அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான நாராயணசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
7–வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல் செய்யும்போது 23.5 சதவீதம் சம்பளம் மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்வு கொடுப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. 6–வது சம்பள கமிஷன் 2006–ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு 30 சதவீதம் காங்கிரஸ்ஆட்சியில் சம்பள உயர்வு அரசு ஊழியர்களுக்கு அதிகம் கொடுக்கப்பட்டது. ஆனால், இப்போது 6.5 சதவீதம் குறைத்து அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு 10 ஆண்டுகளுக்கு பிறகு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைகளின் முழு விவரத்தையும் படித்தால் மத்திய அரசு ஊழியர்களுக்கு எந்த அனுகூலமோ, லாபமோ இல்லை. 6 மாதங்களுக்கு ஒருமுறை அறிவிக்கப்படுகின்ற பஞ்சப்படி உயர்வு என்று இருந்தது. இப்போது ஒரு வருடத்திற்கு ஒருமுறை என்று மாற்றப்பட்டுள்ளது. அதேபோல 20 சதவீதம் மாத வீட்டு வாடகைப்படியாக இருந்தது. இப்போது 2 சதவீதம் குறைக்கப்பட்டு 18 சதவீதம் ஆக ஆக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் வாகனக் கடன்கள், வீடுகளுக்கு கடன் உதவி இவைகளுக்கெல்லாம் வட்டி குறைவு. இப்போது அவைகளுக்கு வங்கி வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு டாக்டர் மன்மோகன் சிங் அரசால் வழங்கப்பட்ட 32 சலுகைகள் முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்களுக்கு பல துறைகள் மருத்துவம், தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கும் இழப்பீட்டு படியும் நீக்கப்பட்டுவிட்டது. அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படுகின்ற கிரேடு பே முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.அடிப்படை சம்பள உயர்வு 2.5 சதவீதம் உயர்த்தியதால் எந்தவித பயனும் இல்லை. அதுமட்டுமல்லாமல் பயணப்படிக்காக கொடுக்கப்படுகின்ற பஞ்சப்படியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
7–வது சம்பள கமிஷனுடைய பரிந்துரைகள் ஒரு கண்கட்டி வித்தையாகும். மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்று வலது கையில் கொடுத்து இடது கையால் திரும்பப் பெறுவது போன்றதாகும்.
நூற்றுக்கணக்கான கடைநிலை மற்றும் இடைநிலை மத்திய அரசு ஊழியர்கள் என்னை நேரடியாக சந்தித்து நரேந்திர மோடி அரசு எங்களைப் பழிவாங்குகிறது என்று புகார் தெரிவித்தார்கள். புதுவை மாநிலத்திலும் 7–வது சம்பள கமிஷன் பரிந்துரை நிறைவேறும்போது அவர்களுக்கும் இதேபோன்ற நிலைதான்.குறைந்தபட்ச சம்பளம் 26 ஆயிரம் ரூபாய் என்று அரசு ஊழியர்கள் தரப்பில் விலைவாசி உயர்வதைக் கணக்கில் கொண்டு வேண்டுகோள் விடுத்தாலும் அதை 7–வது சம்பளக் கமிஷனும், நரேந்திர மோடி அரசும் 18–ஆயிரமாக அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
புதுவை மாநில என்.ஆர் காங்கிரஸ் அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி அனைத்து சலுகையையும் நீக்கப்பட்டதற்கு ஆட்சேபனை தெரிவிக்க வேண்டும்.7–வது சம்பள கமிஷன், புதுவை மாநில அரசு ஊழியர்களுக்கு சாதகமாக அமைய மத்திய அரசுக்கு கடிதம் எழுத வேண்டும்.
7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை நரேந்திர மோடி அரசு ஏற்றுக்கொண்டுள்ளது மத்திய அரசு ஊழியர்களையும், புதுவை மாநில அரசு ஊழியர்களையும் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.