மத்திய தகவல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு காத்திருப்பதாக, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்கள் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை, மத்திய தகவல் ஆணையம் விசாரிக்கிறது
இதில், 10 ஆணையர் பணியிடங்கள் உள்ளன.அதில், தற்போது மூன்று ஆணையர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றையும், தலைமை தகவல் ஆணையர் பணியிடத்தையும் நிரப்ப, 2014ல், மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை, ஊடகங்களில் விளம்பரம் செய்தது. இதையடுத்து வந்த, 553 விண்ணப்பங்களை பரிசீலிக்காமல், சென்ற செப்டம்பரில், மீண்டும், அதே பணியிடங்களை நிரப்ப, விளம்பரம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், ஏற்கனவே வந்த, 553 விண்ணப்பங்களில், தகுதியானவர்களை தேர்வு செய்து, தலைமை தகவல் ஆணையர் மற்றும் தகவல் ஆணையர்களை, ஆறு வாரங்களுக்குள் நியமிக்கும்படி, டில்லி ஐகோர்ட், சென்ற மாதம் உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு மீது, ஜனவரி, 6ல், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூற உள்ளது. அதுவரை, தகவல் ஆணையர்கள் நியமனத்தில், பொறுமை காக்க, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை முடிவு செய்துள்ளது.இதனிடையே, டிச., 16ல், முன்னாள் பாதுகாப்பு துறை செயலர், ஆர்.கே.மாத்துார், தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவரை, பிரதமர் மோடி தலைமையிலான குழு தேர்வு செய்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பியது. வழக்கமாக, மிகவும் மூத்த தகவல் ஆணையர் தான், தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்படுவது வழக்கம். இந்த மரபு மீறப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.