அரசு ஊழியர்களுக்காக போனஸ் உச்ச வரம்பை உயர்த்துவதற்கான புதிய சட்டதிருத்த மசோதாவுக்கு ஒப்புதல்


புதுடெல்லி, அக். 21- : தற்போதுள்ள போனஸ் சட்டம் 1965-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இடையில் இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு போனஸ் பெறுவதற்கான சம்பள உச்ச வரம்பு மாற்றப்பட்டன. கடைசியாக 1993-ம் ஆண்டு உச்சவரம்பு உயர்த்தி மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி தற்போது, அதிகபட்சமாக 3,500 ரூபாய் போனஸ் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. போனஸ் பெறுவதற்கான சம்பள உச்சவரம்பும் 10 ஆயிரம் ரூபாயாகவே உள்ளது.

அதற்கு பிறகு கடந்த 12 ஆண்டுகளாக இந்த சம்பள உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை. இதனால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் போனஸ் பெற முடியாத நிலைமை உள்ளது. இதனையடுத்து போனஸ் தொகையை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும், உச்சவரம்புத் தொகையை உயர்த்த வேண்டுமென்றும் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வந்தன. 

இந்த கோரிக்கையை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 2-ம் தேதி நாடுதழுவிய வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து, மோடி தலைமையிலான தற்போதையை அரசு போனஸ் தொகை உயர்த்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தது.

இந்நிலையில் முன்னர் இருந்த அதிகபட்ச போனஸ் தொகையை 3,500 ரூபாயில் இருந்து 7,500 ரூபாயாக உயர்த்தும் சட்டத்திருத்த மசோதாவிற்கு மத்திய அரசு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், போனஸ் பெறுவதற்கான உச்சவரம்பு சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாயில் இருந்து 21 ஆயிரம் ரூபாயாக மாற்றுவதற்கான சட்டதிருத்தத்திற்கும் ஒப்புதல் அளித்தது. இதன்மூலம் 21 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் அனைவருமே போனஸ் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சட்டத்திருத்த மசோதா வருகிற பாராளுமன்ற அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் மாதம் இறுதியில் நடைபெறவுள்ள நிலையில், அப்போது நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Source : http://www.maalaimalar.com/2015/10/21142609/Cabinet-Approves-Bill-To-Raise.html

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி