இன்னும் 90 நாட்களே... வரிச் சேமிப்புக்கு தயாரா?

இன்னும் 90 நாட்களே... வரிச் சேமிப்புக்கு தயாரா?

கஷ்டப்பட்டு சம்பாதிப்பது முக்கியம். அதைவிட முக்கியம், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை முறையாக முதலீடு செய்து, அதனை பலமடங்காக பெருக்குவது. இப்படி முதலீடு செய்யும்போது அதற்கு வருமான வரிச் சலுகை கிடைக்கிறதா என்று பார்ப்பது அதிமுக்கியம். 

நடப்பு 2015-16-ம் நிதி ஆண்டுக்கான வரிச் சேமிப்பு முதலீட்டை நம்மில் பலர் இன்னும் முழுமையாக செய்திருக்க மாட்டோம். மீதமிருக்கும் இந்த 90 நாட்களில் நம் வரிச் சேமிப்பை எப்படி அமைத்துக் கொள்வது என்கிற கேள்விக்கான பதில் இனி... 

யாருக்கு இது? 

உங்களின் நிதி ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத் துக்கு மேல் இருந்தால், ரூ.2.5 லட்சம் போக மீதமுள்ள தொகைக்கு வரி கட்ட வேண்டும். அப்படி கட்டாமல் வரிச் சலுகை பெற வேண்டும் எனில், வரிச் சேமிப்பை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். 

நீங்கள் பணிபுரிபவராக இருந்தால், உங்கள் சம்பளத்தில் அடிப்படை சம்பளம் மற்றும் பஞ்சப் படியில் 12% பிராவிடெண்ட் ஃபண்டாக பிடிக்கப்படும். இந்தத் தொகை உங்களின் சம்பளத்தில் கழிக்கப் பட்டபிறகு உங்களின் வருமானம் ரூ.2.5 லட்சம் மற்றும் அதற்கு குறைவாக இருந்தால், நீங்கள் வரி கட்ட வேண்டியதில்லை. அந்த வகையில் நீங்கள் வருமான வரியை மிச்சப்படுத்துவதற்காக தனியாக எந்த முதலீட்டை யும் மேற்கொள்ள வேண் டிய தேவையும் இல்லை. 

பி.எஃப், வீட்டு வாடகைப்படி போன்றவை கழிக்கப்பட்டபிறகு சம்பளம் / வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் இருந்தால், வருமான வரியைத் தவிர்க்க முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். 

முதலீட்டை மேற்கொள்ளும்முன், டேர்ம் இன்ஷூரன்ஸ் மற்றும் ஆரோக்கிய காப்பீடு உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எடுத்துக் கொள்வது அவசியம். இவற்றுக்கு கட்டும் பிரீமியத்துக்கு வருமான வரிச் சலுகை இருக்கிறது. 

2015-ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அடிப்படை வருமான வரி வரம்பில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அதே நேரத்தில், வரிச் சலுகைக்கான வரம்பு, ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம், நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்) முதலீட்டு வரம்பு போன்றவை அதிகரிக்கப்பட்டது. அதன் விவரம் கீழே உள்ள அட்டவணையில் விரிவாக தரப்பட்டுள்ளது. 

வருமான வரிச் சேமிப்புக்காக முதலீடு செய்யும் போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் குறித்து சென்னையின் முன்னணி ஆடிட்டர்களில் ஒருவரான சதீஷ்குமாரிடம் கேட்டோம். விளக்கமாக எடுத்துச் சொன்னார் அவர். 

“வரிச் சலுகைக்காக வருமான வரியை சேமிக்க முதலீடு செய்யும்போது, அந்த முதலீடுகள் அனைத்தும் பிஎஃப், விபிஎஃப், பிபிஎஃப், ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் என கடன் சார்ந்த திட்டங்களாக இருப்பது நல்லதல்ல. வட்டி குறையும்போது, இந்த முதலீடுகளுக்கான வட்டியும் குறைந்துவிடும். 

இதற்கு பதில் குறிப்பிட்ட தொகையை வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், குறிப்பிட்ட தொகையை இஎல்எஸ்எஸ் என பிரித்து முதலீடு செய்தால், வரிச் சேமிப்பு முதலீடு மூலம் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இப்படி பிரித்து போடும்போது ஒருவரது வயது, ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்வது நல்லது.

இளம் வயதினர் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் உள்ளவர்கள், பங்கு சார்ந்த திட்டங்களில் வரிச் சலுகை பெற்றுத் தரக்கூடிய இஎல்எஸ்எஸ் திட்டங்களில் முதலீடு செய்யலாம். வங்கி எஃப்டி முதலீடு பாதுகாப்பானது என்றாலும், வட்டி வருமானம் குறைவாக இருக்கும். மேலும், இந்த வருமானத்துக்கும் வரி கட்ட வேண்டும். ஆனால், இஎல்எஸ்எஸ் முதலீட்டில் மூலதனத்துக்கு பாதுகாப்பு இல்லை என்றாலும் நீண்ட காலத்தில் ரிஸ்க் பரவலாக்கப்பட்டுவிடுகிறது. 


மேலும், குறைவான முதலீட்டு வைத்திருப்புக் காலம் (3 ஆண்டுகள்), நீண்ட காலத்தில் பணவீக்க விகிதத்தைத் தாண்டி அதிக வருமானம் தரும் வாய்ப்பு இதில் உண்டு. மேலும், இதிலிருந்து கிடைக்கும் வருமானத்துக்கு வரி கிடையாது. இப்போது சந்தை இறங்கி இருப்பதால், மொத்த முதலீட்டைக்கூட இஎல்எஸ்எஸ் ஃபண்டில் செய்யலாம். 


வரிச் சேமிப்புக்கான முதலீட்டை இப்படி கடன் சார்ந்தது மற்றும் பங்கு சார்ந்தது என கலந்து மேற்கொள்வது லாபகரமாக இருக்கும்” என்றார்.


கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

வருமான வரி கட்டுபவரை சார்ந்திருக்கும் ஊனமுற்றவருக்கு மேற்கொள்ளும் மருத்துவச் செலவு, புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற தீவிர நோய்களுக்கான சிகிச்சை செலவுகள் போன்றவற்றுக் கும் வரிச் சலுகை இருக் கிறது. இது போன்ற செலவு இருப்பவர்கள், இவற்றையும் கழித்தபிறகு ரூ.2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் மட்டுமே வரிச் சலுகைக்கான முதலீட்டை மேற்கொள்வது நல்லது. 

கணவன், மனைவி வேலை பார்க்கிறார்கள். இரு பிள்ளைகளுக்கு படிப்பு செலவு இருக்கிறது எனில், ஒரு பிள்ளையின் செலவுக்கு கணவனும், இன்னொரு பிள்ளையின் செலவுக்கு மனைவியும் வரிச் சலுகை பெற முடியும். அப்படி செய்தால், கூடுதலாக பணத்தை மிச்சப்படுத்தலாம். 

கணவன், மனைவி இருவரும் வேலை பார்க்கும்பட்சத்தில், கூட்டாக வீட்டுக் கடன் வாங்கினால், கூடுதலாக வரியை மிச்சப்படுத்தலாம்.

10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இருந்தால் சுகன்யா சம்ரிதி திட்டத்தில் முதலீடு செய்து வருவது லாபகரமாக இருக்கும். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 9.2% வருமானம் கிடைக்கும். முதலீடு, முதலீட்டுப் பெருக்கம், முதிர்வு என மூன்று நிலையிலும் வரி கிடையாது.

கணவன், மனைவி இருவரும் வேலை பார்க்கும்பட்சத்தில், கூட்டாக வீட்டுக் கடன் வாங்கினால், கூடுதலாக வரியை மிச்சப்படுத்தலாம்.

இளம் வயதினர் மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறன் உள்ளவர்கள், வரிச் சலுகை பெற்றுத் தரக்கூடிய இஎல்எஸ்எஸ் திட்டங்களில் முதலீடு செய்யலாம்!

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி