திருமணமான பெண் கருணை அடிப்படையில் தந்தையின் வேலைக்கு உரிமை கோரலாம்: சென்னை ஐகோர்ட்

சென்னை உயர்நீதிமன்றத்தில் பி.ஆர். ரேணுகா என்பவர் தொடர்ந்த வழக்கில், திருமணமான பெண், இறந்துபோன தந்தையின் வேலைக்கு கருணை அடிப்படையில் உரிமை கோரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரேணுகா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் கால்நடைத்துறையில் அலுவலக உதவியாளராக வேலை செய்த தனது தந்தை கடந்த 1998 ஆம் ஆண்டு காலமானதாக கூறியுள்ளார். தங்களது குடும்பத்தில் தானும், திருமணமான மற்ற இரண்டு சகோதரிகளும், திருமணமாகாத ஒரு சகோதரியும், தாயும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவர்களில் மூத்தவரான ரேணுகா திருமணமானாலும் கணவரால் கைவிடப்பட்டதால் தந்தை யுடன் வசித்து வந்ததாகவும், அந்த சமயத்தில் தான் தனது தந்தை இறந்ததாக நீதிமன்றத்தில் கூறியுள்ளார். மேலும் தந்தையின் வாரிசு என்ற அடிப்படையில் அரசிடம் கருணை அடிப்படையில் வேலைக்கு விண்ணப்பித்ததாகவும், அப்போது தனது திருமண விவாகரத்து சான்றிதழையும் அந்த விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

இருந்தபோதிலும் அதிகாரிகள் தந்தையின் வேலைக்கு கருணை அடிப்படையில் திருமணமான பெண் உரிமை கோர முடியாது என்று கூறி தனக்கு வேலை வழங்க மறுத்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன், வழக்கை தொடுத்துள்ள பெண், தனது தந்தையின் இறப்புக்கு முன்பே அவருடன் வசித்து வந்ததாக கூறியுள்ள நிலையில், விவாகரத்து ஆன சான்றிதழையும் இணைத்துள்ள போதிலும் அரசு வேலை வழங்காதது ஏன்? என கேள்வியெழுப்பினார். கணவனால் கைவிடப்பட்டு தந்தையின் பராமரிப்பில் இருந்ததாக அப்பெண் கூறியுள்ள நிலையில், அரசு வேலை வழங்க மறுத்தது தவறு என்று நீதிபதி கூறினார்.

2012 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பில், தந்தையின் வேலைக்கு கருணை அடிப்படையில் உரிமை கோர திருமணம் ஆன மகனுக்கு தகுதி உள்ளது எனும் போது, அதே விதி பெண்ணுக்கும் பொருந்தும் என உத்தரவிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய நீதிபதி, கருணை அடிப்படையில் எட்டு வார காலத்திற்குள் வழக்கு தொடர்ந்த பெண்ணுக்கு வேலை வழங்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி