நீருக்குள் நிற்கும் தேவாலயம்

புனித ஜெபமாலை தேவாலயம், மழைக்காலங்களில் முழுமையாக ஹேமாவதி ஆற்றுக்குள் மூழ்கிவிடும். கோடைகாலத்தில் இரண்டு, மூன்று மாதங்கள் மட்டும் வெளியே தெரியும். அப்போது இந்த ஆலயத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்தால், மீண்டும் நீரில் மூழ்கி அடுத்த முறை தேவாலயம் வெளியில் தெரிவதற்குள் பிரார்த்தனை நிறைவேறும்!’புனித ரோசரி சர்ச் பற்றிய சுருக்கமான, சுவாரஸ்யமான குறிப்பு இது!

கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள செட்டிஹள்ளி என்ற இடத்தில் ஹேமாவதி ஆற்றுக்குள் மூழ்கிய நிலையில் இருக்கிறது புனித ரோசரி சர்ச். இந்தியாவில் மூழ்கிய நிலையில் இருக்கும் தேவாலயங்களில் மிகவும் நேர்த்தியாகவும், எழிலுடனும் காட்சி அளிக்கக்கூடியது இத்தேவாலயம். குறிப்பாக, நீர் சற்றுக் குறைந்து ஆலயம் பாதியளவு வெளியில் தெரியும்போது, ஆற்றுக்குள் கம்பீரமான ஒரு கப்பல் மூழ்கி இருக்கும் தோரணையில் கண்களைக் கொள்ளைகொள்ளும்.


மைசூரில் இருந்து மூன்று மணி நேரத்தில், 135 கிலோ மீட்டரில் அமைந்துள்ள செட்டிஹள்ளிக்கு பேருந்தில் பயணிக்கலாம். சாலைகள் மிக நேர்த்தியாக இருப்பதுடன் 24 மணி நேர பேருந்து வசதியும் உண்டு. ஆனால், செட்டிஹள்ளியில் இருந்து புதர்கள் நிறைந்த ஒற்றைப் பாதையில் ஆற்றுக்குள் இறங்கிதான் தேவாலயத்துக்குள் செல்ல முடியும். அதுவும் கோடைகாலத்தில் குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஹேமாவதி அணையில் தண்ணீர் வற்றி இருந்தால் மட்டுமே தேவாலயத்துக்குள் பிரவேசிக்க முடியும்.

இந்த புனித ரோசரி சர்ச், ஃபிரான்ஸ் மிஷனரியைச் சேர்ந்த அப்பே ஜீன் அன்டுனே டுபாய்ஸ் என்பவரால் கட்டப்பட்டது. இவர் 1765-ல் பிறந்தவர். தெற்கு ஃபிரான்ஸில் உள்ள விவிர்ஸ் மாவட்டத்தில் 1792-ல் மதபோதகராக முடிசூட்டப்பட்டவர். அதே ஆண்டு ஃபிரெஞ்சுப் புரட்சிக்குப் பிறகு படுகொலைகள் நடைபெற்றதையடுத்து, டுபாய்ஸ் இந்தியாவுக்கு வந்தார். இந்தியாவில் முதன்முதலில் ரோமன் கத்தோலிக்க மிஷனரியில் வெளிவிவகார வேலைகளை பாண்டிச்சேரி மிஷனரியில் இருந்து பணியாற்றினார்.1799-ம் ஆண்டு மைசூர் அருகே உள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்துக்குச் சென்ற டுபாய்ஸ் அந்த மக்களின் நடை, உடை, பாவனைகளை கூர்ந்து கவனித்து அவர்களைப் போலவே நடக்க ஆரம்பித்ததோடு, இந்திய மக்களின் பழக்கவழக்கங்கள், கலாசாரம் மற்றும் அவர்களின் மத, சமூக அமைப்புகளைப் பற்றி விளக்கமாக 1817-ம் ஆண்டு புத்தகமாக வெளியிட்டார். அந்தக் காலகட்டத்தில் இந்தப் புத்தகம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. டுபாய்ஸின் உட்சபட்ச சேவைதான், புனித ரோசரி சர்ச்!

செட்டிஹள்ளி தேவாலயம் மிகப் பெரிய கட்டடங்களால் கட்டப்பட்டு, அலங்காரப்படுத்தப்பட்டது. தேவாலயத்தை ஒட்டி மகளிர் பயிலும் கான்வென்ட், செட்டிஹள்ளியில் உள்ள ஏழை மக்களுக்கு மருத்துவம் செய்ய மருத்துவமனையும் இருந்தது. இப்படி செட்டிஹள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் மக்களுக்கு சேவை செய்து வந்தது இந்த தேவாலயம்.

செட்டிஹள்ளி வழியாக ஓடிய ஹேமாவதி ஆற்றிலிருந்து அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், இந்திய அரசு 1979-ம் ஆண்டு இந்தப் பகுதியில் அணை கட்ட முடிவெடுத்தது. கோரூர் அணை கட்ட செட்டிஹள்ளி பகுதி தேர்வானது. இங்கு வசித்த மக்கள் அர்கல்குட்டு அருகே உள்ள மரியாநகர், சென்னராயப்பட்னா அருகே உள்ள அல்போன்ஷாநகர், ஹாசன் தாலுகாவில் உள்ள ஜோசப்நகர் போன்ற பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்கள். அணையின் நீர்மட்டம் உயர உயர இந்த அழகிய செட்டிஹள்ளி கிராமம் வடிவிழந்து போனது. புனித ரோசரி தேவாலயமும் நீரில் மூழ்கியது.

தேவாலயத்தின் மேற்கூரை 1982-ல் முழுமையாக சேதம் அடைந்து கீழே விழுந்தது. ஆனால், அதன் நீண்ட கோபுரங்களும், கோயிலின் தோற்றமும் இன்னும் அப்படியே கம்பீரமாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. மழைக்காலங்களில் முழுமையாக நீரில் மூழ்கி விடும். வறட்சி காலங்களில் ரெண்டு, மூன்று மாதங்கள் மட்டும் வெளியே தெரியும்.தேவாலயத்தின் நுழைவாயில் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது; தேவாலயம் கிழக்குப் புறம் பார்த்திருக்கிறது; தேவாலயத்தின் உள்ளே மேற்குப் பார்த்த மாதிரி கட்டடங்கள் இருக்கின்றன. எல்லா சுவர்களும் தெற்குப் பக்கத்தில் உள்ள நுழைவாயிலில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரியான கட்டட அமைப்புகளைக் காண்பது அரிது என்கிறார்கள் தேவாலயத்தை பார்வையிடும் கட்டடக்கலை வல்லுநர்கள். இத்தேவாலயம் முட்டையும், வெல்லமும் கலந்து கட்டப்பட்டதாக அருகில் இருந்த கிராமத்து முதியவர்கள் சொல்கிறார்கள். அதை உதாசீனப்படுத்த முடியாது. ஏனென்றால், லக்னோவில் உள்ள புகழ்பெற்ற கட்டடமான படா இம்மாம்பரா கட்டடத்தில் அரேபிய கோந்தும், பருப்பும் கலந்த கலவை பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

திரைப்படக் குழுவினர் படப்பிடிப்பு நடத்தி வரும் இடமாகவும் இருக்கும் இந்த தேவாலயத்தின் உள்ளே செல்ல படகு வசதிகளும் உண்டு. மூன்று தலைமுறைகள் கடந்தும், நீரினுள்ளும் உறுதியாக நிற்கும் இந்த புனித ரோசரி தேவாலயத்துக்கு மதங்களைக் கடந்து வருகிறார்கள் மக்கள். திறந்தவெளி நீரோடைகள், மரங்கள், பறவைகள் சூழ்ந்த ஆலயத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யும்போது உணரப்படும் அதிர்வலைகள், ஆன்மாவை ஊடுருவுகின்றன. அடுத்த முறை இவ்வாலயம் வெளியில் தெரிவதற்குள் அந்தப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் கருணையுடன் மிளிர்கிறது சிலுவை!

கோடைகாலத்தில் கர்நாடகம் சென்றால், அனுபவித்து வரலாம் அந்த அருளை!

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி