இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கும் மத்திய அரசின் புதியன தொடங்குவோம் திட்டம்: ஜனவரி 16–ந் தேதி அறிமுகம்

இந்தியாவில் புதியன தொடங்குவோம், எழுந்து நிற்போம்’ திட்டம் ஜனவரி மாதம் 16–ந் தேதி தொடங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி பதவி ஏற்றதில் இருந்து மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மனதில் உள்ளதை பேசுகிறேன்’ (மன் கி பாத்) என்றதலைப்பில் வானொலியில் உரையாற்றி வருகிறார். அப்போது நேயர்களின் கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கிறார்.


இந்த ஆண்டின் கடைசி ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நேற்று அவர் வானொலியில் 20 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது மோடி கூறியதாவது: 
வரும் புத்தாண்டு உங்களுக்கு மகிழ்ச்சி, புதிய நம்பிக்கை, உற்சாகம், வளர்ச்சி ஆகியவற்றை அளிக்கும் ஆண்டாக இருக்கட்டும். தீவிரவாதம், பூமி வெப்பமயமாதல், இயற்கை மற்றும் மனிதர்களால் உருவாக்கப்படும் செயற்கை பேரழிவுகள் இல்லாத ஆண்டாகவும் அமையட்டும். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது ‘இந்தியாவில் புதியன தொடங்குவோம், எழுந்து நிற்போம்’ (‘ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா’) என்ற திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்து இருந்தேன். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெருக்கும் இந்த திட்டம் தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது. ஜனவரி மாதம் 16–ந்தேதி இத்திட்டத்தை மத்திய அரசு முழு உத்வேகத்துடன் தொடங்கும்.

சமூகத்தின் பின்தங்கிய நிலையில் இருக்கும் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கு இத்திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த இளம் தொழில் முனைவோரும் புதுமை சிந்தனைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அரிய வாய்ப்புகளை புதியன தொடங்குவோம் திட்டத்தில் பெற இயலும். உற்பத்தி துறை, சேவைத்துறைஅல்லது விவசாயத்துறை என எந்த துறையில் வேண்டும் என்றாலும் அவற்றில் புதிய சிந்தனைகளும், புதிய வழிகாட்டுதல்களும், புத்தாக்கமும் இருக்கவேண்டும். 

ஏனெனில் புதுமை சிந்தனைகள் இல்லாமல் இந்த உலகம் முன்னேற முடியாது.அனைத்து மாநில அரசுகளும் இத்திட்டத்தை நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் கொண்டு போய் சேர்க்கவேண்டும். இந்த திட்டம் நகர்ப்புறத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல. திறமையை வெளிக்காட்டும் அனைத்து பகுதி இளைஞர்களுக்கு உரியதாகவும் இருக்கும்.

இத்திட்டமானது, நாட்டில் உள்ள ஐ.ஐ.டி. ஐ.ஐ.எம்., மத்திய பல்கலைக்கழகங்கள், தேசிய தகவல் தொழில்நுட்ப கல்வி மையங்களுடன் இணைக்கப்படும்.புதிய தொழில்கள் தொடங்குவது, தொழில் முனைவதை ஊக்கப்படுத்துவது, வேலை வாய்ப்பை உருவாக்குவது ஆகியவற்றில் வங்கி கடன் அளிப்பதையும் இத்திட்டம் லட்சியமாக கொண்டு உள்ளது. ஜனவரி 16–ம் தேதியன்று இது தொடர்பான விரிவான பிரசாரத்தை உங்கள் முன்பாக வைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி