7243 செவிலியர்களை தேர்வு செய்வதற்காக அரசு நடத்திய தேர்வில் பட்டதாரிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். இதனால் டிப்ளமோ செவிலியர்களுக்கு அரசு வேலை கிடைப்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தனியார் செவிலியர் பள்ளிகளில் டிப்ளமோ படித்தவர்கள் அரசு வேலைகேட்டு 11 ஆண்டுகளாகப் போராடி வந்தனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதையடுத்து தனியார் பள்ளிகளில் படித்த செவிலியர்களுக்கும் அரசு வேலை கிடைக்கும் வகையில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அமைக்க முதல்வர் ஜெயலலிதா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியிட்டார்.மூன்று மாதங்களுக்கு முன்பு அரசு செவிலியர் பணிக்கு 7243 பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இதில் 47 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். 19 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். டிப்ளமோ செவிலியர்கள் மட்டுமின்றி எம்.எஸ்.சி., பி.எஸ்.சி., படித்த பலரும் போட்டித்தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பலர் டிப்ளமோ படித்த செவிலியர்களுக்கு ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்கள். இவர்களுடன் போட்டிபோட முடியாமல் டிப்ளமோ படித்த செவிலியர்கள் மதிப்பெண் பெறுவதில் பின்னுக்கு தள்ளப்பட்டனர்.அறிவிக்கப்பட்ட 7243 பேருக்கு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் எம்எஸ்சி, பிஎஸ்சி நர்சிங் படித்தவர்கள், 1,500 பேர் மட்டுமே டிப்ளமோ படித்தவர்களாக உள்ளனர். இந்த வேலைக்காக 11 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்திய தனியார் பயிற்சி நிலையத்தில், டிப்ளமோ படித்த பெரும்பாலான செவிலியர்கள் வாய்ப்பு பறிபோனதால் ஏமாற்றமடைந்துள்ளனர். வயது காரணமாக, அடுத்த தேர்வை எதிர்கொள்ள முடியுமா என்பதும் கேள்விக்குறியாகி விட்டதாக கவலை அடைந்துள்ளனர்.இதுகுறித்து தனியார் டிப்ளமோ செவிலியர்கள் சங்க மாநிலத் தலைவர் எஸ். செந்தில்நாதன் கூறியதாவது:தனியார் பள்ளியில் டிப்ளமோ படித்த செவிலியர்களுக்கு, அரசுப் பணி கேட்டு கடந்த 11 ஆண்டுகளாக பல்வேறு வழக்குகள் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி வெற்றி பெற்றோம். ஆனால், தற்போது எங்களுக்கு எந்தப் பலனும் இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது. தற்போது நடந்த தேர்வில் 90 சதவீதம் பேர் எம்எஸ்சி, பிஎஸ்சி, நர்சிங் படித்தவர்கள். எனவே தேர்ச்சிபெற்ற 19 ஆயிரம்பேருக்கும் மதிப்பெண் அடிப்படையில் அனைவருக்கும் பணிநியமனம் வழங்கினால் டிப்ளமோ படித்த செவிலியர்கள் முழுமையாகப் பயன்பெறுவர்.
இதற்கு அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள செவிலியர் பணியிடங்களை முழுமையாக நிரப்பவேண்டும். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்கு ஆய்வுக்கு வரும் இந்திய மருத்துவக் கவுன்சில் குழுவினரிடம் பணிபுரியும் செவிலியர்களின் எண்ணிக்கையை மறைத்துக் காட்டி விடுகின்றனர். இந்த எண்ணிக்கைப்படி சரியாக செவிலியர்களை நியமித்தால், அரசுவேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் டிப்ளமோ செவிலியர்களுக்கும் வாய்ப்புகிடைக்கும். இதை அரசுதான் செய்ய வேண்டும் என்றார்.