புனிதமான ஆசிரியர் – மாணவர் உறவு


ஆசிரியர் மற்றும் மாணவன் உறவு என்பது இந்த உலகில் முக்கியமான ஒன்றாகும். பெற்றோர்களுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருந்து செயல்படும் ஒரு நபரே ஆசிரியர் ஆவார். உதாரணமாக, ஒரு சிற்பியிடம் ஒரு கல்லை கொடுத்தால், எப்படி அதை நல்ல வடிவமாக மாற்றி சிலையாக மாற்றுவாரோ, அதேப்போன்று தான் பல்வேறு வகைகளிலும் பள்ளிக்கூடத்திற்கு வருபவர்களை, பல்வேறு குணாதிசயங்களை கொண்ட ஒரு பையனை, சமூகத்திற்கு பயன்தரும் நபராக மாற்றும் பின்புலமாக ஆசிரியர் தான் இருக்கின்றார்.


அந்த வகையில் எனக்கு கிடைத்த ஆசிரியர், என்னுடைய பள்ளிக்கூட வாழ்க்கையை சிறப்பாக கடப்பதற்கு அவருடைய பங்களிப்பு இந்த நேரத்தில் நினைவுக்கூறக்கூடிய ஒன்றாகும்.

ஒருவனுக்கு அவனுடைய வகுப்பாசிரியர் சிறப்பாக அமையும் பட்சத்தில், அவனுடைய வகுப்பறையும் சிறப்பாக அமையும். அந்த வகையில் இன்றைய ஆசிரியர் மாணவர் உறவு என்பது எப்படி இருக்கின்றது.

இன்று மக்களின் பார்வையில் ஆசிரியர்கள் பற்றிய தவறான எண்ணங்கள் விதைக்கப்பட்டு, மாணவர்கள் செய்யும் தவறுகளுக்குக் கூட ஆசிரியர்கள் தான் காரணம் என்ற கருத்து மிகைப்படுத்தப்படுகிறது.

இதனால், மாணவர்கள் மத்தியில் நடைபெறும் ஒரு சில பிரச்சனைகளுக்கு ஆசிரியர் சமுகம் மட்டுமே கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. அந்தப் பிரச்சனைகளுக்கு காரணமான மாணவர்கள், பெற்றோர்கள், ஆளும் அரசுகள் கேள்விக்குள்ளாக்கப்படுவதில் இருந்து தப்பித்துக் கொள்கின்றனர்.

ஒரு குழந்தை தன்னுடைய தாயின் கருவறையில் இருந்து வெளிவந்து, அடுத்த சில வருடங்களில் அவர்கள் சந்திக்கும் தாயிக்கு நிகரான ஒருவர் தான் ஆசிரியர் என்பவர்.

இந்த ஆசிரியரைப்பற்றிய சிந்தனைகள் நல்லவிதமாக அமையும் பட்சத்தில் அந்தக் குழந்தைக்கு ஆசிரியர் தான் ஒரு கனவு இல்லமாகவும், பள்ளிக்கூடம் தான் தன்னுடைய எதிர்காலத்தின் பொதுவிமாகவும் மாறுகின்றது..

அப்படிப்பட்ட ஆசிரியர்களை பற்றி குழந்தைகளிடம் பெற்றோர்கள் நல்ல எண்ணங்களை ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு எவ்வாறு நாம் மதிப்பளிக்க வேண்டும். அவர்களிடம் இருந்து நாம் எந்த அளவில் வித்தியாசப்படுகிறோம் என்பதை தெரியப்படுத்தி, சிறு வயது முதலே அவர்களை பயிற்றுவிக்க வேண்டும்.

அப்படி பயிற்றுவிக்கும் போதுதான் நாம் எதிர்பார்க்கிற நல்ல மாணவனாக, சமூகத்துக்கு பயன்தரக்கூடிய மனிதனாகவும், தலைவர்களாகவும் இந்த உலகுக்கு அறிமுகப்படுத்த முடியும்.

வீடு, உறவுகள் தாண்டி ஒரு குழந்தைக்கான சமூக உறவை ஏற்படுத்தித் தருவது பள்ளிக்கூடங்கள் தான். இங்கிருந்து தான் சமூகத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்க்கவும் பழகவும் கற்றுக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் எத்தனை பேர் நமக்கு பள்ளிக்கூடத்தில் பாடம் நடத்திய ஆசிரியர்களை நாம் நினைவு வைத்திருக்கிறோம். அவர்களைப்பற்றி நல்ல விதமான தகவல்களை பரிமாறிக் கொள்கிறோம். அவர்கள் நம்மீது எடுத்த அக்கறையைப்பற்றி எண்ணி இன்றும் அவர்களுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்.

ஒரு காலத்தில் ஆசிரியர்களை அவர்களின் வீடுகளுக்கு தேடிச் சென்று கல்வி கற்ற காலங்கள், அதற்கு பல்வேறு குருதட்சனைகள் என்று கல்வி கற்க அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்த காலங்கள் எல்லாம் உண்டு.

ஆனால், இன்று அரசு பள்ளிக்கூடங்கள் இலவசக்கல்வி முறையை அமல்படுத்தி, மாணவர்களுக்கு பல்வேறு விதத்தில் சலுகைகள், கல்வி உதவித்தொகை, மடிக்கணினி, சைக்கிள் என்று மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அரசே செய்து தருகின்றன.

அப்படி இருந்தும் மாணவர்களின் படிப்பில் ஆர்வம் எப்படி உள்ளது? ஆசிரியர்களை பற்றிய எண்ணங்கள் எப்படி உள்ளது? எங்களுடைய வகுப்பாசிரியர் எங்களுக்கு எப்படி இருந்தார்? என்று பல்வேறு வினாக்கள் எழுகிறது.

அந்த வகையில் நான் எனக்கு கிடைத்த ஆசிரியரை இலட்சிய ஆசிரியர் என்றே சொல்வேன். அவர் என்னை ஒரு மாணவனாக பார்க்காமல், மகனாக பார்த்தார். நான் வகுப்பறைக்கு செல்வதென்றாலே வெறுப்பாக இருந்த நேரத்தில் தான், அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வகுப்பறை என்பது ஒரு மாணவனின் கருவறைக்குப் பின்பு, அது அவனுடைய வாழ்க்கைக்கான இரண்டாவது அறை வகுப்பறைதான் என்று அறிமுகப்படுத்தி என் மேல் தனிப்பட்ட அக்கறை எடுத்தார். படிப்பின் முக்கியத்துவத்தையும், இன்று படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தும், பொருளாதாரம் மற்றும் குடும்ப சூழல் அவர்களுக்கு கிட்டும் வாய்ப்பை பெற முடியாமல் உள்ளதையும் எடுத்துக் கூறினார்.

நான் படித்த அரசு மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக இருந்த அவர், என்னை தினமும் காலை வணக்கத்தின் போது, செய்தி வாசிப்பதற்கு ஏற்பாடு செய்து தந்தார். நானும் அதில் ஆர்வத்தை ஏற்படுத்தி தினமும் செய்தியை நானே பார்த்து பதிவு செய்து கொள்வேன். இது, பள்ளிப்படிப்பு மட்டுமின்றி உலக செய்திகளையும் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அது அமைந்தது

நான் சில நேரங்களில் வகுப்பிற்கு தாமதமாக வந்தால் கூட, என்னிடம் அதை முறையான காரணங்களை விசாரித்து அதற்குண்டான தீர்வையும் ஏற்படுத்தி தருவார். நான் மட்டுமல்லாமல் எங்கள் வகுப்பு மாணவர்கள் அனைவரையுமே நல்ல முறையில் அணுகுவார். இதனால் ஆசிரியருக்கும் எங்களுக்குமான உறவு என்பது தந்தை மகன் உறவு போன்று பிரகாசமாக இருந்தது.

வகுப்பறைகளில் பாடம் எடுப்பது மட்டுமல்லாமல், சமூகத்தில் ஒரு மனிதனுக்கு முக்கியமான தேவை என்பது பற்றியும் கலந்துரையாடுவார். அதேப்போன்று ஒரு நாள் புத்தகம் தொடர்பாக எங்களுக்கு சில தகவல்களை எடுத்துக் கூறினார். அப்பொழுது புத்தகங்கள் சில சமயம் அவற்றை வாசிப்பவர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு விடுகின்றன.

அந்த வகையில் ரஸ்கின் எழுதிய க்ண Un to the last என்ற புத்தகத்தை காந்தியடிகள் படித்துவிட்டு இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்தாராம்.

அப்பொழுதுதான் “எந்த வேலையும் இழிவானதல்ல” என்ற சர்வோதய சிந்தனை அவருக்குள் உதித்தது. அந்தப் புத்தகத்தால் தான். இதனால் புத்தக வாசிப்பு என்பது முக்கியமானது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஒரு புத்தகத்தையாவது படித்திருக்க வேண்டும் என்றார்.

அதிலிருந்து எங்கள் வகுப்பறை மாணவர்கள் அனைவரும் புத்தகம், நாவல், கதை, சிறுகதைகள் என்று படிக்க ஆரம்பித்து விட்டனர். படித்ததோடு மட்டுமல்லாமல், அதை வகுப்பறையில் வைத்து விவாதிக்கவும் செய்வோம். அதுமட்டுமல்லாமல், பள்ளிகளில் சிறு சிறு போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகம், பேனா என்று பரிசு வழங்கி ஆர்வப்படுத்துவார்.

வெற்றி பெறாதவர்களுக்கும் ஆறுதல் பரிசு அவர்களையும் வெற்றி பெற வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துவார். எல்லா மாணவர்களையும் அழகான முறையில் பெயர் சொல்லி அழைப்பார்.

வார விடுமுறை நாட்களுக்கு அவருடைய வீட்டுக்கு சென்று சந்தோஷமாக விடுமுறை நாட்களை கழிப்போம். எங்களுடன் சேர்ந்து படித்த விளையாட்டுக்களை விளையாடுவார்.

ஒரு நாள் எங்களை எல்லாம் மகாபலிபுரம் கூட்டி சென்று, அங்குள்ள பல்வேறு இடங்களையும் சுற்றிக் காண்பித்து அதனுடைய முக்கியத்துவங்களை எடுத்துக் கூறினார். இப்படி பல்வேறு தளங்களிலும் எங்களை அனுபவப்பட்டவராக மாற்றினார்.

அதேப்போன்று, எங்கள் வகுப்பறையில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களை அழைத்து, தனியாக வகுப்பெடுத்து அவர்களையும் நல்ல மதிப்பெண்கள் வாங்கச் செய்வார்.

பல்வேறு தரப்பட்ட ஆசிரியர்களுக்கு மத்தியில், இவர் எங்களுக்கு ஒரு இலட்சிய ஆசிரியராக திகழ்ந்தார். இன்று ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் குறை கூறும் இக்காலக்கட்டத்தில் இப்படியும் ஆசிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு என்னுடைய ஆசிரியர் நல்ல உதாரணமாகும்.

கடைசியாக, “எல்லா மனிதர்களும் நீதிமான்கள் அல்லர், அனைத்து மனிதர்களும் வாய்மையானவர்கள் அல்லர்” என்று ஆப்ரகாம் லிங்கன் அவர்கள் தன்னுடைய தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதத்தில் அழகாக எழுதியிருந்த அந்த வரிகள், இன்றைய சமகாலக்கட்டத்திற்கும் பொருந்தும். அதனால், ஓரிரு ஆசிரியர்கள் செய்யும் தவறுகளை வைத்து, ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சமூகத்தையும் குற்றப்பரம்பரையாக்கி, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள அந்த புனிதமான உறவை பிரித்து விட வேண்டாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி