இணையதளங்களைப் பயன்படுத்துவோரின் பெரும்பாலான பாஸ்வேர்டு எளிதில் யூகிக்கும் வகையிலேயே உள்ளது. அதிலும் பெரும்பாலனவர்கள் 123456 என்ற பாஸ்வேர்டையே பயன்படுத்துவது தெரியவந்துள்ளது.
ஸ்பலாஷ் டேட்டா என்ற இணைவழி பாதுகாப்பு நிறுவனம் ஆண்டுதோறும் இணையப் பாதுகாப்பு தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதில், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உலகில் இணையதளத்தை பயன்படுத்துவோர் '123456' அல்லது ஆங்கிலத்தில் password என்பதையையே பாஸ்வேர்டாக பயன்படுத்தி வந்துள்ளது தெரியவந்தது.
சில இணையங்களில் 8 எழுத்துக்களுக்கு மேல் பாஸ்வேர்ட் இருக்க வேண்டும் என அறிவுறுத்திய நிலையில், பலர் 12345678 என்பதை பயன்படுத்தியுள்ளனர்.
கணினி உள்ளீடு பலகையில் உள்ள மேல் வரிசை ஆங்கில எழுத்துக்களான qwerty என்ற வார்த்தையும் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுதவிர கீ போர்டின் மேலிருந்து கீழ் வரிசையில்'1qaz2wsx', நேர் வரிசையில் 'qwertyuiop' வார்த்தையும் பலர் பயன்படுத்தியுள்ளனர்.
எண்களையும் எழுத்துளையும் சேர்ந்து பயன்படுத்தினால் எளிதில் யூகிக்க முடியாது என பலர் கருதுகின்றனர். அது தவறு. தொடர்ந்து பயன்படுத்தும் குறிப்பிட்ட முறையைக் கொண்டு 'ஹேக்கர்கள்' எனப்படும் தகவல்களை திருடுபவர்களில் பாஸ்வேர்டுகளை எளிதில் கைப்பற்றிவிடுகின்றனர்.
இணையதளங்களில் பலர் தங்களுக்கு பிடித்த விளையாட்டு வீரர், இசையமைப்பாளர்கள் பெயரை பயன்படுத்துகின்றனர். இதுவும் ஒரு தவறான முறையாகும் என ஸ்பலாஷ் டேட்டா முதன்மை செயலர் மோர்கன் சலைன் கூறினார்.
பாஸ்வேர்டுகள் திருடப்படுவதை கவனத்தில் கொண்டு சில இணையதளங்கள் விரல்ரேகையை பதிவு செய்யும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். சிலர் முகம் மற்றும் கருவிழி படலங்களை பதிவு செய்யும் முறையையும் தொடங்கியுள்ளனர்.
பெரும்பாலன நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணுக்கு குறிப்பிட்ட எண்ணை அனுப்பி, அதை இணையதளத்தில் பதிவு செய்ய கூறுகின்றனர்.