற அனைவரும் அரசு நடத்தும் போட்டி தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெற்றால் கண்டிப்பாக அரசாங்க வேலை கிடைக்கும்.

காயத்ரி : நீங்கள் எந்த பள்ளியில் படித்தீர்கள் ?

பதில் : உங்களை போன்று நானும் அரசு பள்ளியில் தான் படித்தேன்.அரசு பள்ளியில் படித்து ஐ.ஏ .எஸ். ஆனது குறித்து பெருமிதம் கொள்கிறேன் என்றார்.

பிரவீனா : IAS ஆக என்ன படிக்க வேண்டும் ?

பதில் : பள்ளி பருவத்தில் இருந்தே நன்றாக படிக்க வேண்டும்.பிறகு கல்லூரியில் படித்து ஐ.ஏ .எஸ். போட்டி தேர்வு எழுத வேண்டும்.பள்ளி பருவத்தில் இருந்தே தினசரி ஆர்வத்துடன் பத்திரிக்கைகள் வாசிக்க வேண்டும்.பொது அறிவு தொடர்புடைய புத்தகங்கள் அதிகமாக வாசிக்க வேண்டும் . அவற்றை நினைவில் நிறுத்த வேண்டும் .பிறகு போட்டி தேர்வுகளில் பங்கேற்று நம்பிக்கையுடன் , மனஒருமைபாட்டுடன் தேர்வு எழுதினால் கண்டிப்பாக தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ .எஸ். ஆக முடியும்.


தனலெட்சுமி : ஐ.ஏ .எஸ். ஆக நீங்கள் ஆசைபட்டீர்களா ? அல்லது 
உங்கள் அப்பா,அம்மா ஆசை பட்டார்களா ?


பதில் : ஐ.ஏ .எஸ். ஆகி பொது மக்களுக்கு என்னால் ஆன உதவிகள் செய்ய வேண்டும் என்பது எனது மனதுக்குள் ஆர்வம் இருந்ததுடன் ,எனது பெற்றோரும் எனக்கு வேண்டிய உதவிகளை செய்து மனதிடத்தை,நம்பிக்கையை ஏற்படுத்தி கொடுத்தனர்.குழந்தை பருவத்திலேயே எனது பெற்றோர்கள் என்னை நன்கு படிக்க சொல்லி ஆர்வமூட்டினார்கள் . அத்துடன் எனது ஆர்வமும் இணைந்து இந்த வெற்றியை பெற முடிந்தது. பெற்றோர்கள் மற்றும் எனது முயற்சி ,பயிற்சியின் கூட்டு முயற்சிதான் இந்த வெற்றிக்கு காரணம்.

ஜெகதீஸ்வரன் : நீங்கள் எந்த வருடம் ஐ.ஏ .எஸ். ஆனீர்கள் ?

பதில் : 2008ம் வருடம் .

இது போன்று பல்வேறு கேள்விகளை கேட்டு மாணவர்கள் பதில் பெற்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி