பூமணிக்கு சாகித்ய அகாதெமி விருது

தில்லியில் சாகித்ய அகாதெமி விருதுகளை வெள்ளிக்கிழமை அறிவிக்கிறார் அகாதெமியின் செயலர் டாக்டர் கே.சீனிவாசராவ். (வலது) சாகித்ய விருதுக்குத் தேர்வாகியுள்ள பூமணி எழுதிய "அஞ்ஞாடி' நாவல்.

"அஞ்ஞாடி' நாவலை எழுதிய பூ. மாணிக்கவாசகம் (எ) பூமணி, 2014-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சேர்ந்த இவர் "வாய்க்கால்', "வரப்புகள்', "வெக்கை', "பிறகு' உள்ளிட்ட நாவல்களை படைத்துள்ளார்.

இலக்கியத் துறையில் மிக உயரிய விருதாக சாகித்ய அகாதெமி விருது கருதப்படுகிறது. அந்த வகையில், 2014-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுக்கு 22 மொழிகளில் இருந்து எட்டுக் கவிதைகள், ஐந்து நாவல்கள், மூன்று கட்டுரைகள், மூன்று சிறுகதைகள் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன.

மேலும், சிறந்த இலக்கிய விமர்சனம், சிறந்த நாடகம், சிறந்த சுயசரிதை ஆகியவையும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2010 முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வெளியான படைப்புகளை ஒவ்வொரு மொழிக்கும் மூன்று பேர் அடங்கிய தேர்வுக் குழு ஆய்வு செய்து பரிந்துரையை வழங்கியிருந்தது.

அதன் அடிப்படையில், அகாதெமியின் தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரி தலைமையில் அதன் நிர்வாகக் குழு வெள்ளிக்கிழமை தில்லியில் கூடியது. இதில், எடுக்கப்பட்ட முடிவுகளை அகாதெமியின் செயலர் கே.சீனிவாசராவ் செய்தியாளர்களிடம் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு (அடைப்புக்குறியில் மொழி, படைப்பாளியின் பெயர்):

சிறுகதை: மரியம் அஸ்டின் அதாபா ஹிரா பரூவா (அஸ்ஸாமி, அரூபா பதங்கியா கலிதா); சத்தா கிரஹான் (நேபாளி, நந்தா ஹன்கிம்); சுந்தர் நைன் சுதா (ராஜஸ்தானி, ராம்பால் சிங் ராஜ்புரோஹித்).

கவிதை: பியா மனா பாபே, (வங்க மொழி, உத்பல் குமார் பாசு); உடாங்ஃபிராய் கிடிங்ஃபினானி, (போடோ, உர்காவ் குவ்ரா பிரஹ்மா); டிரையிங் டு சே குட் பை (ஆங்கிலம், அடில் ஜுஸ்ஸாவல்லா); கோரே கக்குட் புஷ்ரித் கோம் (காஷ்மீரி, ஷாத் ரம்ஜான்); பிபுலா டிகந்தா (ஓடியா, கோபால்கிருஷ்ண ரத்); அகர்பத்தி (பஞ்சாபி, ஜஸ்விந்தர்); சிஜா அக்யான் புகு (சிந்தி, கோபெ கமல்); ஷாஹ்தபா (உருது, முனாவர் ராணா).

நாவல்: அஞ்ஞாடி (தமிழ், பூமணி); ஹஷியே பார் (டோக்ரி, ஷைலேந்தர் சிங்); விநாயக் (ஹிந்தி, ரமேஷ் சந்திர ஷா); உச்சத் (மைத்திலி, ஆஷா மிஸ்ரா); மனுஷ்யனு ஒரு ஆமுகம் (மலையாளம், சுபாஷ் சந்திரன்).

கட்டுரை: ச்சாபி பிதரானி (குஜராத்தி, மறைந்த எழுத்தாளர் அஷ்வின் மேத்தா); உத்தரார்தா (கன்னடம், ஜி.எச். நாயக்); மன்தன் (கொங்கணி, மாதவி சர்தேசாய்).
நாடகம்: மாலா முடம் (சந்தாலி, ஜமாதர் கிஸ்கு).
சுயசரிதை: சார் நகராந்தலே மாஜே விஸ்வா (மராத்தி, ஜெயந்த் விஷ்ணு நராலிகர்).

இலக்கிய விமர்சனம்: மன நாவலு - மன கதாநிகலு (தெலுங்கு, ராச்சபலெம் சந்திரசேகர ரெட்டி)

மேற்கண்டவற்றில் ஈரோடு தமிழன்பன், சிவசங்கரி, புவியரசு ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு தமிழ் மொழிக்கான விருதுக்குரிய படைப்புகளை ஆய்வு செய்து, பூமணியின் "அஞ்ஞாடி' நாவலை விருதுக்குப் பரிந்துரை செய்துள்ளது.

விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கு அவர்களின் படைப்பின் பெயர் பொறிக்கப்பட்ட தாமிர பட்டயம், சால்வை, ரூ.1 லட்சத்துக்கான காசோலை அடுத்த ஆண்டு, மார்ச் 9-ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ள சாகித்ய அகாதெமி இலக்கியத் திருவிழாவின் போது வழங்கப்படவுள்ளது. மணிப்புரி, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கான விருதுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று சாகித்ய அகாதெமி தேர்வுக் குழு கூறியுள்ளது

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி