நாகர்கோவில்: அறிவிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடு சில கோவில்களில் கடைப்பிடிப்பதாலும், சில கோவில்களில் அனைத்து உடைகளிலும் அனுமதிக்கப்படுவதாலும் பக்தர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் இந்து கோவில்களில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், பாரம்பரிய ஆடைகளை அணிந்து வரவேண்டும், முறையற்ற இறுக்கமான ஆடைகளை அணிந்து வரக்கூடாது என சில கட்டுப்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி ஆண்கள் மேல் சட்டை, வேட்டி, பைஜாமா, சாதாரண பேண்ட், சட்டை அணிந்து கோவிலுக்குள் செல்லலாம். பெண்கள் சேலை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் மற்றும் குழந்தைகள் உடல் முழுவதும் மூடப்பட்ட ஆடைகளை அணிந்து கோவில்களுக்குள் வரலாம் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.இந்த ஆடைக்கட்டுப்பாடு உத்தரவு இன்று முதல் அமலுக்கு வந்தது. இந்த கட்டுப்பாடுகளை பக்தர்கள் கடைபிடித்து கோவிலுக்கு வருகிறார்களா? என்பதை கோவில் ஊழியர்களும், போலீசாரும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், நாகராஜா கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் ஆகிய கோவில்களுக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம். அவர்களில் பலர் அரை டவுசர் அணிந்தபடியும், இறுக்கமான ஆடைகளை அணிந்தபடியும் வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இன்று அவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் பலரை போலீசாரும், ஊழியர்களும் வாசலிலேயே மறித்து அவர்களை திருப்பி அனுப்பினர். பாரம்பரிய ஆடைகள் அணிந்து வந்தவர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் ஆடை கட்டுப்பாடு குறித்த அறிவிப்பு பலகை மட்டுமே வைத்துள்ளனர். ஜீன்ஸ் பேன்ட் அணிந்த ஆண்கள், பெண்கள் எந்த தடையும் இன்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
ஒரு சில கோவில்களில் தீவிரமாக கண்காணிப்பதும், சில கோவில்களில் இதை அறிவிப்பாக மட்டுமே வைத்தும் செயல்படுகின்றது. இதனால் கோவிலுக்கு வரும் பகதர்களுக்கு இந்த ஆடை கட்டுப்பாடு கட்டயமா அல்லது சாதாரன அறிவிப்பு மட்டுமா என ஒரு குழப்பமான சூழ்நிலையை உண்டாக்கியுள்ளது.