பிளஸ் 2 படிக்காத ஆசிரியருக்கு பதவி உயர்வு : பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு

          பிளஸ் 2 படிக்காமல், இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியரை,  பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு அனுமதிக்காமல் தடை போட்ட தமிழக அரசு, தற்போது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், 'இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி, பிளஸ் 2 படிப்பிற்கு நிகரானது' என, உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
                 இதனால், பிளஸ் 2 படிக்காத இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியராக, பதவி உயர்வு பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த, 1987 வரை, இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர, குறைந்தபட்ச கல்வித் தகுதியாக, 10ம் வகுப்பு தேர்ச்சி இருந்தது. 1988 முதல், ஆசிரியர் பயிற்சியில் சேர்வதற்கான கல்வி தகுதியாக, பிளஸ் 2 நிர்ணயிக்கப்பட்டது.

ஆசிரியர் பயிற்சி படிப்பு : பிளஸ் 2 கல்வித்தகுதி நிர்ணயிப்பதற்கு முன், பிளஸ் 2 படிக்காமல், 10ம் வகுப்பு, பின், ஆசிரியர் பயிற்சி படிப்பு, அதன்பின், திறந்தவெளி பல்கலையில் பட்டம், முதுகலை பட்டம் பெற்று, பள்ளி கல்வித்துறையில், ஆசிரியராக ஏராளமானோர், பணியில் சேர்ந்தனர். இத்தகைய ஆசிரியர்கள், பிளஸ் 2 முடிக்காததால், பதவி உயர்வு வழங்க முடியாது என, 2011ல், கல்வித்துறை, திட்டவட்டமாக தெரிவித்தது. 2011க்குப் பின் நடந்த பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில், மேற்கண்ட ஆசிரியரை, சேர்க்கவில்லை. இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், பல ஆசிரியர்கள், வழக்கு தொடர்ந்தனர். இதில், ஆசிரியர்களுக்கு, சாதகமாக, சமீபத்தில், உத்தரவு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளி கல்வித்துறை செயலர், சபிதா பிறப்பித்துள்ள அரசாணை விவரம்:

நீதிமன்றம் உத்தரவு :
 'பத்தாம் வகுப்பிற்குப் பின் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி சான்றிதழை, பிளஸ் 2 படிப்பிற்கு இணையாக கருதி, பதவி உயர்வு வழங்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், ஆசிரியர் பயிற்சி சான்றிதழை, பிளஸ் 2 படிப்பிற்கு இணையாக கருதி, உரிய ஆணை வழங்கிட, பள்ளிக்கல்வி இயக்குனர்
கேட்டுள்ளார். அதன்படி, 1987ம் ஆண்டுக்கு முன் பெறப்பட்ட இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி சான்றிதழை, பிளஸ் 2 படிப்பிற்கு இணையானது என, அரசு உத்தரவிடுகிறது.
இவ்வாறு, அரசாணையில், செயலர் தெரிவித்துள்ளார். இந்த உத்தரவின் காரணமாக, பள்ளி கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித்துறையில், இடைநிலை ஆசிரியராக பணி புரியும் பலர், பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெறும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி