ஆதிதிராவிடர்,பழங்குடியின மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தில் மத்திய அரசின் நிலுவைத்தொகையான ரூ. ஆயிரத்து 549 கோடியே 76 லட்சத்தை உடனடியாக தமிழகத்துக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் எழுதிய கடிதத்தில், ''ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் வகையில், மத்திய அரசின் உயர்கல்வி உதவித்தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது
இத்திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் 100 சதவீதம் மத்திய அரசின் உதவி கிடைக்கிறது. இந்த 2015-16ம் ஆண்டில் தமிழகம் ரூ. ஆயிரத்து 295 கோடியே 55 லட்சத்தை உயர்கல்வி உதவித்தொகைக்காக செலவழித்துள்ளது. இதில், ரூ.942 கோடி மத்திய அரசின் பங்காகும். கடந்த 2014-15ம் ஆண்டுகளில் ரூ.ஆயிரத்து 175 கோடியே 10 லட்சம் ரூபாயை ஏற்கனவே மத்திய அரசு வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இந்தாண்டில் மொத்தம் விடுவிக்க வேண்டிய ரூ. ஆயிரத்து 549 கோடியே 76 லட்சத்தில், இதுவரை, ரூ.567 கோடியே 34 லட்சம் ரூபாய் மட்டுமே தமிழகத்துக்கு விடுவித்துள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்துக்கு நிலுவைத் தொகையை வழங்குமாறு கோரப்பட்டது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் போதுமான ஒதுக்கீடு இல்லாததால் தமிழகத்துக்கான நிலுவைத் தொகையை வழங்கமுடியவில்லை என கூறிவிட்டனர்.
இந்த உதவித்தொகையை பெறும் மாணவர்கள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது படிப்பை தொடர கல்வி உதவித்தொகையை உரிய நேரத்தில் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மத்தியில் இத்திட்டம் குறித்த நம்பகத்தன்மை போய்விடும். நலிவடைந்த மாணவர்கள் தங்கள் வாழ்வில் முன்னேற இக்கல்வி உதவித்தொகை மிகவும் முக்கியமானதாகும்.
திட்டத்தின் அவசியத்தை உணர்ந்து, தாங்கள் நேரடியாக தலையிட்டு நிலுவையில் உள்ள மத்திய அரசின் பங்கான 2014-15க்கு ரூ. 677 கோடியே 76 லட்சம், 2015-16க்கு ரூ.942 கோடி என ரூ. ஆயிரத்து 549 கோடியே 76 லட்சத்தை தமிழகத்துக்கு வழங்க, மத்திய சமூக நீதி அமைச்சகத்துக்கு தேவையான நிதியை ஒதுக்கும்படி மத்திய நிதித்துறைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று ஜெயலலிதா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.