வெற்றி பெற உதவும் வழிகள்!!!


நேர்முகத் தேர்வு என்பது ஒருவகையில் சாதாரண செயல்பாடுதான். ஆனால், கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான முறையில் மட்டும் பதிலளித்துவிட்டால் போதும், வேலை உறுதி.


ஆனால், பலருக்கு, எந்தக் கேள்விக்கு என்ன பதிலை அளிக்க வேண்டும் என்பது தெரிவதில்லை. உங்களின் பதில்கள் மூலமாகவே, நீங்கள் பெரும்பாலும் கணிக்கப்படுகிறீர்கள். உங்களின் படிப்புத் தகுதி மற்றும் இன்னபிற விஷயங்களெல்லாம் அப்புறம்தான்.

எனவே, நேர்முகத் தேர்வில், எந்தக் கேள்விகள் பிரதானமாக வரும், அவற்றுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்பது குறித்த ஆலோசனைகளை இக்கட்டுரை வழங்குகிறது.

இந்தப் பணியை நீங்கள் விரும்பக் காரணம்?

இது மிக முக்கிய கேள்விகளில் ஒன்றாகும். இந்தக் கேள்வியின் மூலம், நீங்கள் குறிப்பிட்ட பணியின் மீது உண்மையாகவே ஆர்வமாக இருக்கிறீர்களா? அல்லது வெறுமனே ஒரு வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித்துள்ளீர்களா? என்பதை உங்களின் பதிலின் மூலம் கணிக்கவே இது கேட்கப்படும். எனவே, உங்களின் பதிலின் மூலமாக, நீங்கள் அப்பணிக்கு ஒரு பொருத்தமான நபர்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

உங்களின் திறமை மற்றும் தகுதிகள் ஆகியவை, குறிப்பிட்ட பணிக்கானது என்று நீங்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் தெரிவிக்க வேண்டும் மற்றும் அந்த பணியை நீங்கள் விரும்புவதாகவும் அவர்களிடம் கூற வேண்டும். இதன்பொருட்டு, நீங்கள் நேர்முகத் தேர்வுக்கு செல்லும் முன்பாக, ஓரளவேனும், குறிப்பிட்ட நிறுவனம் மற்றும் நீங்கள் விரும்பும் பணி ஆகியவைப் பற்றி ஓரளவு விஷயங்களை சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

உங்களின் இலக்குகள் என்னென்ன?

உங்களின் குறுகியகால மற்றும் நீண்டகால இலக்குகள் பற்றி தெரிவிக்கலாம். இந்த நிறுவனத்தில் பணியாற்றுவதன் மூலம் வளர்ச்சியடைந்து, எனது தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக் கொள்வது எனது நீண்டகால இலக்கு என்றும், என் முழுத் திறமையையும் பயன்படுத்திப் பணியாற்றுவதே எனது குறுகியகால இலக்கு என்றும் கூறலாம்.

உங்களின் பலம் மற்றும் பலவீனங்கள் என்ன?

உங்களின் பலவீனங்கள் குறித்து குறைவாகவும், பலம் குறித்து அதிகமாகவும் பேசவும். உங்களுடைய ஆளுமை, திறன்கள், அனுபவம் மற்றும் திறமைகள் குறித்து பேசவும்.

நிஜ வாழ்க்கை உதாரணங்களுடன் உங்களுடைய பதிலை அளிக்கவும். அதேசமயத்தில், நீங்கள் குறைகளே இல்லாத மனிதர் என்பதாகக் கூறி நடிக்க வேண்டாம். அதை நிச்சயம் யாரும் நம்ப மாட்டார்கள். உங்களின் பலவீனங்களைப் பற்றி கூறும்போது, மேம்படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்பதாக அவற்றை வகைப்படுத்தி, நாசுக்காக தெரிவிக்கவும்.

உங்களைப் பற்றி கூறுங்களேன்...

பொதுவாக அனைத்து நேர்முகத் தேர்வுகளிலும் கேட்கப்படும் ஒரு எளிமையாக கேள்விதான் இது. உங்களின் சுருக்கமான குடும்ப விபரம், உங்களின் பொழுதுபோக்கு, உங்களின் சாதனைகள், அனுபவம் மற்றும் தகுதிகள் பற்றி தேவையானவற்றை மட்டும் குறிப்பிடவும்.

பேசும்போது தன்னம்பிக்கையுடன் பேசுவதுடன், வேலை தொடர்பாக நீங்கள் கொண்டிருக்கும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தவும்.

நீங்கள் இதுவரை செய்த சாதனைகள்?

தனிப்பட்ட முறையிலான உங்களின் சாதனைகளைத் தவிர்த்துவிட்டு, பணி தொடர்பாக நீங்கள் மேற்கொண்ட சாதனை செயல்பாடுகளையே கூறவும்.

நாங்கள் ஏன் உங்களுக்கு பணி வாய்ப்பைத் தர வேண்டும்?

உங்களின் திறன்கள் மற்றும் பணி சார்ந்த அனுபவம் குறித்து பேசிவிட்டு, இவ்வாறு கூறவும், "இப்பணிக்கு ஏற்ற அனைத்து தகுதிகளையும் நான் பெற்றுள்ளேன், எனது முயற்சிகள் மற்றும் திறன்கள் அனைத்தையும் , இந்த நிறுவனத்தின் மேம்பாட்டிற்காக பயன்படுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன்" என்பதாகக் கூறி உங்களின் மீதான அபிப்ராயத்தை அதிகரிக்க வேண்டும்.

அடுத்த 5 ஆண்டுகளில் உங்களின் நிலை என்ன?

இக்கேள்விக்கு முழுவதும் கற்பனையாக பதில் கூறாமல், நடைமுறை சார்ந்தே பதில் கூறவும். உங்களின் இலக்கு, பணி பொறுப்புகள் மற்றும் சாதனைகள் சார்ந்து அமையவிருக்கும் உங்களின் எதிர்காலம் குறித்து பேசவும்.

என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?

சம்பளத்தைப் பற்றி, நிறுவனத்தாரே முதலில் கூறினால், உங்களுக்கு ஒருவகையில் நல்லதுதான். உங்களின் முந்தைய ஊதியத்தைப் பற்றி கூறுவதுடன், உங்களின் தகுதி மற்றும் விரும்பும் சம்பளம் பற்றியும் கூறலாம்.

ஆரம்ப நிலையில், சம்பளம் குறித்து பேரம் பேசுவதை முடிந்தளவு தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் பிடித்துவிட்டதென்றால், சம்பளம் பெரிய பிரச்சினையாக இருக்காது.

எங்களின் நிறுவனத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இக்கேள்வி மிகவும் முக்கியமானது. இதற்கு சிறப்பாக பதில் சொல்ல வேண்டுமெனில், நேர்முகத் தேர்வுக்கு செல்வதற்கு முன்னதாகவே, அந்நிறுவனம் எப்போது தொடங்கப்பட்டது, யாருடையது, அதன் செயல்பாடுகள் என்ன, அதன் வாடிக்கையாளர் விபரம், அந்நிறுவன தயாரிப்பு அல்லது புராஜெக்ட் உள்ளிட்ட விபரங்களை இணையதளம் அல்லது வேறு ஆதாரங்கள் மூலமாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நீங்கள் ஏதேனும் எங்களிடம் கேட்க விரும்புகிறீர்களா?

பொதுவாக, நேர்முகத் தேர்வு முடியும் தருவாயில், இக்கேள்வி வரும். அப்படி வரும்போது, பணி, நீங்கள் பணிபுரியக்கூடிய குழு பற்றிக் கேட்கவும். இதன்மூலம், பணியின் மீதான உங்களின் ஆர்வம் மற்றும் அதன்மேல் நீங்கள் கொண்டிருக்கும் அக்கறை உள்ளிட்டவை கணிக்கப்படும்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி