வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வுசெய்ய அரசு திட்டம்

வருவாய்த் துறையில் துணை வட்டாட்சியர்களை நேரடியாக தேர்வுசெய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
அரசு நிர்வாக இயந்திரத்தின் முதுகெலும்பாக கருதப்படுவது வருவாய்த்துறை ஆகும். சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச்சான்று, ரேஷன் அட்டை உட்பட அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தாலுகா அலுவலகங்கள் மூலமாகவே வழங்கப்படுகின்றன. வருவாய்த்துறையில் இளநிலை உதவியாளர், உதவியாளர், வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர், வட்டாட்சியர் (தாசில்தார்), கோட்டாட்சியர், மாவட்ட வழங்கல் அதிகாரி, மாவட்ட வருவாய் அதிகாரி என பல்வேறு நிலைகளில் ஊழியர்களும், அலுவலர்களும் பணிபுரிந்து வருகின்றனர். தாலுகா அலுவலகங்களில் பணியாற்றும் வருவாய் உதவியா ளர்கள் துறைத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று குறிப்பிட்ட பயிற்சி முடித்த பின்னர் வருவாய் ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். வருவாய் ஆய்வாளர்கள், பதவி உயர்வுக்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்று குறிப்பிட்ட பயிற்சியை முடிக்கும் பட்சத்தில் ஏறத்தாழ 5 ஆண்டுகளில் (மாவட்டத்துக்கு மாவட்டம் இது மாறுபடும்) துணை வட்டாட்சியர்களாக பதவி உயர்வு பெறலாம். துணை வட்டாட்சியர்களும் கிட்டதட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டாட்சியர்களாக பதவி உயர்வு பெறுகின்றனர். வருவாய்த்துறையில் இதுவரை யில் துணை வட்டாட்சியர் பதவியானது பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், துணை வட்டாட்சியர் பதவிக்கு இணையான துணை வணிகவரி அதிகாரி (டிசிடிஓ) பதவியைப் போன்று துணை வட்டாட்சியர் பணியிடங்களையும் நேரடித்தேர்வு மூலம் நிரப்பலாமா? என்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. துணை வட்டாட்சியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் எத்தனை சதவீதம் நிரப்பலாம்? நேரடியாக எத்தனை சதவீதம் நிரப்பலாம்? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று வருவாய் நிர்வாக ஆணையரக வட்டாரங்கள் தெரிவித்தன.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி