ஏர் இந்தியாவின் குறைந்த தூர விமானங்களில் இனி அசைவ உணவு கிடையாது

ஜனவரி 1 2016 முதல் ஏர் இந்தியாவின் குறைந்த தூர பயண விமானங்களில் எகானமி வகுப்பில் பயணிப்பவர்களுக்கு அசைவ உணவு வழங்கப்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதேபோல் மதிய உணவு மற்றும் இரவு உணவுப் பட்டியலில் இருந்து டீ, காபியையும் நீக்க ஏர் இந்தியா நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது 90 நிமிடங்கள் பயண தூரம் கொண்ட அனைத்து ஏர் இந்தியா விமானங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 61 நிமிடங்கள் முதல் 90 நிமிடங்கள் வரை பயணிக்கு அனைத்து ஏர் இந்தியாவின் விமானங்களில் தற்போது சைவ மற்றும் அசைவ சான்ட்விச்கள் சிற்றுண்டியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் ஜனவரி 1 முதல் இதற்குப் பதிலாக சூடான சைவ உணவு வழங்கப்படும் என ஏர் இந்தியாவின் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மெட்ரோ சிட்டி எனப்படும் பெருநகரங்கள் நீங்களாக மற்ற வழித்தடங்களில் செல்லும் ஏர் இந்தியா விமானங்களில் இந்த நடைமுறை அமலாகிறது.

இது குறித்து ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "இதுநாள் வரை வெறும் கேக், சான்ட்விச் மட்டுமே வழங்கி வந்தோம் இனிமேல் சூடான சைவ உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம். இது, விமானத்தில் வழங்கப்படும் உணவை தரம் மேம்படுத்தும் நடவடிக்கையே.


அதுமட்டுமல்லாது 150 பயணிகள் செல்லும் இத்தகையை உள்நாட்டு விமானத்தில் வெறும் 60 முதல் 90 நிமிடங்களுக்குள் பயணிகளை விருப்பத்துக்கு ஏற்ப சைவ, அசைவ உணவை வழங்குவதில் நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. 2 சிப்பந்திகள் மட்டுமே இந்த வேலையை செய்ய வேண்டி இருப்பதால் பணிச்சுமை இருக்கிறது. எனவே, சான்ட்விச் உணவுகளுக்குப் பதிலாக சூடான சைவ உணவு வழங்கத் திட்டமிட்டிருக்கிறோம்.
இதுகுறித்து எர் இந்தியா பயணிகளின் கருத்து கண்டறியப்பட்டு அதற்கேற்ப அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளையில் 90 நிமிடங்களுக்கு மேலான பயண தூரம் கொண்ட விமானங்களில் சைவ, அசைவ உணவு வகைகள் பயணிகள் விருப்பத்துக்கு ஏற்ப வழங்கப்படும்" என்றார்.
இந்த நடவடிக்கையை உணவுத்தர மேம்பாட்டு நடவடிக்கை என ஏர் இந்தியா வரவேற்றிருந்தாலும், இது சார்பு முடிவு என போக்குவரத்து துறையினர் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.ஒமர் அப்துல்லா கேள்வி:
ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் அசைவ உணவு கிடையாது அறிவிப்பு குறித்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்புக்குப் பின்னால் உள்ள தர்க்கம் என்னவென்று புரியவில்லை. அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டுகிறேன்" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி