பணித் தேர்வு நடைமுறைகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்: மத்திய அரசு உத்தரவு

பணித் தேர்வு நடைமுறைகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று அரசுத் துறைகளுக்கு மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து மத்திய அரசு துறைகளுக்கு மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

பணியிடம் காலியாக இருப்பது தொடர்பான விளம்பரம் வெளியிடப்பட்ட தேதிக்கும், அதற்கான எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதிக்கும் இடையே அதிக கால இடைவெளி இருப்பது அரசு கவனத்துக்கு வந்துள்ளது. இதுபோன்ற காலதாமதமானது, அந்த கால கட்டத்தில் பணிக்குத் தயாராக இருக்கும் தகுதி வாய்ந்த புதியவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது போலாகும்.ஆதலால், அனைத்து மத்திய அமைச்சகங்கள் அல்லது மத்திய அரசுத் துறைகள், காலியான பணியிடங்களுக்கு புதிய நியமனங்களைச் செய்வதற்கான நடவடிக்கைகளை, அதாவது பணியிடம் தொடர்பான விளம்பரம் வெளியிடுவது முதல் எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு நடத்துவது வரை அனைத்தையும் 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.விடுமுறை பயணச் சலுகையைப் பெற புதிய விதி: இதனிடையே, மத்திய அரசு ஊழியர்கள் விடுமுறை பயணக்காலச் சலுகை (எல்டிசி) திட்டத்தில் செல்லும்போது உயரதிகாரிகளிடம் அனுமதி பெறுவது தொடர்பாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை புதிய விதிகளை வகுத்துள்ளது.


அதில், விடுமுறை பயணக்கால சலுகை அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்கள் விடுமுறையில் செல்லும்போது, உயரதிகாரிகளிடம் இனி தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, விடுமுறையில் செல்லும் ஊழியர்கள், தாங்கள்சென்ற இடங்களில் எடுத்த கைப்படங்கள், விடுமுறை விவரங்களை சுயகையொப்பமிட்டு அனுப்பினால் போதும் என்று புதிய விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிகள் குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத் துறைகளும் 15 நாள்களில் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி