விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு செயல்பாடு

ஸ்டார்ட் மெனு மீண்டும் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தரப்பட்டிருப்பது, விண்டோஸ் பயனாளர்களுக்குப் பெரிய விஷயமாக இருந்தாலும், விண்டோஸ் 10ல் அதைக் காட்டிலும் சிறப்பான சில வசதிகள் தரப்பட்டுள்ளன. இருப்பினும், ஸ்டார்ட் மெனுவில் தற்போது தரப்பட்டுள்ள வடிவமைப்பு அனைவரின் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. முந்தைய ஸ்டார்ட் மெனுவின் வசதிகளைக் காட்டிலும் கூடுதலான வசதிகள் தரப்பட்டுள்ளது மட்டுமின்றி, அதன் வடிவமைப்பும் மிக எளிதாக அதனை இயக்குவதற்கு வழிகள் தருவதாக அமைந்துள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.

ஸ்டார்ட் மெனு தற்போது லைவ் டைல்ஸ் என்று அழைக்கப்படும், எப்போதும் இயக்கத்தில் உள்ள அப்ளிகேஷன்களின் நிலையைக் காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் வலது பக்க பிரிவில், நீங்கள் விரும்பும், அல்லது அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை பின் செய்து வைக்கலாம். விண்டோஸ் போன் மெனுவில், நாம் அடிக்கடி அழைப்பவரின் எண்ணை பின் செய்வது போல, இங்கு நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷனை பின் செய்து அமைக்கலாம். லைவ் டைல்ஸ் என்பவை உயிர்த்துடிப்புள்ளவை. அதாவது, அதன் இயக்கம் அந்த டைலில் காட்டப்பட்டு கொண்டே இருக்கும். Dynamic என்ற வகையில் அமைந்தவை. உங்கள் இடத்திற்கேற்ற, அந்த நேரத்தைய செய்திகளை, தகவல்களை இவை தந்து கொண்டே இருக்கும். இதில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் போல்டரைக் கூட பின் செய்து வைக்கலாம். 
ஸ்டார்ட் மெனுவின் இடது பக்கம், வழக்கம் போல விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்தது போல் தரப்பட்டுள்ளது. எனவே, வழக்கம் போல, இதில் கிடைக்கும் தேடல் கட்டத்தைப் பயன்படுத்தி, நீங்கள் பெற விரும்பும் பைல் அல்லது அப்ளிகேஷனைப் பெறலாம். அத்துடன், அண்மையில் நீங்கள் பயன்படுத்திய புரோகிராம்களின் பட்டியலையும் இதில் பெறலாம். இதில் All Apps மெனுவும் தரப்பட்டுள்ளது. இதன் மூலம், கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள அனைத்து புரோகிராம்களின் பட்டியலையும் பெற்று, நமக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இந்த அனைத்து புரோகிராம் பட்டியலுடன், நெட்டு வாக்கில் செயல்படும் ஸ்குரோல் பார் தரப்பட்டுள்ளது. எனவே, கூடுதலான புரோகிராம்களை அடுக்காகப் பெற்று குழப்பமடைய வேண்டியதில்லை. விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்களில் மேற்கொண்டது போல, புரோகிராம்களுக்காக பிரவுஸ் செய்திடாமல், இந்த தேடல் கட்டத்தின் வழியாக, எளிதாக அவற்றைப் பெறலாம்.
