'1100' குறைதீர் சேவையை தொடங்கி வைத்தார் ஜெயலலிதா


பொதுமக்கள் தங்கள் குறைகளை தொலைபேசியில் தெரிவித்து தீர்வு காணும் வகையில், கட்டணமில்லா தொலைபேசி எண் ‘1100’ உடன் ‘ அம்மா அழைப்பு’ மையச் சேவைகளை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஏழை மக்களும், சாமானியர்களும் அரசுக்கு தங்கள் குறைகளை தெரிவித்து உரிய தீர்வு பெறும் நோக்கத்துடன் முதல்வரின் தனிப்பிரிவு இயங்கி வருகிறது. இப்பிரிவின் மூலம் நேரடியாகவும், அஞ்சல் மூலமும் முதல்வர் தனிப்பிரிவு வலைதளம் மூலமாகவும், பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, மனுதாரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குறைகளை விரைந்து பெற்று, அவற்றை களைந்திடும் வகையில் கணினி வழி தொலைபேசி அழைப்பு ஒருங்கிணைத்தல் (கம்ப்யூட்டர் டெலிபோனி இன்டராகேசன்) , குரல் பதிவு மற்றும் பிரித்தறிதல் (வாய்ஸ் லாகர் சிஸ்டம்) போன்ற புதிய தகவல் தொழில்நுட்ப வசதிகளுடன், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் ‘1100’ மூலம் எங்கிருந்தும், எப்போதும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் ‘ அம்மா அழைப்பு மையம் ’ அமைக்கப்பட்டுள்ளது.இந்த அழைப்பு மையச் சேவைகளை, முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் இருந்த படியே காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.முதல்கட்டமாக நாளொன்றுக்கு 15 ஆயிரம் அழைப்புக்களை ஏற்கும் வகையில், 138 அழைப்பு ஏற்பாளர்களுடன் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேவைக்கேற்ப அழைப்பு ஏற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

இந்த மையத்தின் மூலம், பொது மக்களிடம் இருந்து அழைப்பு பெறப்பட்டு, அழைப்பவர் விவரம், குறைகள் ஆகியவை கணினியில் பதியப்படும். பின், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு மின்னஞ்சல், தொலைபேசி மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பி வைக்கப்படும். அதுமட்டுமின்றி எந்த துறையின் எந்த அதிகாரிக்கு அவரது குறைகள் குறித்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவல் அழைத்தவருக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும். மேலும், அவரது குறை தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரமும் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி