அரசு பள்ளியில் புதுமையான நவீன திட்டங்களை அமல்படுத்திய திருவண்ணாமலை சிஇஓவுக்கு, டெல்லியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதிராணி கேடயம் வழங்கி கவுரவித்தார். இந்தியா முழுவதும் கல்வித்துறையில் ஆற்றிய நிர்வாக பணியை பாராட்டி கல்வியில் புதுமை மற்றும் சிறந்த நிர்வாகி என தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகத்தால் கல்வித்துறை அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். அதன்படி 2015ம் ஆண்டிற்கு இந்தியா முழுவதும் கல்வித்துறையில் சிறப்பாக நிர்வாக பணிஆற்றிய 58 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதில் இந்த ஆண்டு முதன்முறையாக தமிழகத்தில் திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் இடம்பிடித்துள்ளன. இந்த இரு மாவட்ட சிஇஓக்களும் கல்வித்துறையில் ஆற்றிய நிர்வாக பணியை பாராட்டி கல்வியில் புதுமை மற்றும் சிறந்த நிர்வாகி என தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகத்தால் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தேர்வு செய்யப்பட்ட திருவண்ணாமலை மாவட்ட சிஇஓ பொன்குமாருக்கு டெல்லியில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற விழாவில் கல்வியில் புதுமை சிறந்த நிர்வாகிக்கான 2015ம் ஆண்டிற்கான தேசிய விருதினை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதிராணி வழங்கி கவுரவித்தார். அதேபோல் காஞ்சிபுரம் மாவட்ட சிஇஓ உஷாவுக்கும் விருது வழங்கப்பட்டது.