1 மாதம் வானில் அதிசயம்: ஒரே நேர்க்கோட்டில் 5 கிரகங்கள்

சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய 5 கிரகங்களும் இப்போது ஒரே நேர்க்கோட்டில் வருகின்றன. இந்த அரிய நிகழ்வு பிப்ரவரி 20-ம் தேதி வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

சூரியனை சுற்றி வரும் கிரகங்களின் வேகம், காலம் ஆகியவை மாறுபடுகின்றன. இப்படி கிரகங்கள் சூரியனை சுற்றி வரும்போது எப்போதாவது அரிதாக சில கிரகங்கள் அருகருகே வருகின்றன. இது போன்ற அரிய நிகழ்வுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

இதுபோன்ற அரிய நிகழ்வு 10 ஆண்டுகளுக்கு முன் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2005-ம் ஆண்டு ஜனவரி வரை ஏற்பட்டது. இப்போது மீண்டும் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற 5 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் வரும் நிகழ்வு மீண்டும் வரும் ஜூலை இறுதியில் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், புதன் கிரகத்தையும் வெள்ளி கிரகத்தையும் அப்போது எளிதாக பார்க்க முடியாது என்று நாசா கூறியுள்ளது.

தற்போது 5 கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் வருவது குறித்து நாசா கூறும்போது, ‘‘வானம் மேகமூட்டமாக இல்லாமல் தெளிவாக இருந்தால், பிப்.20 வரை ஒவ்வொரு நாள் மாலையும் வியாழன் கிரகத்தை முதலில் பார்க்கலாம். அதன்பின் நள்ளிரவில் செவ்வாய் கிரகம் தோன்றும். அதைத்தொடர்ந்து சனி, வெள்ளி, புதன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதை காணலாம்’’ என்று கூறியுள்ளது.

இந்த 5 கிரகங்களையும் வானில் தென்கிழக்கில் இருந்து தென்மேற்கு திசையில் வெறும் கண்களால் பார்க்க முடியும். இதற்கிடையில், ஜனவரி 23 முதல் பிப்ரவரி 7-ம் தேதி வரை 5 கிரகங்களுடன் பூமியின் நிலவும் சேர்ந்து ஒரே நேர்க்கோட்டில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, மேற்கு - வடமேற்கில் இருந்து கிழக்கு - தென்கிழக்கு திசையில் இந்த அரிய நிகழ்வை காணலாம்.


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி