பள்ளிக்கு செல்லும் ஒரே மகனிடம், தினசரி சிறு தொகையை கொடுத்துவிட்டு பெற்றோர் பணிக்கு செல்கின்றனர். அதை, உண்டியலில் போட்டு சேமித்து வைக்கிறான் மகன். ஒரு மாதத்தில், அது ஒரு பெரிய தொகையாக மாறுகிறது. ஒரு நாள், பெற்றோரிடம், நீங்கள் ஒரு மணி நேரத்தில் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்? என கேட்க, மொத்த ஊதியத்தை கணக்கிட்டு, ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றோர் கூற, அவர்கள் கூறிய தொகையை விட மகன் உண்டியலில் சேமித்து வைத்த பணம் அதிகமாக இருந்ததை அவன் சுட்டிக்காட்டுகிறான்.
நீங்கள் ஒரு மணிநேரம் சம்பாதிப்பதைவிட, நான் அதிகமாக பணம் தருகிறேன். அந்த ஒரு மணிநேரத்தை என்னுடன் செலவிடுங்கள், என மகன் வேண்டுகிறான். இந்த மையக்கருதான், ஐந்து நிமிடங்கள் ஓடக்கூடிய "கேட்பாரற்று" குறும்படம்.
இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில், பொருளாதாரத்தை தேடி அலையும் பெற்றோர் மத்தியில், குழந்தைகளின் உணர்வுகளை படம்பிடித்துக் காட்டுகிறது இந்த படம்.
மைதானத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருக்க, வீட்டில் பெற்றோர் காட்டிய அலட்சியத்தை நினைத்து, அந்த சிறுவர்களுடன் சேர்ந்து விளையாட முடியாத மனநிலையில், மைதானம் அருகில், தன் வீட்டு நாயுடன், ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுவன், கவலையில் அமர்ந்து கொண்டிருக்கிறான்.
தன் உணர்வுகளை கேட்க, தன்னோடு உரையாட யாரும் இல்லாத நிலையில், நாயிடம் கூறினால் தீர்வு கிடைக்காது என்றாலும் கூட, தன் மனக்குமுறலை கொட்ட, நாயாவது இருக்கிறதே என்ற எண்ணத்தில் நாயுடன் உரையாடும், சிறுவனின் நினைவுகளின் அலை ஓட்டம்தான் குறும்படம்.
தான் வெளியே பார்த்த, சந்தித்த, கேட்டவற்றை பகிர்ந்து கொள்ள அம்மா, அப்பா தயாராக இல்லை என்ற, ஒரே வருத்தம்தான் அந்த சிறுவனுக்கு. அம்மாவும், அப்பாவும் அவசரம் அவசரமாக காலையில் பணிக்கு புறப்பட, அதே அவசரத்தில், தமது ஒரே மகனையும் பள்ளிக்கு அனுப்புகின்றனர். மாலை மூன்று பேரும் வீடு திரும்பியதும், ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்காமல், சமைத்ததை உண்டு, அவரவர் பணியில் ஆழ்ந்துவிடுகின்றனர். ஞாயிற்றுக்கிழமையில் மகிழ்ச்சியாக இருக்கலாம் என, சிறுவன் சந்தோஷத்தில் திளைக்க, அன்று, பெற்றோர் ஒன்றுக்கும் உதவாத விஷயத்திற்கு சண்டையிடுகின்றனர்.
அவர்கள், பாத்திரத்தை தூக்கி வீசும்போது, சிறுவனின் மகிழ்ச்சியையும் சேர்த்து தூக்கி வீசும் உணர்வை நமக்குள் ஏற்படுத்துகிறது படம். படத்தில், சிறுவன், நாய் மட்டும்தான் நிஜமுகம். தாய், தந்தையின் முகத்தை காட்டாமலே, அவர்கள் பயன்படுத்தும், கண்ணாடி, கைப்பை, சமையல் அறை, துணி, செருப்பு ஆகியவற்றை காட்டி, அவர்கள் பேசுவதை போல் காட்சிப்படுத்தி இருப்பது புது முயற்சி.
உயிருடன் இருந்தும், உயிரற்ற பொருளாக, அடுத்தவர்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இருப்பதால்தான், நிஜ முகத்தை காட்டாமல், அவர்கள் சார்ந்த உயிரற்ற பொருட்களை காட்டினேன் என, அதற்கு விளக்கம் அளிக்கிறார் படத்தின் இயக்குனர் கவியரசன்.
மேலும் அவர் கூறியதாவது: யாருக்காக பணம் சம்பாதிக்கிறோம் என்ற சிந்தனை இல்லாமல் பல பெற்றோர் கடுமையாக உழைக்கின்றனர். குழந்தைகளுக்கு என்று ஒரு உலகம் உள்ளது. அதை உள்வாங்கி, புரிந்து கொண்டு செயல்பட்டாலே போதும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.