முழுமையான தகவல் தராத அதிகாரிக்கு அபராதம் விதிக்க மாநில தகவல் ஆணையம் உத்தரவு

சென்னை,: 'தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் அனுப்பப்படும் விண்ணப்பங்களுக்கு, குறித்த காலக் கெடுவுக்குள் முழுமையான பதில் அனுப்ப வேண்டும்' என்று, பொது தகவல் அதிகாரிக்கு, மேல்முறையீட்டு அதிகாரி உத்தரவிட வேண்டும் என்றும், அவ்வாறு உரிய காலக்கெடுவுக்குள் முழுமையான பதில் தரத் தவறினால், சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பத்திரிகைகளுக்கு அரசு விளம்பரம் கொடுப்பது தொடர்பாக, உரிய காலக்கெடுவுக்குள் சரியான தகவல்கள் கிடைக்கவில்லையென, மதுரையைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் செய்திருந்த மேல்முறையீட்டை விசாரித்த தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:கடந்த, 2005ம் ஆண்டு, தகவல் உரிமை பெறும் சட்டப்படி, தகவல்கள் கேட்டு, மதுரையைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர், தமிழ்நாடு மேம்பாடு மற்றும் தகவல் துறையின், பொது தகவல் அதிகாரிக்கு, 2014, நவம்பர் 27ல், ஒரு விண்ணப்பம் அனுப்பி இருந்தார். ஆனால், அதற்கு அந்த பொதுத் தகவல் அதிகாரி எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்யப்பட்டது.பின், இந்தாண்டு, ஜன., 12ல், மேல்முறையீட்டு அதிகாரி பதில் அனுப்பி இருக்கிறார். அதிலும், விண்ணப்பதாரர் கேட்ட தகவல்கள் முழுமையாக இல்லை. விண்ணப்பதாரர் கேட்டிருந்த கால அளவுக்கு அல்லாமல் குறைந்த கால அளவுக்கே பொது தகவல் அதிகாரி கொடுத்திருந்த தகவல்களை மேல்முறையீட்டு அதிகாரி, விண்ணப்பதாரருக்கு அனுப்பி இருக்கிறார்.

இருப்பினும், மீதமுள்ள கால அளவுக்கான தகவல்களையும், விண்ணப்பதாரருக்கு அனுப்ப, மேல்முறையீட்டு அதிகாரி தற்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும், விண்ணப்பதாரருக்கு அனுப்ப தவறிய சில தகவல்களையும் அனுப்ப ஒப்புக் கொண்டிருக்கிறார்.இதன் அடிப்படையில், இந்த உத்தரவு கிடைக்கப் பெற்ற 15 நாட்களுக்குள், மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை, விண்ணப்பதாரருக்கு அனுப்பி, அதன் நகலையும், அந்த தகவல்கள் அனுப்பியதற்கான அஞ்சல்துறை ஆதாரம் / அதை விண்ணப்பதாரர் பெற்றுக் கொண்டதற்கானஅத்தாட்சி ஆகியவற்றை ஆணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என, பொது தகவல் அதிகாரிக்கு உத்தரவிடப்படுகிறது.மேலும், இந்த விண்ணப்பத்தைப் பொறுத்தவரை, பொதுத் தகவல் அதிகாரி, மூன்று விஷயங்களில் பதில் தரவில்லை என்பதும், அதற்கு பதில் மேல்முறையீட்டு அதிகாரி தான் விவரங்களைக் கொடுத்திருக்கிறார் என்பதும் ஆணையத்திற்கு தெரிய வந்துள்ளது.

எனவே, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, குறிப்பிடப்பட்ட காலக் கெடுவுக்குள் பதில் அனுப்புமாறு, பொதுத் தகவல் அதிகாரிக்கு மேல்முறையீட்டு அதிகாரி உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் பொதுத் தகவல் அதிகாரி மீது, 2005ம் ஆண்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் பிரிவு 20 -1ன் கீழ், தகவல் அனுப்ப தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும், 250 ரூபாய் வீதம், அதிகபட்சம், 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கவோ அல்லது, 20-2ன் கீழ் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கையோ எடுக்க வேண்டும்.

இவ்வாறு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுஉள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி