மத்திய அரசின் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளைக் கண்டித்து மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தேசிய அஞ்சல் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நாளை (24-ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தேசிய அஞ்சல் ஊழியர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஏற்புடையதல்ல. அஞ்சல் துறையின் கடைநிலை ஊழியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகள் கழித்து வழங்கப்படும் ஊதிய உயர்வு வெறும் 14.29 சதவீதம் அளவில்தான் உள்ளது. இது ஏற்க முடியாத ஒன்று.
இதனைக் கண்டித்து தமிழக மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மற்றும் தேசிய அஞ்சல் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழக வட்ட தலைமை அஞ்சலக வளாகத்தில் வரும் 24-ம் தேதி (நாளை) கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படவுள்ளது. மேலும், தமிழகத்தின் தலைமை மற்றும் கோட்ட அஞ்சலகங்களின் வாயிலில் வரும் 27-ம் தேதி மாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.