ஸ்டார்ட் மெனுவினை மிக அதிகமாகப் பயன்படுத்தி, அதனையே சார்ந்து பலர் இருந்ததனை மைக்ரோசாப்ட் உணர்ந்து கொண்டு, இப்போது பழைய முறைப்படி செயல்படும் ஸ்டார்ட் மெனுவினைத் தந்துள்ளது. குறிப்பாக நிறுவன திட்டங்களை மேற்கொண்டவர்கள், ஸ்டார்ட் மெனுவினை அதிகம் சார்ந்திருந்தனர். இதனை மைக்ரோசாப்ட் ஏற்றுக் கொண்டதன் அடையாளமே, இப்போதைய ஸ்டார்ட் மெனு ஆகும். ஆனால், அதனுடன் புதிய யூசர் இண்டர்பேஸ் இணைந்து பயன்படுத்தும் வகையில் தரப்பட்டுள்ளது. இது மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களை, புதிய தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்த விடுக்கும் அழைப்பாகும். நிச்சயம் பயனாளர்கள், புதிய வகை இடைமுகத்திற்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
இந்த ஸ்டார்ட் மெனுவின் மேலாக, நம் யூசர் அக்கவுண்ட் ஐகான் தரப்படுகிறது. எனவே, இதனைப் பயன்படுத்தி கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை லாக் செய்து கொள்ளலாம். இன்னொரு பவர் பட்டனை அழுத்தி, கம்ப்யூட்டரை ஸ்லீப், ஷட் டவுண் அல்லது ரீ ஸ்டார்ட் செய்து கொள்ளலாம்.
இதன் கீழாகத் தரப்பட்டுள்ள பேனலில், பைல் எக்ஸ்புளோரர் மற்றும் பைல்களுக்கான ஷார்ட் கட் கீகளை அமைத்துக் கொள்ளலாம். பைல் எக்ஸ்புளோரர் ஐகான் அருகே கிடைக்கும் அம்புக் குறியை அழுத்தினால், அண்மையில் நாம் பயன்படுத்திய போல்டர்கள் மற்றும் பைல்கள் காட்டப்படுகின்றன. 
விண்டோஸ் 8.1 சிஸ்டத்தில் தரப்பட்டது போல, ஸ்டார்ட் பட்டனில் ரைட் கிளிக் செய்தால், ஒரு 'power menu' கிடைக்கிறது. இதில் கண்ட்ரோல் பேனலை உடனடியாகப் பெறும் வழி கிடைக்கிறது. அத்துடன், Run, Disk Management மற்றும் Task Manager போன்ற 
கம்ப்யூட்டர் செயல்பாடுகளில் அடிப்படை மாற்றங்களைத் தருகிற வசதிகளையும் உடனடியாகப் பெறலாம்.
இப்போது தரப்பட்டிருக்கும் பெரியதொரு மாற்றம் என்னவெணில், ஸ்டார்ட் மெனுவினையே அளவில் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ மாற்றி அமைக்கலாம். அதற்காக, மிகவும் சிறியதாக அமைக்க முடியாது. பழைய ஸ்டார்ட் ஸ்கிரீன் அளவு வரை செல்லலாம்.
ஸ்டார்ட் மெனுவில் உள்ள எந்த அப்ளிகேஷனிலும், ரைட் கிளிக் செய்தால், பல ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. டாஸ்க்பாரில் பின் அப் செய்வது, ஸ்டார்ட் மெனுவில் இருந்து அப்ளிகேஷனை நீக்குவது, பெர்சனல் கம்ப்யூட்டரிலிருந்தே அப்ளிகேஷனை நீக்குவது போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். விண்டோஸ் 8 ஸ்டார்ட் ஸ்கிரீனில் உள்ளது போல, லைவ் டைல்ஸ்களை, நம் விருப்பப்படி மாற்றி அமைக்கலாம்.
சில குறிப்பிட்ட விண்டோஸ் லைவ் டைல்ஸ்களின் இயக்கத்தினை நிறுத்தி வைக்கலாம். சிலருக்கு தங்களுக்கு எத்தனை இமெயில் கடிதங்கள் வந்துள்ளன போன்ற தகவல்களை விரும்ப மாட்டார்கள். அவர்கள் இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தலாம். டைல்ஸ்களின் அளவினை Small, Medium, Wide and Large என அளவில் மாற்றி அமைக்கலாம்.
