அப்துல்கலாமின் பிறந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக பள்ளிக்கூடங்களில் கொண்டாடுங்கள்: பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்து பள்ளிகளுக்கும் முதன்மை கல்வி அதிகாரிகள் வழியாகசுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“இந்தியாவின் ஏவுகணை நாயகன்” என்றும் “இளைஞர்களின் எழுச்சி நாயகன்” என்றும் போற்றப்படும் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15-ந்தேதி “இளைஞர் எழுச்சி நாள்” ஆக ஆண்டுதோறும் கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளார்.அதன்படி அப்துல்கலாமின் பிறந்த தினத்தினை அனைத்து பள்ளிகளிலும் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என அறிவித்துள்ளார். எனவே , அக்டோபர் 15-ந்தேதி அனைத்து பள்ளிகளிலும் கீழ்க்கண்ட அறிவுரைகளின்படி, போட்டிகள் நடத்தப்பட்டு, “இளைஞர் எழுச்சி நாள்” ஆக கொண்டாட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.1 மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களைக் கொண்டு, அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இளைஞர் பேரணி அக்டோபர் 15-ந்தேதி காலை 9 மணியளவில் நடத்த வேண்டும்.2. கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப்போட்டிகளை மாவட்ட அளவில், அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளி, தனியார் நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் (6 முதல் 12 வரை) படிக்கும் மாணவர்களைக் கொண்டு அக்டோபர் 13-ந்தேதி நடத்தப்பட வேண்டும்.இப்போட்டிகளிலிருந்து 6 முதல் 8 வரை உள்ள மாணவர்களில் முதலிடம் பெறும் ஒரு மாணவரும், 9 முதல் 12 வரை உள்ள மாணவர்களில் முதலிடம் பெறும் ஒரு மாணவரும், மாநில அளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவில், பரிசு பெற அனுப்பப்பட வேண்டும். மாநில அளவில் நடைபெறும் பரிசளிப்பு விழாவிற்கு மாவட்ட அளவில் நடைபெற்ற கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.3. மாவட்ட அளவில், நடுநிலை (6 முதல் 8) , உயர்நிலை (9 மற்றும்10) மற்றும் மேல்நிலைப்பள்ளி ( பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2) மாணவர்களைக் கொண்டு அக்டோபர் 13-ந்தேதி அறிவியல் கண்காட்சி நடத்தப்பட வேண்டும். அதில் தேர்ந்தெடுக்கப்படும் முதலிடம் பெறும் மாணவர் தங்களது படைப்புகளோடு 14-ந்தேதி காலை சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியில் பங்கேற்க செய்ய வேண்டும்.4. பள்ளி மாணவர்கள் பயனடையும் விதமாக, விண்வெளி கல்வி சார்பான புகைப்படக் காட்சி, அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், சென்னையில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் நடைபெறுகிறது. விருப்பமுள்ள பள்ளிகள் மாணவர்களை பிர்லா கோளரங்கத்திற்கு அழைத்துச் சென்று புகைப்படக் காட்சியினைக் காணச் செய்யலாம்.5. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உள்ளுர் பிரமுகர்களைக் கொண்டு, அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளிலும், அக்டோபர் 15-ம் நாளன்று பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை ஒரு மணி நேரம் அப்துல்கலாமின் முன்னேற்ற சிந்தனை சார்பான கருத்துக்களை எடுத்துரைக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.


இவ்வாறு சுற்றறிக்கையில் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி