மின் பயன்பாட்டை கணக்கிட நவீன மீட்டர்.

மின் பயன்பாட்டில் முறைகேட்டை தடுக்க, ஏ.எம்.ஐ., என்ற அதி நவீன மின் பயன்பாடு அளவை கணக்கிடும் மீட்டர் பொருத்த, தமிழ்நாடு மின் வாரியம் முடிவு செய்துள்ளது. வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் என, எல்லா மின் நுகர்வோர்களிடமும் இந்த புதிய மீட்டர் மூலம் மின் பயன்பாடு அளவு கணக்கிடப்பட உள்ளது. 

தமிழ்நாடு மின் வாரியம், வீடுகளில், இரண்டு மாதங்களுக்கு, ஒரு முறை மின் பயன்பாடு கணக்கு எடுக்கிறது. வீடுகளில், 500 யூனிட் கீழ் மின்சாரம் பயன்படுத்தினால், தமிழக அரசு மானியம் வழங்குகிறது. 500 யூனிட் மேல் பயன்படுத்தினால், முழு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.சில ஊழியர்கள், வீடு, வணிக நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, மின் பயன்பாட்டை குறைத்து எழுதுவதாக கூறப்படுகிறது. இதனால், மின் வாரியத்திற்கு,பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

கணக்கு:

இதை தவிர்க்க, தற்போது வீடுகளுக்கு, 'ஸ்டேடிக்' என்ற நவீன மீட்டர் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த மீட்டரில், மின் பயன்பாடு தவிர்த்து, உச்ச மின் தேவை, முந்தைய பயன்பாடு உள்ளிட்ட விவரங்களும் பதிவாகும். இந்த மீட்டருக்கும், ஊழியர்கள், நேரடியாக சென்று மின் பயன்பாட்டை கணக்கு எடுக்கின்றனர்.இந்நிலையில், அலுவலகத்தில் இருந்தபடியே, மின் பயன்பாட்டை கணக்கிட கூடிய, ஏ.எம்.ஐ., என்ற, 'அட்வான்ஸ்டு மீட்டரிங் இன்ப்ராஸ்ட்ரக்சர்' என்ற அதிநவீன மீட்டர் பொருத்த, மின் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏ.எம்.ஐ., மீட்டர், 'சிம் கார்டு' அல்லது, 'ரேடியோ பிரிக்யூவன்சி' என்ற தொலைதொடர்பு வசதி மூலம்,பிரிவு அலுவலக கம்ப்யூட்டர் மற்றும் தலைமை அலுவலக, 'சர்வருடன்' இணைக்கப்படும். இதனால், ஊழியர்கள் வீடுகளுக்கு சென்று, மீட்டர் பார்த்து, மின் பயன்பாட்டை கணக்கிட வேண்டியதில்லை. மின் பயன்பாடு கணக்கு எடுக்க வேண்டிய தேதி குறித்த, மென்பொருளை தயாரித்து, மீட்டரில் பதிவு செய்தால் போதும்.பின், தொலைதொடர்பு மூலம், அலுவலகத்தில் இருந்து, மின் பயன்பாட்டை கணக்கிடலாம். அந்த விவரத்தை, எஸ்.எம்.எஸ்., மூலம், மின் நுகர்வோருக்கு தெரிவிக்கப்படும். இந்த மீட்டரில், மின் இணைப்பிற்கு வாங்கிய அளவை விட கூடுதல் மின்சாரம் பயன்படுத்தினால், உடனே கண்டுபிடிக்கலாம். மின் பயன்பாட்டை மாற்ற முடியாது.

துண்டிப்பு:

குறிப்பிட்ட தேதியில், மின் கட்டணம் செலுத்தாவிட்டால், மின் இணைப்பை துண்டிக்க முடியும். அவ்வப் போது பயன்படுத்தும் மின்சாரம், நேரம் உள்ளிட்ட அனைத்து விவரமும் பதிவாகும்.சென்னை, புதுப்பேட்டையில் உள்ள, சில வீடுகளில், ஏற்கனவே உள்ள மீட்டரின் அருகில், ஏ.எம்.ஐ., மீட்டர் ஆய்விற்காக பொருத்தப்பட்டு உள்ளது. ஏ.எம்.ஐ., மீட்டரில் பதிவாகும் விவரம், தனியார் நிறுவன சர்வரில் கண்காணிக்கப்படுகிறது. தற்போது சோதனை முறையில், ஆய்வு செய்யப்படும் ஏ.எம்.ஐ., மீட்டர் திட்டத்தை, தமிழகம் முழுவதும் செயல்படுத்த, இரண்டு ஆண்டுகள் ஆகலாம். தற்போது உள்ள, 'ஸ்டேடிக்' மீட்டரிலும், ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கிடும் வசதியை ஏற்படுத்த முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி