சுற்றுச்சூழலை பாதிக்காத ஒளி தொழில்நுட்பத்தை கண்டுபிடித்த 3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியல் நோபல்

2014ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை 3 விஞ்ஞானிகள் வென்றுள்ளனர். ஜப்பான் விஞ்ஞானிகள் இருவரும், அமெரிக்க வாழ் ஜப்பானிய விஞ்ஞானி ஒருவரும் இப்பரிசை பகிர்கின்றனர்.
இசமு அகாசாகி, ஹிரோஷி அமானோ, ஷுஜி நகமுரா ஆகியோர் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றுள்ளனர்.

ஆற்றல் திறன் படைத்த, சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத நீல ஒளி-உமிழ்வு டயோடு (LED) அதாவது, வெண்மை ஒளியை புதிய வழியில் உருவாக்கும் விளக்குகளை கண்டுபிடித்ததற்காக இவர்களுக்கு இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கணினித் திரைகள் மற்றும் நவீன ஸ்மார்ட் போன்களுக்கு ஒளியூட்டும் LED தொழில்நுட்பத்தில் இவர்களது பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இசமு அகாசாகி (85) ஜப்பானின் மெய்ஜோ பல்கலைக் கழகம் மற்றும் நகோயா பல்கலைக்கழக விஞ்ஞானி ஆவார். ஹிரோஷி அமானோவும் (54) நகோயா பல்கலைக்கழக விஞ்ஞானி என்பது குறிப்பிடத்தக்கது. ஷூஜி நகமுரா (60) கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்.

இந்தக் கண்டுபிடிப்பு மனித குலத்திற்கு பெரிதும் நலம் விளைவிப்பது என்று ராயல் ஸ்வீடிஷ் அகாதமி தனது நோபல் பரிசு அறிவிப்பில் கூறியுள்ளது.

நீல ஒளி உமிழ்வு டயோடு (LED) விளக்குகள் நீண்ட காலத் திறன் படைத்தது. மேலும் பழைய விளக்குகளுக்கு இது ஒரு சிறந்த மாற்று என்று அந்த அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

1990ஆம் ஆண்டுகளின் தொடக்க காலகட்டத்தில் விஞ்ஞானிகள் இசமு அகாசாகி, ஹிரோஷி அமானோ, ஷூஜி நகமோரா ஆகியோர் குறைமின் கடத்தி மூலம் நீல ஒளிக்கற்றைகளை உற்பத்தி செய்து காட்டிய போது ஒளித் தொழில்நுட்பத்தில் இவர்கள் ஆதாரமான ஒரு மாற்றத்தை நிகழ்த்தினர்.

இதற்கு முன்பாக சிகப்பு மற்றும் பச்சை டயோடுகள் இருந்தன. ஆனால் நீல ஒளி இல்லாமல் வெள்ளை பல்புகளை உருவாக்க முடியாது. 

இந்தக் கண்டு பிடிப்புக்கான பெரு முயற்சிகள் இருந்தும், விஞ்ஞான சமூகத்திலும், தொழில்துறையிலும் நீல ஒளி உமிழ்வு எல்.இ.டி. என்பது 30 ஆண்டுகளுக்கு பெரும் சவாலாகவே இருந்தது.

இந்த 3 விஞ்ஞானிகளும் மற்றவர்கள் சாதிக்க முடியாததைச் சாதித்தனர். அகாசாகி மற்றும் அமானோ நகோயா பல்கலைக் கழகத்தில் ஆய்வில் ஈடுபட ஷூஜி நகமுரா, டொகுஷிமாவில் உள்ள நிசியா ரசாயனம் என்ற சிறிய நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

20ஆம் நூற்றாண்டை பிற ஒளிவிளக்குகள் ஒளியூட்டின என்றால் 21ஆம் நூற்றாண்டில் இந்த விஞ்ஞானிகளின் அரிய கண்டுபிடிப்பான எல்.இ.டி. விளக்குகள் ஒளியூட்டும்.

ராட்சத மின் வினியோக கோபுரங்கள் இல்லாததால் போதிய மின்வசதி இல்லாமல் அவதிப்படும் உலகம் முழுதும் உள்ள 1.5 பில்லியன் மக்கள் எல்.இ.டி. விளக்குகளால் பயனடைவர்.

இதற்கு மின் ஆற்றல் குறைவாகவே தேவைப்படுவதால் சூரிய ஒளியினால் கூட இதற்கு மின்சக்தி அளித்துவிட முடியும். 

உலக மின்சக்தி நுகர்வில் நான்கில் ஒரு பங்கு மின்விளக்குகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. எல்.இ.டி. சுமார் 1 லட்சம் மணி நேரங்கள் தாங்கக்கூடியது. மாறாக மற்ற விளக்குகளில் புளூரோசெண்ட் விளக்குகள் 10,000 மணி நேரமே தாங்கக்கூடியது.

நீல எல்.இ.டி. கண்டுபிடிக்கப்பட்டு 20 ஆண்டுகளே ஆனாலும் வெண்மை ஒளியை புதிய வழியில் உருவாக்குவதில் இது ஏற்கனவே தனது பங்களிப்பைச் செய்யத் தொடங்கி விட்டது.

Source : http://tamil.thehindu.com/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி