இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான மனோ பால் தனது 8 வயது மகன் ரூபென் பாலுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தனது மகனுக்கு ஆறரை வயதில் கணினி மொழிகளை கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார் மனோ பால். முதலில் 'சி' புரோகிராமிங்கை கற்றுக்கொண்ட ரூபென் தற்போது ஆப்பிள் ஐ.ஓ.எஸ். பிளாட்பார்முக்குண்டான 'ஸ்விப்ட்' புரோகிராமிங்கை கற்று வருகிறார்.
தனது புராஜெக்ட்களை தானே வடிவமைத்துக்கொள்வதாக கூறியுள்ள ரூபெனை கணினி துறையின் மேதை என்று சொன்னால் அது மிகையல்ல. கடந்த ஆகஸ்டு மாதம் புருடென்ட் கேம்ஸ் என்ற கணினி தொடர்பான விளையாட்டு நிறுவனத்தை தொடங்கிய ரூபென், அதன் சி.இ.ஓ.வாகவும் பதவி வகித்து வருகிறார். அவரது தந்தை மனோ பால் இந்நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளார்.
இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நடைபெறும் சைபர் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் ரூபென் பங்கேற்று விரிவுரையாற்ற உள்ளார். அப்போது, தற்போதைய சந்ததியினருக்கு சைபர் பாதுகாப்பு திறமையின் அவசியம் குறித்தும், அதில் அவர்களை வளர்ச்சியடைய வைப்பது குறித்தும் அவர் பேச உள்ளார். இம்மாநாட்டில் மத்திய மந்திரி வி.கே.சிங். சிறப்புரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.