Short Film: மை டியர் அமெரிக்கன்ஸ்

மை டியர் அமெரிக்கன்ஸ்: குறும்படம்





அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்த இளம் சீக்கிய தம்பதி, ஜூலை 4 கொண்டாட்டத்துக்கு ஆயத்தமாவதில் தொடங்குகிறது படம். நகரின் ஒதுக்குப்புறமாகக் கட்டப்பட்டிருக்கும் தங்கள் புது வீட்டில் காலைச் சமையலில் ஈடுபட்டிருக்கிறார் தேஜ்பிரீத் கவுர் சிங். காதுகளில் தொடங்கிக் கழுத்துவரை நீளும் தொங்கட்டான், சத்தமிடும் வளையல்கள், கழுத்தில் மெல்லிய சங்கிலி, அடர்நிற துப்பட்டா, கூந்தலில் ஊஞ்சலாடும் குஞ்சலம் என தேஜ் பிரீத்தின் ஒவ்வொரு அங்கத்திலும் இந்தியக் கலா்சாரம் பளிச்சிடுகிறது. பல்தேவ் தன் மனைவியை உற்சாகத்துடன் ஷாப்பிங் அழைத்துச் செல்கிறார்.


தாடி வளர்த்துத் தலையில் டர்பன் அணிந்திருக்கும் அவர் தன்னை ஒரு அமெரிக்கன் என்று பெருமிதத்துடன் அறிவித்துக் கொள்கிறார். “உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தால் தெரியும்” என்று சீண்டும் மனைவியிடம், “பார்த்தேனே. அதில் ஸ்டைலான அமெரிக்க இளைஞன்தான் தெரிந்தான்” என்று சிரிக்கிறார் பல்தேவ். அமெரிக்கச் சூழ்நிலையோடும் மனிதர்களோடும் ஒன்ற முடியாத தவிப்பைப் பிரதிபலிக்கிறது தேஜ்பிரீத்தின் முகம்.


காரில் பல்தேவ் மேற்கத்திய இசையை ஓடவிட்டு ரசிக்க, அதை மாற்றிவிட்டு பாங்க்ரா பாடலை ஒலிக்கவிடுகிறார் தேஜ்பிரீத். பிரமாண்டமான ஷாப்பிங் மால், தேஜ்பிரீத்துக்கு மயக்கத்தையே வரவழைத்துவிடுகிறது. அங்கே தயக்கத்தோடும் கூச்சத்தோடும் வளையவருகிறார்.


வீடு திரும்புகிற தம்பதிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர்களுடைய வீட்டுச் சுவரில் ‘உன் வீட்டுக்குத் திரும்பிப் போ’ என்ற வெறுப்பு தொனிக்க ‘Go Home Osama’ என்று கொட்டை எழுத்துக்களில் யாரோ எழுதிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அதைப் பார்த்து அதிர்ச்சியடைகிற பல்தேவ், தான் அணிந்திருக்கும் அமெரிக்கக் கொடி அச்சிடப்பட்ட ஷர்ட்டைக் கழற்றி எறிகிறார். துக்கத்தில் குமுறும் கணவனைத் தேற்றும் வகையறியாமல் தேஜ் பிரீத் தவிக்கிறார். சிறிது நேரம் கழித்துத் தன் கணவனை வெளியே அழைத்துச் சென்று தங்கள் வீட்டுச் சுவரைக் காட்டுகிறார் தேஜ் பிரீத். அங்கே அவர்களுடையHome மட்டுமே இருக்கிறது. அவர்கள் இருவரின் இணைந்த கைகள் அதை உறுதிப்படுத்துகின்றன.


இந்தக் குறும்படம் பல கேள்விகளை நம் முன் வைக்கிறது. ஒரு இந்தியன் அமெரிக்கக் குடியுரிமை பெற்று அமெரிக்கனாக இருப்பதற்கான அடையாளம் எது? அமெரிக்க இளைஞனைப் போல் துறுதுறுப்பும் துடிப்பும் நிறைந்தவனாகவும், தேசியக் கொடியை நெஞ்சில் அணிந்தவனாகவும்தான் பல்தேவ் இருக்கிறான். ஆனால் அவன் சுற்றி இருக்கிற அமெரிக்கர்களால் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவன் என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறான். அதனால் புறக்கணிக்கப்பட்டுக் குற்றவாளியாக்கப்படுவதையும் எப்படிப் புரிந்துகொள்வது? சிலர் செய்கிற தவறுக்காக ஒரு இனத்தின் மீதே தீராத பகையுடன் இருக்கிற மனித மனங்களில் நிறைந்திருக்கும் பகைமை நிறைந்த வன்மத்தை வெளிப்படுத்துகிறது இந்தக் குறும்படம்.


புலம்பெயர்ந்து வாழும் இந்தியர்களின் மன உணர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் இந்தக் குறும்படம் பல விருதுகளை வென்றிருக்கிறது. சான்ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற்ற பெண்களுக்கான 2014-ம் ஆண்டுக்கான சர்வதேசத் திரைப்பட விழாவில் அர்பிதா குமார் கவுரவிக்கப்பட்டார். இன்னும் நிறைய விருதுகளும், அங்கீகாரங்களும் தொடர்ந்தபடியே இருக்கின்றன.

Source  : http://tamilrockers.net/

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி