தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழைக் காலம் அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கியது. கடந்த இரு ஆண்டுகளாக மாநிலத்தில் போதிய மழைப் பொழிவு இல்லை. அதனால் முக்கிய அணைகள், ஏரிகளின் நீர் மட்டம் உயரவில்லை.
இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை வழக்கத்தை விடக் கூடுதலாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்தது. அதை உறுதி செய்யும் விதமாக, மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகத் தொடர் மழை பெய்து வருகிறது.
மேலும் ஹூட் ஹூட் புயல், காற்று மேலடுக்கு சுழற்சி போன்றவை காரணமாக பல இடங்களில் பலத்த மழையும் பெய்தது.
இதனால், சென்னை உள்பட தமிழகத்தின் 15 மாவட்டங்களில் சராசரி அளவைவிட கூடுதலாக மழை பதிவாகியுள்ளது. மாநிலத்திலேயே அதிகபட்சமாக திருநெல்வேலியில் 107 சதவீத மழை கூடுதலாக பெய்துள்ளது. அதே போல ஈரோடு, நாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களிலும் கணிசமான அளவு மழை அதிகரித்துள்ளது.
அக்டோபர் 1-ஆம் தேதியிலிருந்து புதன்கிழமை (நவ.5) வரை தமிழகத்தில் வழக்கத்தைவிட 21 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழைக் காலத்தின்போது தமிழகத்தில் சராசரி அளவை விட 5 சதவீதம் குறைவாக மழை பெய்தது. அதை ஈடு செய்யும் விதமாக தற்போது மழைப் பொழிவு அதிகரித்து வருவதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயர்ந்து வரும் நிலத்தடி நீர்மட்டம்....
தொடர் மழையின் பயனாக மாநிலத்தில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1.3 மீட்டர் உயர்ந்துள்ளது.
அதே போல வேலூர், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, கரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கணிசமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்யும் பட்சத்தில் மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதாக நீர் வளத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்த மாவட்டங்கள் விவரம்
மாவட்டம் உயர்வு விவரம் (மீட்டரில்):
வேலூர் 1.02
கிருஷ்ணகிரி 1.25
கரூர் 0.35
புதுக்கோட்டை 0.57
அரியலூர் 0.04
ஈரோடு 0.96
கோவை 1.22
திண்டுக்கல் 0.08
ராமநாதபுரம் 0.44
தேனி 0.36
கன்னியாகுமரி 1.34
கூடுதலாக மழை பெய்த மாவட்டங்களின் விவரம்
மாவட்டம் - கூடுதல் மழைப் பதிவு (சதவீதத்தில்)
சென்னை 31
கோவை 38
கடலூர் 27
தருமபுரி 40
திண்டுக்கல் 53
ஈரோடு 72
நாகப்பட்டினம் 64
நீலகிரி 35
ராமநாதபுரம் 42
சிவகங்கை 27
தேனி 50
திருநெல்வேலி 107
திருப்பூர் 58
திருவாரூர் 40
தூத்துக்குடி 76