ஸ்டார்ட் மெனுவில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்தால் இன்னும் இரண்டு ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. அவை — Personalize and Properties ஆகும். முதலில் தரப்பட்டுள்ள Personalization செயல்பாடு, அவ்வளவு முக்கியமானதல்ல. கண்ட்ரோல் பேனலில் உள்ள ஒரு சிறிய பிரிவு தரும் முக்கியம் இல்லாத சில வேலைகளை மேற்கொள்ள வழி தருகிறது. ஸ்டார்ட் மெனுவின் வண்ணம் மாற்றுவது, விண்டோ பார்டர்களை மாற்றுவது போன்ற சில நகாசு வேலைகளையே இதில் மேற்கொள்ளலாம். 
Properties பிரிவு நாம் ஆர்வமாக மேற்கொள்ளும் பல வேலைகளுக்கு வழிகாட்டியாக உள்ளது. டாஸ்க் பாருக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. கண்ட்ரோல் பேனலில் உள்ள ஸ்டார்ட் மெனு, ப்ராப்பர்ட்டீஸ் என்னும் அப்ளிகேஷனைத் தருகிறது. இதில் என்ன வேடிக்கை என்றால், இது தொடங்கும்போதே, டாஸ்க்பார் டேப் இயக்கப்பட்டு கிடைக்கிறது. இதில் கிளிக் செய்தால், இன்னும் சில ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இதில் மேலாக, Use the Start Menu என்ற செக் பாக்ஸ் கிடைக்கிறது. ஸ்டார்ட் ஸ்கிரீன் தரப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஸ்டார்ட் ஸ்கிரீனைத் தேடிப் பெறுபவர்கள் மிகவும் குறைவாகத்தான் இருப்பார்கள் என்ற எண்ணத்தில், அது தரப்படவில்லை.
வேறு ஆப்ஷன்களில் குறிப்பிடத்தக்கது, யூசர் அக்கவுண்ட்களில் privacy அமைக்கும் வழியாகும். நம் பெர்சனல் தகவல்கள் டைல்களில் காட்டப்படுவதனை நிறுத்தலாம். அண்மையில் பயன்படுத்தப்பட்ட புரோகிராம்களைக் காட்டுவதனையும் நிறுத்தலாம். ஸ்டார்ட் மெனுவில் காட்டப்படுபவை, படிப்படியாகக் காட்டப்படும் வகையில் அமைக்கப்பட வேண்டுமா என்பதனையும் இங்கு கிடைக்கும் ஆப்ஷன் மூலம் வரையறை செய்திடலாம். கர்சரைக் கொண்டு சென்றாலே, துணை மெனுக்கள் திறக்கப்படும் நிலைக்குச் செல்ல வேண்டுமா என்பதனை இங்கு அமைக்கலாம். அதே போல புரோகிராம்களை இழுத்துச் சென்று, நாம் விரும்பும் இடத்தில் அமைக்கும் வசதியும் தரப்படுகிறது. மேலும், கண்ட்ரோல் பேனல் போன்ற கம்ப்யூட்டரை நிர்வகிக்கும் டூல்களையும் ஸ்டார்ட் மெனுவில் காட்டும்படி அமைக்கலாம். நம் தனிப்பட்ட போல்டர்களான மை மியூசிக், வீடியோ போன்ற போல்டகளையும் நாம் விருப்பப்பட்டால், ஸ்டார்ட் மெனுவிற்குக் கொண்டு வரலாம். இந்த புதிய ஸ்டார்ட் மெனு குறித்து என்ன புகழ்ந்து எழுதினாலும், மைக்ரோசாப்ட் இதில் பழைய ஸ்டார்ட் பட்டனைத் தரவில்லை எனப் பலர் அலுத்துக் கொள்கின்றனர். ஆனால், இதில் மைக்ரோசாப்ட் தன்னுடைய நிலையை மாற்றிக் கொள்ளவில்லை.

Source : http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22386&ncat=4

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி