அரசு பேருந்துகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு: கோட்ட மேலாளர்களுக்கு போக்குவரத்துத்துறை உத்தரவு

அரசு பேருந்துகளின் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கோட்ட மேலாளர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு மேற்கொண்டு மேலாண் இயக்குநருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. 
தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளை இயக்குவதற்காக கோயம்புத்தூர், கும்பகோணம், விழுப்புரம், சேலம், மதுரை, திருநெல்வேலி என 6 கோட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர, சென்னை மாநகர போக்குவரத்து கழகமும் செயல்பட்டு வருகிறது

இதன் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு விரைவு பேருந்துகள், சாதாரண பேருந்துகள், கிராமப்புற பேருந்துகள், நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்யும் நடவடிக்கைகளில் போக்குவரத்துத் துறை ஈடுபட்டுள்ளது. அரசு பேருந்துகளில் உள்ள இருக்கை கள் நல்ல நிலையில் உள்ளனவா? ஜன்னல் பக்கவாட்டு பகுதிகள், மேற்கூரைகள், பேருந்துகளின் படிகள் ஆகியன பாதுகாப்பான நிலையில் உள்ளனவா? என கோட்ட மேலாளர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பேருந்துகளில் ஆய்வு மேற் கொண்டு, அந்தந்த கோட்டத்தின் மேலாண் இயக்குநரிடம் அறிக்கை அளிக்க வேண்டும்.

இந்த அறிக்கையின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, கோட்ட மேலாளர் கள் வட்டாரங்கள் கூறியதாவது: அரசு பேருந்துகளின் பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப் படை வசதிகள் முறையாக உள்ளனவா என, 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பேருந்துகளில் உள்ள இருக்கைகள், கை பிடிகள், ஜன்னலில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள், இருக்கைகளில் உள்ள மெத்தைகள் மற்றும் இடைவெளிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். போக்குவரத்து துறை யின் பல்வேறு பிரிவுகளில் கோட்ட மேலாளர்கள் பணியிடத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் இந்த ஆய்வில் ஈடுபட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, கோட்ட மேலாளர்கள் தங்கள் கோட்டத்துக்கு உட்பட்ட பேருந்துகளிலோ, தங்கள் மாவட்டத்தில் இயங்கிவரும் மாற்று கோட்ட பணிமனையின் பேருந்துகளிலோ ஆய்வு மேற்கொள்ளக் கூடாது. மாறாக, தங்கள் எல்லைக்குள் வந்து செல்லும் பிற கோட்டங் களின் பேருந்துகளில் மட்டுமே ஆய்வு மேற்கொள்ள வேண்டும். இதனால், பேருந்துளின் நிலை மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி