தமிழ்நாடு மின் வாரியத்தில் உதவியாளர், கணக்கீட்டாளர், பொறியாளர் என, 88 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில், 50 ஆயிரம் ஊழியர்கள், 20 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்தவர்கள்.சிலர், போலி கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்து, பணியில் சேர்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, ஊழியர்கள், தன் பட்டப்படிப்பு மற்றும் மதிப்பெண் சான்றிதழ்களை சமர்ப்பிக்க, உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:மின் வாரியத்தில், யாரேனும் போலி சான்றிதழ் கொடுத்து, சேர்ந்துள்ளனரா என கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக ஊழியர்கள், பொறியாளர்கள், கல்வி சான்றிதழின் நகலை சமர்ப்பிக்க, ஏப்., மாதம் அறிவுறுத்தப்பட்டது; யாரும் வழங்கவில்லை. தற்போது, 42 மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில், சான்றிதழ் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. அவை, எங்கு வழங்கப்பட்டதோ, அங்கு மறு ஆய்விற்கு அனுப்பப்படும். போலி என தெரிந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.