சென்னை : ஒரே நேரத்தில் 108 குழந்தைகளின் பெயரில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் செலுத்தி செல்வ மகள் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது.
செல்வமகள் சேமிப்பு கணக்கு
தபால் துறை சார்பில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ‘செல்வமகள் சேமிப்பு திட்டம்’ என்ற சேமிப்பு கணக்கு திட்டம் தொடங்கப்பட்டது. பெண் குழந்தைகளின் பிறந்த நாள் முதல் சேமிக்கும் வழக்கம் கொண்ட பெற்றோர்கள் பலர் இந்த திட்டத்தில் சேர்ந்தனர். குறிப்பாக சென்னை நகர மண்டலத்தில் இதுவரை 4 லட்சத்து 25 ஆயிரம் கணக்குகள் தொடங்கப்பட்டதன் மூலம், இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ளோரும் தமது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு இத்திட்டத்தில் சேர விரும்புகின்றனர். ஆனால் கணக்கு தொடங்க ஆயிரம் ரூபாய் செலுத்துவது என்பது ஒரு பெரிய விஷயமாக அவர்களுக்கு உள்ளது.
108 குழந்தைகளுக்கு...
இப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள பெருமாட்டுநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ரவிகுமார், 108 பெண் குழந்தைகளின் பெயரில் தலா ஆயிரம் ரூபாய் வீதம், ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் தொகையை தன்னார்வத்துடன் முன்வந்து தபால் அலுவலகத்தில் செலுத்தி செல்வமகள் சேமிப்புக் கணக்கு தொடங்கி உள்ளார். 21 ஆண்டுகளுக்கு பிறகு அல்லது திருமணத்திற்குப் பிறகு கணக்கை முடித்துக் கொள்ளலாம்.
இவருடைய சேவையை பாராட்டி, அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடிதமும் எழுதப்பட்டுள்ளது. இதே போன்று பெண் குழந்தைகளின் நலனுக்காக செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ரவிகுமாரை, தொடர்ந்து, இந்த உன்னத பணியை மேற்கொண்டு மேலும் பல பெண் குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்ற முன்வர வேண்டும்.
மேற்கண்ட தகவலை சென்னை நகர மண்டல தபால் துறை தலைவர் மெர்வின் அலெக்சாண்டர் கூறினார்.
Source : http://www.dailythanthi.com/