ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருமானம்: மானிய 'சிலிண்டர்' ரத்து

ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் உடையவர்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு வழங்குவது அடுத்த மாதம் முதல் ரத்து செய்யப்படுகிறது. இதுதொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்ட அறிவிப்பு:வீடு ஒன்றுக்கு ஆண்டுக்கு 12 சமையல் எரிவாயு உருளைகள் மானிய விலையில், ரூ. 419.26க்கு தற்போது வழங்கப்படுகின்றன. அதன் சந்தை விலை ரூ.608 ஆகும்.

நாட்டில் தற்போது 16.35 கோடி எரிவாயு வாடிக்கையாளர்கள் உள்ளனர்.எரிவாயு மானியத்தை நேரடியாக வாடிக்கையாளரின் வங்கி கணக்குக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் தற்போது, 14.78 கோடி பேருக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், சமையல் எரிவாயுக்கு வழங்கும் மானியத்தால் ஏற்படும் நிதிச்சுமையை குறைக்கும் வகையில், வசதி படைத்தவர்கள் தங்களது மானியத்தை தாங்களே முன்வந்து விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும், சந்தை விலையில் வாங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார்.

அதையேற்று, 57.5 லட்சம் பேர் சமையல் எரிவாயு உருளைக்கான மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். இந்நிலையில் அதிக வருமானம் உடையோர் சந்தை விலையில் சமையல் எரிவாயு வாங்கலாம் என அரசு கருதுகிறது.இதன்படி கடந்த நிதி ஆண்டில் ரூ. 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி, வருமான வரி செலுத்தியவர்களுக்கு வரும் ஜனவரி மாதம் முதல் எரிவாயு மானியம் வழங்கப்பட மாட்டாது. குடும்பத்தில் கணவன் அல்லது மனைவி யாராவது ஒருவர் 10 லட்சத்துக்கும் அதிகமாக வருமானம் ஈட்டி, வரி செலுத்தியிருந்தாலும் மானியம் ரத்து செய்யப்படும். எனவே, அதிக வருமானம் பெறும் சமையல் எரிவாயு வாடிக்கையாளர்கள் ஜனவரி மாதம், புதிய எரிவாயு உருளைக்கு விண்ணப்பிக்கும் போது, தாங்களாகவே தங்களது வருமானம் குறித்த விவரங்களை தெரிவித்து, மானியத்தை விட்டு கொடுக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி