இந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உயர்ந்து வருகிறது. அதற்கேற்றவாறு சைபர் கிரிமினல்களின் தாக்குதல்களும் அதிகரித்து வருவதாக பிரபல ஆன்டி-வைரஸ் மென்பொருளான கேஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கேஸ்பர்ஸ்கை ஆய்வகம் நடத்திய ஆய்வில் உலகிலேயே அதிகளவில் ஸ்மார்ட்போன் வைரஸ் தாக்குதல்களுக்கு ஆளாகியிருப்பதில் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா 2-வது இடத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, மால்வேர் எனப்படும் வைரஸ்களின் தாக்குதல் இந்திய ஸ்மார்ட்போன்களில் அதிகம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
பொருட்களை வாங்குவது, வங்கி பரிமாற்றங்கள், டாக்ஸி போன்ற வாகனங்களை புக்கிங் செய்வது என அனைத்திற்கும் இணையத்தை சார்ந்திருக்கும் நிலை அதிகரித்து வரும் சூழலில் மால்வேர் தாக்குதல்கள் ஸ்மார்ட்போனில் இருந்து பல்வேறு சொந்த தகவல்களையும், பணப் பரிமாற்ற தகவல்களையும் சைபர் கிரிமினல்கள் திருடுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கேஸ்பர்ஸ்கை எச்சரித்துள்ளது.
இந்த தகவலை கேஸ்பர்ஸ்கை ஆய்வகத்தின் தெற்கு ஆசிய பிராந்திய இயக்குனர் இத்தாப் கால்தே தெரிவித்தார்.