பிரெஞ்ச் எழுத்தாளர் பாட்ரிக் மோதியானோ-வுக்கு இலக்கிய நோபல் பரிசு

2014ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசை பிரெஞ்சு எழுத்தாளர் பாட்ரிக் மோதியானோ வென்றுள்ளார்.

"நினைவின் கலையைக் கொண்டு அவ்வளவு எளிதில் புரிந்துகொள்ள இயலாத மானுட சூழ்நிலைகளை இவர் சித்திரப்படுத்தியதற்காகவும், பிரான்ஸ் நாட்டை ஜெர்மனியின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்தக் காலக்கட்டத்தின் வாழ்வுலகத்தை படைப்புப்பூர்வமாக வெளிப்படுத்தியதற்காகவும் இவருக்கு இலக்கிய நோபல் பரிசு வழங்கபடுகிறது” என்று நோபல் அகாடமியின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாட்ரிக் மோதியானோ, ஜூலை 30, 1945ஆம் ஆண்டு பாரிஸ் புறநகர்ப் பகுதியில் பிறந்தார். இவரது தந்தை ஒரு தொழிலதிபர், தாயார் ஒரு நடிகை.

1968ஆம் ஆண்டு இவர் பிரெஞ்சு மொழியில் எழுதிய நாவல் ஒன்றின் மூலம் பிரெஞ்சு இலக்கிய விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவரது படைப்புகளில் நினைவு, மறதி, அடையாளம் மற்றும் குற்றவுணர்ச்சி ஆகியன பிரதான கருவாக விளங்கி வந்தது. பெரும்பாலும் பாரீஸ் நகரத்தை மையமாக வைத்தே இவரது படைப்புகள் பின்னப்பட்டுள்ளன.

சொந்த வாழ்வின் தாக்கமும், ஜெர்மனி ஆக்கிரமிப்புக் காலக்கட்டத்தில் வாழ்க்கையின் தாக்கமும் இவரது எழுத்துக்களில் பெரும்பாலும் இடம்பெற்றுள்ளன.

இவர் வாழும் நகரமும் அதன் வரலாறும் இவரது எழுத்துக்களில் பல்வேறு வடிவங்களில் சித்திரம் பெற்றுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். சில கதாபாத்திரங்கள் பல்வேறு படைப்புகளில் மீண்டும் நடமாடுவார்கள். அதேபோல் படைப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று கூறப்படுகிறது.

பிரெஞ்ச், ஆங்கிலம் மொழிகளில் 30-க்கும் மேற்பட்ட நூல்களை இவர் படைத்துள்ளார். இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெறும் 111-வது எழுத்தாளர் பாட்ரிக் மோதியானோ என்பது குறிப்பிடத்தக்கது. நோபல் பரிசு வெல்லும் 11வது பிரெஞ்சு இலக்கியவாதி ஆவார் பாட்ரிக் மோதியானோ.

இவரது படைப்புகள் சில ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. நைட் ரவுண்ட்ஸ், ரிங் ரோட்ஸ், 1974, வில்லா டிரிஸ்ட், 1977, மிஸ்ஸிங் பெர்சன், எ டிரேஸ் ஆஃப் மலிஸ் (A Trace of Malice), அவுட் ஆஃப் த டார்க், தி சர்ச் வாரண்ட், ஹனிமூன், 1992 மற்றும் சில படைப்புகள் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.

இது தவிர குழந்தைகளுக்கான நூல்களையும், திரைக்கதையிலும் பங்களிப்பு செய்துள்ளார் மோதியானோ. 1968ஆம் ஆண்டு இவர் எழுதிய முதல் நாவல் சர்ச்சைக்குரிய வகையில் யூத விரோத சித்தரிப்புகளைக் கொண்டதாகக் கருதப்பட்டு 42 ஆண்டுகள் கழித்து, 2010ஆம் ஆண்டு ஜெர்மன் மொழியில் பெயர்க்கப்பட்டது. ஆங்கிலத்தில் இவரது முதல் நாவல் இன்னமும் மொழிபெயர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஸ்பானிய மொழியில் இவரது பெரும்பாலான படைப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல் ஸ்வீடிஷ் மொழி, ஜெர்மன் மொழி ஆகியவற்றிலும் இவரது படைப்புகள் பிரசித்தம்.

இவரது படைப்புகள் பற்றிய பல்வேறு தரப்பட்ட விமர்சன ஆய்வுகள் வெளிவந்துள்ளன. ஒருசில விமர்சகர்கள் இவரது ஒரு சில படைப்புகளை பின்நவீன எழுத்தாக அறுதியிட்டுள்ளனர். பின் நவீனத்துவத்தின் பல கூறுகளில் ஒன்று மரபான கதை சொல்லல் பாணியிலிருந்து விலகிச் செல்லுதல் மற்றும் நேர்கோட்டு கதை கூறல் பாணியை பகடி செய்து கதை அமைப்பையும் கதையாடலையும் முடிந்த அளவுக்கு தத்துவச் சிக்கல்களுக்கு உட்படுத்துவது. மேலும் இதுகாறும் மதிப்பீட்டு உலகத்தை ஆட்சி செய்யும் இலக்கிய, பண்பாட்டு மதிப்பீடுகளை கேள்விக்குட்படுத்துவதும் ஆகும்.

இவரது படைப்புகளில் இத்தகைய கூறுகள் இருக்குமேயானால் அது இந்த நோபல் பரிசு அறிவிப்புகளுக்குப் பிறகு பெரிதாக வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி