உங்கள் தேர்வினை நீங்கள் சிறப்பாக எழுதிட இதோ சில டிப்ஸ. . .
நவம்பர் – 8, 2014 காலை கொள்குறி வகை தேர்வு – 125 கேள்விகள் (250 மதிப்பெண்கள்) (மேலும் இது கணிப்பொறி மூலம் எழுதப்படும் தேர்வு என்பதை மட்டும் மறவாதீர்கள்.)
அதே நாள் மாலை கட்டுரை வகை தேர்வு – 2 கட்டுரைகள் – (25+25=50 மதிப்பெண்கள்) (இந்த கட்டுரை எழுதும் தேர்விற்கு கோடு போட்ட விடைத்தாள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.)
1. இதில் பெரும்பாலும் சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் அமைய நிறையவே வாய்ப்புண்டு. மேலும் இந்த Unit ல் நிறைய அறிவியல் சார்ந்த Current Affairsகேள்விகள் அமையும். உதாரணத்திற்கு மங்கள்யான் பற்றிய கேள்விகளோ அல்லது அமெரிக்காவின் மேவன் விண்கலம் பற்றிய செய்திகளோ கேட்கப்படலாம்.
2. சமீபத்திய அறிவியலுக்கான நோபல் பரிசு பற்றிய கேள்விகள் கேட்கப்பட நிறையவே வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால் இந்த Unit ன் தொடக்க வரிகளை நீங்கள் கூர்ந்து கவனித்து இருந்தால் அவை சொல்லாமல் சொல்வது இது தான் . . . பாடப்புத்தகத்திற்கு வெளியேயும் உள்ள அன்றாட அறிவியல் தகவல்களையும் நாளதுவரை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
3. குறிப்பாக இந்திய மத்திய, மாநில அரசுகள் அறிவியல் வளர்ச்சிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மற்றும் திட்டங்கள் குறித்து நன்றாக தெரிந்து வைத்திருத்தல் நல்லது. ஏனெனில் இந்த தேர்வானது உங்களின் நினைவாற்றலை சோதிக்க நடத்தப்படும் தேர்வு அல்ல. மாறாக உங்களுக்குள் TNPSCதேடும் அரசு அதிகாரிக்குரிய ஆற்றல் ஒளிந்து கொண்டுள்ளதா என்பதை தேடும் தேர்வு.
4. ஒரு அரசு அதிகாரி என்பவர் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளை நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்க வேண்டும், மற்றும் மக்கள் நலன் சார்ந்த அறிவியல் செய்திகளை கவனத்துடன் அறிந்து வைத்திருக்க வேண்டும் என்று TNPSCவிரும்புகிறது. எனவே செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளில் வரும் அன்றாட அறிவியல் சார்ந்த செய்திகள், நடக்கவிருக்கும் தேர்வில் கேட்கப்படும் என்பது உறுதி.
5. சமீபத்தில் பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி என்.ஆர்.ராவ் பற்றி கேள்விகள் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மேலும் கணிப்பொறி பயன்பாடு குறித்து ஒரே ஒரு வரி மட்டும் இந்த Unit ன் கடைசியில் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதிலிருந்து நிச்சயம் கேள்விகள் வரும் என எதிர்பார்க்கலாம்.
6. மற்ற இரண்டு Unitகளை ஒப்பிடும் போது அறிவியல் பகுதிக்கு நிச்சயம் அதிக மதிப்பெண்ணும், +1 மற்றும் +2பாடப்புத்தகத்தில் இருந்து கடினமான கேள்விகளும் (குறிப்பாக உயிரியல் கேள்விகள்) வருவதற்கு வாய்ப்பு உள்ளது. அறிவியலை முதன்மைப்பாடமாக படிக்காதவர்கள் இப்பகுதியில் கவனம் செலுத்தவும்.
7. மற்ற இரண்டு Unit களுக்கும் பாடப்புத்தகங்களில் முழுமையாக குறிப்புகள் இல்லாததாலும், நிறைய பாடக்குறிப்புகளை நூலகத்தில் தேட வேண்டி இருப்பதாலும், அறிவியல் கேள்விகளுக்கு அவ்வாறான நிலை இல்லாததாலும், 90% க்கு மேல் பள்ளிப் பாடப்புத்தகங்களிலேயே அனைத்தும் இருப்பதாலும் இந்த Unit சற்று கடினமான கேள்விகளையே கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கேள்விகளுக்கு உரிய பதில்கள் பாடப்புத்தகங்களிலேயே இருப்பதால் கேள்வி-பதில்களின் நம்பகத்தன்மையும் அதிகமாகிறது மேலும்Key Answerவெளியிடுவதில் எந்த சிக்கலும் இருக்காது அல்லவா.
8. Fertilizers, Insecticides, Pesticides, Govt.Policy-Organizationson science and technology, Role, achievement & impact of science and technology, Energy- self-sufficiency, Oil exploration போன்றவை எல்லாம் மத்திய மாநில அரசாங்கங்கள் சார்ந்த விஷயங்களை மனதில் கொண்டு அமைக்கப்பட்டுள்ள Syllabus ஆகும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்தியாவில் (அ) தமிழ்நாட்டில் அமைந்துள்ள உரத்தொழிற்சாலையைப் பற்றி ஒரு கேள்வி கேட்கப்பட்டால், அது முதல் Unit மற்றும் இரண்டாவது Unitக்கு(Industrial map of India and Tamilnadu)பொதுவாக அமைந்து விடும் என்பதால் கவனம் தேவை. இவை TNPSCகேள்விகளுக்கே உள்ள தனித்தன்மைகளுள் ஒன்றாகும்.
9. இயற்பியல் கேள்விகள் ஒரு சில கணக்கு போடும் வகையிலும், சில பயன்பாடுகள் குறித்த கேள்விகளாகவும் அமையலாம். பெரும்பாலும் +1 மற்றும் +2 பாடங்களில் இருந்து கேள்விகள் அமையும். வேதியியல் கேள்விகளிலும் பயன்பாடுகள் சார்ந்த கேள்விகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் 8,9,10ம் வகுப்புகளின் பாடங்களில் கேள்விகள் அதிகம் வர வாய்ப்பு உள்ளது. pH மதிப்பு கண்டுபிடித்தல் போன்ற ஓரிரு கணக்குகள் வரலாம்.
10. உயிரியல் பாடங்களைப் பொறுத்தவரை +1, +2 புத்தகங்களைப் படிக்கவும். Alcoholism and Drug abuseகேள்விகள் 9ம் வகுப்பில் இருந்து வரலாம். மற்றபடி மரபியல் கேள்விகள் 10, +1 , +2 பாடங்களில் இருந்து வரலாம். இரத்த ஓட்ட மண்டலம், சுவாசித்தல், DNA & RNA சார்ந்த கேள்விகள் கேட்கப்பட மிக அதிக வாய்ப்பு உண்டு. நோய்களைப் பற்றிய பகுதியில் எபோலோ நோய் குறித்த கேள்வி இருக்கும் என்று நம்பலாம். ஏனென்றால் இது current affairs.
அடுத்தது இரண்டாவது Unit மத்திய மாநில அரசுகளின் நிர்வாகம் பற்றியது.
1. மாநில அரசின் அமைப்பு பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் மாநில ஆளுநரைப் பற்றி கேள்விகள் கண்டிப்பாக வரும். ஏனென்றால் இவரே மாநிலத்தின் அரசியலமைப்புத் தலைவர். மற்றும் இவரின் செயல்பாடுகளும் குடியரசுத் தலைவரின் செயல்பாடுகளும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பதால் ஆளுநரைப் பற்றி கேள்விகள் எதிர்பார்க்கலாம். அமைச்சரவைக் குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும் கேள்வி வரலாம்.
2. மாவட்ட நிர்வாகம் குறித்து நிச்சயமாக கேள்விகள் வரும். ஏனெனில் இந்த தேர்வை பொறுத்தவரை சுமார் 368 வருவாய் உதவியாளர் பணியிடங்கள் (Revenue Assistant Post) உள்ளன. இவை மாவட்ட வருவாய் நிர்வாகத்தின் கீழ் வருபவை. அதாவது மாவட்ட ஆட்சியரின் நிர்வாகத்துடன் இப்பணிகள் தொடர்புடையவை. எனவே மாவட்ட ஆட்சித்தலைவரின் கீழ் செயல்படும் மாவட்ட நிர்வாகம் குறித்த நிறைய கேள்விகள் இடம் பெற வாய்ப்பு உண்டு.
3. தமிழத்தில் உள்ள தொழிற்சாலைகள் பற்றி நன்றாக அறிந்து வைத்திருப்பது நல்லது. இதற்கு 9 ம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகம் மிகவும் உதவும். அதில் நிறைய கருத்துகள் உள்ளதால் அதனைப் படிக்க வேண்டியது அவசியம்.
4. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேர்வாணையங்களைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது. குறிப்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்து நிச்சயம் தெரிந்து வைத்திருப்பது சாலச் சிறந்தது. இதிலிருந்து கேள்விகள் வர வாய்ப்பு உள்ளதாலோ என்னவோ தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் அனைத்து தகவல்களும் தமிழில் தரப்பட்டுள்ளன. எதற்கும் ஒருமுறை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணைய தளத்தை படித்து வைப்பது நல்லது.
5. நம் தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் பல்வேறு துறைகளில் அலுவலகப் பணிகளில் கணிப்பொறி நுழைந்து அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. மக்கள் கணினி மையங்கள் அமைக்கப்பட்டு இருப்பதும், தற்போது மாவட்ட மின்ஆளுமைப் பணிகளின் மேலாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பதும் நடந்தேறி வருகின்ற நேரத்தில் மின் ஆளுமை குறித்த கேள்விகள் நிச்சயம் வரும். கணினிகள் மூலம் அரசின் செயல்பாடுகள் வேகமடைந்துள்ளன. மேலும் அதனை செம்மைப் படுத்தும் வகையில் கணினிமயமாக்கல் தொடரும் என்பதால் மின் ஆளுமை குறித்த கேள்வி வந்தே தீரும் என நம்பலாம்.
6. தமிழக அரசின் நலத்திட்டங்கள் குறித்து தெளிவாக அறிந்திருப்பது நலம். பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தப் படும் 14 வகையான நலத்திட்டங்கள் மட்டுமின்றி பிற துறைகளைச் சார்ந்த நலத்திட்டங்களும் அதன் பயன்களையும் அறிந்து வைத்துக் கொள்ளவும். மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து அறிந்து வைத்திருக்கவும். திட்டங்களின் பெயர்கள் கேட்கப்படலாம்.
7. தேசியப் பேரிடர்கள் குறித்தும் சமீபத்திய புயல்கள் குறித்தும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் பற்றியும் காஷ்மீர் வெள்ளம் குறித்தும் படிக்கவும்.
8. மத்திய மாநில அரசுகளுக்கு இடையே உள்ள உறவுகள் பற்றிய பகுதி இந்த தேர்வின் மிக முக்கியமான பகுதி ஆகும். செயல்துறை அதிகாரங்கள் சார்ந்த உறவு, நிதித்துறை சார்ந்த உறவு, சட்டத்துறை சார்ந்த உறவு ஆகியவை மிகவும் முக்கியமானவை. மேலும் மத்திய மாநிலங்களுக்கிடையேயான அதிகாரப் பகிர்வைத் தெளிவுபடுத்தும் மத்திய, மாநில, மற்றும் பொதுப் பட்டியல் ஆகிய அந்த மூன்று பட்டியல்கள் பகுதி மிகவும் முக்கியமானவை.
9. இந்திய அளவில் மிகவும் புகழ் வாய்ந்த தொழில்கள், தொழிற்சாலைகள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், குஜராத் பகுதிகளைப் பற்றி கேள்விகள் வரலாம். அங்கெல்லாம் தொழிற்சாலைகள் அதிகம்.
10. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்து கேள்விகள் கண்டிப்பாக வரும். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், அவரின் சம்பளம் வழங்கப்படும் விதம், அவரின் பதவியின் காலம், பதவியின் நியமனம், அதிகாரம், பணிகள் போன்றவை கேட்கப்படலாம். உச்சநீதிமன்ற நீதிபதி பதவியின் தகவல்களும் இப்பதவியின் தகவல்களும் சற்றேறக்குறைய ஒரே மாதிரி அமையும் என்பதை நினைவில் கொள்ளவும்.
மூன்றாவது Unit சமூக பொருளாதார பிரச்சினைகள் பற்றியது.
இந்த Unit க்கு உரிய தகவல்களை சேகரிப்பது தான் நிறையப் பேருக்கு சிரமமாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம். ஏனென்றால் இதற்கு முன் நாம் எழுதிய தேர்வுகளின் கேள்விகள் பெரும்பாலும் பள்ளிக்கூட புத்தகங்களிலேயே இருக்கும். ஆனால் இது நாமாக சேகரித்து படிக்க வேண்டியது. மேலும் பலருக்கு இது முற்றிலும் புதியதும் ஆகும். தமிழ்நாடே திணறப்போவது இவ்வகை கேள்விகளில் தான் என்பது நம் கணிப்பு. TNPSC Group – 1 தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இப்பகுதி எளிமையாக அமையலாம். மற்றவர்களுக்கு சற்று கடினமே. இருந்தால் என்ன அதையும் ஒரு கை பார்த்துவிட வேண்டியது தான்.
1. இப்பகுதியில் பல்வேறு சமூக நல சட்டங்கள் இயற்றப்பட்டதன் வருடங்கள் கேட்கப்படலாம். எனவே வருடங்கள் கொஞ்சம் முக்கியம். வறுமை ஒழிப்பு, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு சட்டம், வரதட்சிணை ஒழிப்பு சட்டம், பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டம், ஊழல் ஒழிப்பு சட்டம் போன்றவை முக்கியம்.
2. வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து புள்ளிவிவரம் கேட்கப்படலாம். வேலைவாய்ப்பை உருவாக்க அரசு மேற்கொண்ட முயற்சிகள் குறித்து கேள்விகள் கேட்கப்படலாம். குழந்தை தொழிலாளர் முறை குறித்து நிச்சயமாக கேள்விகளை எதிர்பார்க்கலாம். ஏனென்றால் சமீபத்தில் இந்தியாவைச் சார்ந்த கைலாஷ் சத்யார்த்தி என்பவர் 80,000 குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு கல்வி அளித்ததற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இக்கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் பெண்கல்விக்காக போராடும் பாகிஸ்தானின் மலாலா யூசூப்சாய் குறித்தும் கேள்வி வரலாம்.
3. ஊழல் ஒழிப்பு சார்ந்தசட்டங்களும் கேள்விகளும் இடம் பெறுவது உறுதி. ஊழலைத் தடுக்கும் நிறுவனங்களானCentral Vigilance Commission, CAG, Lok-Adalat, Lok-Ayukta, Ombudsman(மக்கள் குறைகேள் அதிகாரி – இக்கருத்து நியூசிலாந்து நாட்டில் இருந்து பெறப்பட்டது) போன்றவை குறித்து அறிந்திருப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் இந்த தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் அரசு அதிகாரிக்கு ஊழல் சட்டங்கள் மற்றும் தண்டணைகள் குறித்த விழிப்புணர்வு இருப்பதை உறுதிப்படுத்த இது குறித்த கேள்விகள் கேட்கப்படும். இத்தகைய கேள்விகளை நாமும் வரவேற்போமாக.
4. நம் நாட்டின் கல்வியறிவு சதவீதம் மற்றும் தமிழக கல்வியறிவு சதவீதம் குறித்தும் படிக்க வேண்டும். கல்வியறிவு மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி மற்றும் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடு விழுக்காடு அதன் பயனாக கல்வியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி போன்றவை குறித்தும் கேள்விகள் வரலாம்.
5. பெண்களின் திறன் மேம்பாட்டுக்காக மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த கேள்விகள் நிச்சயம் உண்டு. பெண்கள் மீதான கொடுமைகளை (ஆசிட் வீச்சு) ஒழிக்கும்வகையில் இயற்றப்பட்ட சட்டங்கள், சமீபத்திய விசாரணைக் கமிஷன்கள் வரை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
6. நாட்டின் வளர்ச்சியில் இடர்ப்பாடுகளை ஏற்படுத்தும் ஜாதி, மத, தீவிரவாத வன்முறைகளை ஒடுக்குவதற்கு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நிச்சயம் கேள்விகள் வரும். ஏனென்றால் இது தற்போதைய நிலையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினை ஆகும். மனித உரிமைகள் மேற்கண்ட நடவடிக்கைகளால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் மனித உரிமைகளைப் பற்றியும் ஒரு சில கேள்விகள் வர வாய்ப்புண்டு.
7. தகவல் அறியும் உரிமைச் சட்டம் RTI – 2005 சார்ந்து சர்வ நிச்சயமாக கேள்விகள் கேட்கப்பட்டே ஆக வேண்டும். ஏனென்றால் இன்றைய நிலையில் அரசின் நடவடிக்கையில் நம்பகத்தன்மையை ஏற்படுத்துவதில் இச்சட்டமே முதலிடம் பெறுகின்றது. சாமானிய மனிதன் கூட இதைப்பற்றி அறிந்திருக்கும் வேளையில் ஒரு அரசு உயரதிகாரியாகப் போகிறவருக்கு இது குறித்து தெளிவான சிந்தனை வேண்டியது மிகவும் அவசியம். கட்டுரை வகை கேள்வியிலேயே கூட இது குறித்து கேள்வி கேட்கப்பட்டாலும் ஆச்சரியம்ஒன்றுமில்லை. இப்பகுதி மிகவும் முக்கியம்.
8. சமூகத்தில் அனைவரும் சமமாக வாழ அரசு எடுத்து வரும் முயற்சிகள் பற்றிய கேள்விகள் வரும். அரசியலமைப்புச் சட்டத்தில் இது பற்றி முகவுரை மற்றும் அடிப்படை உரிமைகள் பகுதி போன்றவற்றில் சொல்லப்பட்டுள்ள சட்டங்களை படித்தறியவும்.
9. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத உறுதிச் சட்டம் & திட்டம்- MGNREGA (ஏரி வேலை) குறித்தும் அந்த திட்ட நடைமுறைகள் குறித்தும் கேள்விகள் வரலாம். இதன் வேலைநாட்களும் ஊதியமும் கேள்விகளாக வரலாம்.NREGA - சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு (2005)MGNREGA என பெயர் மாற்றப்பட்ட வருடம் (2009) கேட்கப்படலாம். சில புள்ளிவிவரங்களும் கேட்கப்படலாம். சுய வேலை வாய்ப்புகளைப் பெருக்குவதற்காக அரசு கொடுக்கும் மானியம், வங்கிக் கடனுதவி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஏற்படுத்தப்படும் வேலைவாய்ப்பு போன்றவைகள் குறித்து கேள்விகள் வரலாம்.
10. சமூக நலனில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பங்கு குறித்து கேள்விகள் வரும். இத்தகைய தொண்டு நிறுவங்களின் அமைப்பு சார்ந்த சட்டங்கள் கேட்கப்படலாம். இவைகள் குறிப்பாக செயல்படும் பிரச்சினைகளான பெண்சிசுக்கொலை, சாதிக்கொடுமை, குழந்தைத் தொழிலாளர் முறை, கொத்தடிமை முறை, பெண்கல்வி போன்றவையும் வெளிநாடுகளில் இருந்து இத்தகைய தொண்டு நிறுவங்கள் அன்பளிப்பாக 20,000 ரூபாய்க்கு மேல் நேரடியாகப் பணமாகப் பெறக்கூடாது மாறாக வங்கியின் மூலம் பெறப்பட வேண்டும் என்பது போன்ற சமீபத்திய செய்திகள் வரை தெரிந்து வைத்திருத்தல் நலம்.
கட்டுரை எழுதும் பகுதியைப் பொறுத்த அளவில் பெரும்பாலும் நடப்பு ஆண்டு சார்ந்த விஷயங்களைப் பற்றிய ஞானம் வேண்டப்படுகிறது. சுமார் நான்கு பக்கமாவது கட்டுரை எழுதப்பட வேண்டும். கருப்பு அல்லது நீல நிற பேனாக்களைப் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிகிறது. இருந்தாலும் எதற்கும் ஒருமுறை TNPSC சொல்லும் அறிவுரைகள நிச்சயம் படித்துப் பார்க்கவும். தயவுசெய்து வேறு வண்ணங்களைக் கொண்டு கட்டுரைகளை அலங்கரிப்பதைத் தவிர்ப்பது சாலச் சிறந்தது. கட்டுரைகள் பொதுவாக அசோகர் மரம் நட்டார், குளம் வெட்டினார் என்பது போல அல்லாமல் குறிப்பாக ஒரு அரசு அதிகாரியாக இருந்து பிரச்சினைகளை நீங்கள் எப்படி நோக்குவீர்கள், என்ன வழிமுறைகளைக் கையாளுவீர்கள், மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க நீங்கள் முன்வைக்கும் கருத்துகள் என்ன, மற்றும் இது குறித்து சட்டம் என்ன சொல்கிறது, என்ன வகையான மாற்றம் தேவை என்ற ரீதியில் உங்களின் சிந்தனைகளை ஆணித்தரமாகவும், கருத்துக்களை நயம்படவும், வார்த்தைகளை நாகரிகமாகவும், பதில்களை சமயோசித புத்தியுடன் எழுதினால்
ஆணையாளர்,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பிரேசர் பாலம் சாலை
வ.உ.சி நகர்
பூங்கா நகர்
சென்னை – 600 003
தமிழ்நாடு
இந்தியா
என்ற முகவரியில் இருந்து உங்களுக்கு நேர்முகத்தேர்வுக்கு அழைப்புக் கடிதம் வரலாம் என்று நம்புகிறோம்.Sincere Efforts will never go unrewarded என்று ஆங்கிலத்திலும், ”மெய்வருத்தக் கூலி தரும்” என்று தமிழில் சொல்வதையும் மட்டும் மறவாதீர் தோழர்களே!!!!