வில்லியம்ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) 10


கணினி ஜாம்பவான் பில்கேட்ஸின் பிறந்த நாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

• வாஷிங்டனில் பிறந்தவர். அம்மா செல்லம். சிறு வயதிலேயே வாசிப்புப் பழக்கம் தொற்றிக் கொண்டது. பள்ளியில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் ஆச்சர்யமூட்டும் வகையில் அசத்தினார்.
• கணினி நிறுவனம் ஒன்று மாணவர்களுக்குக் கணினிப் பாடம் சொல்லித்தர முன்வந்தது. கணினியைப் பார்த்தவுடனே காந்தம்போலக் கவரப்பட்டார் பில்கேட்ஸ். குறுகிய நாட்களிலேயே அடிப்படை கணினி லாங்குவேஜில் டிக்-டாக்-டோ என்கிற தனது முதல் கணினி நிரலை வடிவமைத்தார்.
• பால் ஆலனைச் சந்தித்தது கேட்ஸுக்கு மட்டுமல்ல... கணினி உலகத்துக்கே திருப்புமுனை. 1970-ல் இருவரும் இணைந்து நகரின் போக்குவரத்தைக் கண்காணிக்கும் கணினி தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள். கேட்ஸுக்கு அப்போது வயது 15. இருவரும் இணைந்து நிறுவனம் தொடங்க ஆசைப்பட்டனர். ஆனால், கேட்ஸின் பெற்றோர் ஆசையோ வேறாக இருந்தது. வலுக்கட்டாயமாக வழக்கறிஞர் தொழிலுக்குப் படிக்க அனுப்பிவிட்டார்கள்.
• கணினியை மறக்க முடியாதவர் கல்லூரிப் படிப்பை பாதியில் உதறினார். ஆலன் வேலை பார்த்த நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு ‘ஆல்டர் 8800’ தொழில்நுட்பம் பற்றி கேட்ஸ் அறிந்தார். இதை நியு மெக்சிகோ நகரில் உள்ள மைக்ரோ இன்ஸ்ட்ருமன்டேஷன் அன்ட் டெலிமெட்ரி சிஸ்டம் (எம்.ஐ.டி.எஸ்) என்ற சிறுநிறுவனம் உருவாக்கியிருந்தது.
• 1975-ல் இருவரும் இணைந்து ‘மைக்ரோ சாஃப்ட்’ நிறுவனத்தைத் தொடங்கினர். 1978-ம் ஆண்டு அந்த நிறுவனம் இரண்டரை மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது. அப்போது கேட்ஸுக்கு வயது 23.
• மென்பொருள் வடிவமைப்பில் மட்டுமல்லாமல் வியாபார உத்திகளிலும் புரட்சியைப் புகுத்தினார் கேட்ஸ். 1980-ல் ஐ.பி.எம்-உடன் தொழில் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.
• 1983-ல் பிரிட்டனிலும், ஜப்பானிலும் மைக்ரோசாஃப்ட் கிளை பரப்பியது. போட்டி நிறுவனங்களாக இருந்தாலும், ஆப்பிளும் மைக்ரோசாஃப்டும் கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொண்டன. உங்கள் கைகளில் தவழும் வின்டோஸ் பிறந்தது இப்படிதான்.
• கேட்ஸ் நூலாசிரியரும்கூட. தனது சகாக்களுடன் இணைந்து இரண்டு நூல்களை எழுதினார். தனி நபர் கணினிப் பயன்பாட்டுப் புரட்சி மற்றும் அதிவேகத் தகவல் தொடர்பின் வரவு உலகை எவ்வாறு மாற்றப்போகிறது என்பதைப் பற்றி அவர் அதில் எழுதினார்.
• தன் நிறுவனத்தின் பணிபுரிந்த மெலின்டாவை திருமணம் புரிந்தார். மெலின்டாவின் மனிதநேயம் இவரையும் பற்றிக் கொண்டது. ‘வில்லியம் ஹெச். கேட்ஸ் ஃபவுண்டேஷன்’ மற்றும் ‘பில் அன்ட் மெலின்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன்’ தொடங்கப்பட்டன. உலகம் முழுவதும் நலிவுற்றோருக்கு கல்வியும் மருத்துவமும் அளிக்கின்றன அந்த அமைப்புகள்.
• 20-ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிகுந்த நபர் என்றது டைம் பத்திரிகை. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் கேட்ஸுக்கு 
கவுரவம் தேடிக் கொண்டன.

Source : http://tamil.thehindu.com/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி