நாட்டிலுள்ள அனைத்து மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்; மத்திய அரசு

           நாட்டிலுள்ள அனைத்து மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 133 மாணவர்கள் நாட்டிலேயே முதல் முறையாக நாடாளுமன்ற வளாகத்தில் கௌரவிக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தில் திருக்குறள் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 133 மாணவர்களும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன் திருக்குறளை ஒப்புவித்தனர்.

பின்னர் நாடாளுமன்ற வளாகத்தை ஒட்டியுள்ள அரங்கில் 133 மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேசிய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி 26 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்க்கப்படும் என்று கூறினார்.

பிறந்த பூமியையும், மொழியையும் தாயை போல குழந்தைகள் போற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு தெரிவித்தார். திருவள்ளுவர் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் ஜோ டி குரூஸ் உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவைத் துணைத் தலைவர் குரியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ராஜா, டி.கே. ராஜா, கனிமொழி, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி