தமிழகத்தில் முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கூகுளின் இலவச வை-பை பெற இருக்கின்றது. கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை தமிழகத்தில் மொத்தம் ஆறு ரயில் நிலையங்களை தேர்வு செய்திருக்கின்றார். அதன் படி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இலவச வை-பை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்டெல் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மொத்தம் 100 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வழங்க கூகுள் நிறுவனம் மற்றும் ரயில்டெல் நிறுவனங்களிடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செப்டம்பர் 2014 முதல் வை-பை சேவை சோதனை செய்யப்பட்டு வருவதால் மார்ச் 2016 முதல் அதிவேக இண்டர்நெட் இணைப்பு வழங்க முடியும் என கூறப்படுகின்றதுசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை தொடர்ந்து எழும்பூர், அரக்கோணம், கோயம்பத்தூர், மதுரை மற்றும் திருச்சி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இலவச வை-பை வழங்கப்பட இருப்பதாக ரயில்டெல் நிறுவனத்தை சேர்ந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் இந்தியா வந்திருந்த சுந்தர் பிச்சை இந்தியாவில் 2016 ஆம் ஆண்டின் இறுதிக்குள் சுமார் 100 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வழங்கப்பட்டு விடும் என தெரிவித்திருந்தார். கூகுளின் இலவச வை-பை திட்டம் இந்தியாவில் முதல் முறையாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஜனவரி மாதம் முதல் துவங்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.