உலகமெங்கும் ஆசிரியர்கள் நிறைய தேவைப்படுகிறார்கள். நாம் ஏன் நமது குழந்தைகள் நல்ல ஆசிரியர்கள் ஆக வேண்டும் என்று நினைக்கக்கூடாது?


ஆசிரியர் தினத்தையொட்டி டெல்லியில் மாணவ–மாணவிகளுடன் பிரதமர் நரேந்திரமோடி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.மாணவர்களுடன் பிரதமர் பங்கேற்ற ருசிகர கலந்துரையாடல் நிகழ்ச்சி காணொலி மூலம் இந்தியா முழுவதும் ஒளிபரப்பப்பட்டது.

மாணவர்களுடன் கலந்துரையாடல்

நாட்டின் 2–வது ஜனாதிபதியான டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினம், ஆசிரியர் தினமாக நேற்று நாடெங்கும் கொண்டாடப்பட்டது.

இந்த நாளில், இதுவரையில் இல்லாத வகையில், ஓர் அபூர்வ நிகழ்வாக டெல்லி மானக் ஷா பவனில் பிரதமர் நரேந்திரமோடி, நாடு முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடவும், அதை வீடியோ கான்பரன்ஸ் முறையில் இந்தியா முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி பிரதமர் மோடி, நேற்று மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

கொளுந்து விட்டு எரியச்செய்யுங்கள்
எதிர்கால இந்தியா என்று சொல்லப்படுகிற இந்த மாணவ சமுதாயத்துடன் பேசுவதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே உணர்கிறேன்.

சிறந்த மாணவர்கள்கூட, எதிர்காலத்தில் ஆசிரியர்கள் ஆவதற்கு ஏன் விரும்புவதில்லை என்பதை நாம் கண்டறிய வேண்டும். சிறந்த மாணவர்களிடம், ‘நீங்கள் எதிர்காலத்தில் ஒரு நல்ல ஆசிரியராக திகழ முடியும்’ என்ற உணர்வை நாம் ஏன் கொளுந்துவிட்டு எரியச்செய்ய முடியாது?

ஆசிரியர்கள் வழிகாட்டிகள்
உலகமெங்கும் ஆசிரியர்கள் நிறைய தேவைப்படுகிறார்கள். நாம் ஏன் நமது குழந்தைகள் நல்ல ஆசிரியர்கள் ஆக வேண்டும் என்று நினைக்கக்கூடாது? நிறையபேர் தாங்கள் பெயர் பெற்று விளங்குவதற்கு காரணம், தங்களது தாயும், ஆசிரியரும்தான் என்று கூறுகிறார்கள். உண்மையிலேயே மாணவர்களுக்கு சரியான வழிகாட்டி என்று சொன்னால், அது ஆசிரியர்கள்தான்.

புத்தகங்களுடனே சிக்கி விடாதீர்கள்
நமது இளைய தலைமுறையினர் ஆற்றல் வாய்ந்தவர்கள். ஒவ்வொரு நாளும் தொழில் நுட்பம் வளர்ந்துகொண்டே இருக்கிறது. நாம் நமது குழந்தைகள் தொழில் நுட்பத்தை இழக்க விட்டு விடக்கூடாது. அப்படி நாம் செய்தால் அது சமூகக்குற்றம் என்றே சொல்வேன்.

ஒவ்வொருவரும் விளையாட வேண்டும். வியர்வை சிந்த வேண்டும். வெறும் புத்தகங்களுடனேயே வாழ்க்கை சிக்கி விடக்கூடாது.

இன்றைக்கு பெரும்பாலான வேலைகள் கூகுள் குருவினால்தான் செய்யப்படுகிறது. அது தகவல்களை வேண்டுமானால் தரலாம். அறிவைத்தராது. உங்களது ஆசிரியர்கள் ஏராளமான அறிவுரைகளை தந்திருக்கலாம். இங்கிருந்து நீங்கள் சென்றபிறகு அவற்றை பின்பற்றுங்கள். நாம் கலந்துரையாடலாம். எனது நல்வாழ்த்துக்களை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்.

இவ்வாறு மோடி கூறினார்.

தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்கு சளைக்காமல், சிரித்தவாறே பதில் அளித்தார்.

உணர்வு எப்படி?
மாணவ, மாணவிகள் எழுப்பிய கேள்விகளும், மோடி அளித்த பதில்களும் வருமாறு:–

கேள்வி:– காந்தி நகரில் இருந்து டெல்லி வந்துள்ள நிலையில், நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

பதில்:– டெல்லியை சுற்றிப்பார்க்க எனக்கு இன்னும் நேரம் கிடைக்கவில்லை. வீட்டில் இருந்து அலுவலகம் வருகிறேன். அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு செல்கிறேன். பெரிய அளவில் நான் மாற்றத்தை உணரவில்லை.

நான் முதல்–மந்திரி பதவி வகித்த அனுபவம், மத்தியில் பணியாற்றுவதற்கு உதவி இருக்கிறது. நான் கடினமாக உழைக்க வேண்டும். அனேகமாக நான் இன்னும் சீக்கிரமாகவே எழ வேண்டும்.

உருவாக்கியது யார்?
கேள்வி:– உங்களை வடிவமைத்து உருவாக்கியது யார், உங்கள் அனுபவமா அல்லது உங்கள் ஆசிரியர்களா?

பதில்:– கல்வி, ஆசிரியர்கள், மதிப்பீடுகள் ஆகியவற்றுக்கு என் அனுபவத்தைப் போன்றே முக்கியத்துவம் உண்டு.

பேசியதில் பலன் என்ன?
கேள்வி:– எங்களுடன் பேசியதில் உங்களுக்கு என்ன பலன்?

பதில்:– நான் பலனை எதிர்பார்த்திருந்தால் இங்கே வந்திருக்க மாட்டேன். ஒவ்வொன்றும் பலனுக்காக அல்ல. எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல், வேலை செய்வது நல்லது. அது தரும் சந்தோஷம் வித்தியாசமானது.

நான் அடைந்த பெரிய பலன்?
எங்கள் முகத்தை எப்போதும் டி.வி.யில் பார்த்து இந்த நாடே சோர்வுற்று விட்டது. இன்றோ, அவர்கள் டி.வி.யில் குழந்தைகளைப் பார்த்திருக்கிறார்கள்.

கேள்வி:– நீங்கள் ஒரு தலைமை ஆசிரியர் மாதிரி என்கிறார்கள். ஆனால், நீங்களோ எங்களோடு நட்புணர்வோடு பழகுவதாக தோன்றுகிறது. நீங்கள் எப்படிப்பட்ட நபர்?

பதில்:– நான் ஹெட் மாஸ்டர் அல்ல. டாஸ்க் மாஸ்டர்... தலைமை ஆசிரியர் அல்ல... கடும் உழைப்பாளி. ஆனால் நான் மட்டுமே வேலை செய்து கொண்டிருக்கக்கூடாது. மற்றவர்களையும் வேலை செய்ய வைக்க வேண்டும். சுதந்திர தின விழா உரையிலேயே சொன்னேன். நீங்கள் 11 மணி நேரம் வேலை செய்வீர்கள் என்றால், நான் 12 மணி நேரம் வேலை செய்வேன்.

ஜப்பானுக்கும், இந்தியாவுக்கும்?
கேள்வி:– நீங்கள் ஜப்பானில் ஒரு பள்ளிக்கூடத்துக்கு சென்றீர்கள். அங்குள்ள பள்ளிக்கூட அமைப்பிற்கும், இங்குள்ள அமைப்பிற்கும் என்ன வித்தியாசத்தை காண்கிறீர்கள்?

பதில்:– ஜப்பானில் கற்றுக்கொள்வதில் 100 சதவீதம் முக்கியத்துவம் காட்டுகிறார்கள். கற்பித்தல் இல்லை. அங்கே பள்ளிக்கூடத்திற்கு பிள்ளைகளை பெற்றோர் அழைத்துக்கொண்டு சென்று விடுவதும் இல்லை. பெற்றோர், அனைத்து பிள்ளைகளையும் சமமாக நடத்துகிறார்கள். ஜப்பானிய குழந்தைகள் வியக்கத்தக்க அளவில் ஒழுக்கமானவர்களாக இருக்கிறார்கள்.

ஆசிரியராக இருந்தால்...
கேள்வி:– நீங்கள் ஆசிரியராக இருந்தால், ஒரு சோம்பேறியான புத்திசாலி மாணவர் அல்லது கடினமாக உழைக்கிற சராசரி மாணவர் ஆகிய இருவரில் யாரிடம் அதிகம் கவனம் செலுத்துவீர்கள்?

பதில்:– ஆசிரியர் என்பவர் யாரிடமும் பாரபட்சம் காட்டக்கூடாது.

ஆசிரியர்களுக்கு எல்லா மாணவர்களும் ஒன்றுதான். ஒவ்வொரு குழந்தையிடமும் ஏதோ சில திறமைகள் இருக்கும். அதைக் கண்டுபிடித்து ஊக்கம் தர வேண்டும்.

அரசியல் தொழில் அல்ல
கேள்வி:– அரசியல் கஷ்டமானதா? நீங்கள்(அரசியல்) மன அழுத்தத்தை எப்படி மிகவும் நேர்த்தியாக கையாள்கிறீர்கள்?

பதில்:– அரசியலை ஒரு தொழிலாக பார்க்கக்கூடாது. அதை மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

நான் உழைக்கும்போது சோர்வு அடைந்ததே இல்லை. ஏனென்றால் இந்தியாவை நான் எனது குடும்பமாகவே பார்க்கிறேன்.

பெண் குழந்தைகள் கல்வி
கேள்வி:– பெண் குழந்தைகள் கல்விக்கு நீங்கள் இனி என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்போகிறீர்கள்?

பதில்:– பெண் குழந்தைகளை படிக்க வைப்பதில் முக்கியத்துவம் செலுத்துகிறேன்.

ஒரு பெண் குழந்தைக்கு, வீட்டின் அருகிலேயே கல்வி கற்கும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும். தரமான கல்வியும் முக்கியம். பெண்குழந்தைகள் கல்வியை இடையிலேயே நிறுத்தி விடுவதை தடுத்து நிறுத்துகிற வகையில், பெண் குழந்தைகளுக்கு அவர்களது வீடுகளுக்கு அருகாமையில் பள்ளிக்கூடங்களை நிறுவுவது பற்றி மாநில அரசுகளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.

என்ஜினீயர்கள், டாக்டர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என படித்த அனைவரும், வாரத்தில் ஒரு முறை அருகில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும். இது நாட்டுக்கு செய்யக்கூடிய பெரிய சேவையாக அமையும். கற்பித்தலை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். தேசத்தை கட்டமைப்பதில் இது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

நாட்டில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இங்கிருந்து ஆசிரியர்களை வெளியே வேலைக்கு அனுப்புகிற நிலை உருவாக வேண்டும். ஆசிரியர் வேலையில் இழந்த புகழை நாம் மீட்டெடுக்க வேண்டும்.

இவ்வாறு மோடி பதில் அளித்தார்.

ஒரு மாணவரின் கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளிக்கையில், ‘‘நான் யார் என்பது எனக்கு தெரியாது. நான் யார் என்பதை நான் தீர்மானித்து விட முடியாது’’ என பதில் அளித்தது நெகிழ்ச்சியாக அமைந்தது.

நன்றி தெரிவித்த மோடி
குழந்தைகள் தனக்கு புதிய சக்தியை அளித்திருப்பதாகவும், அவர்கள் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் என்று அறிவது சுவாரசியமாக இருந்ததாகவும் பெருமிதத்துடன் கூறினார்.

குழந்தைகள் தங்களுக்குள் இருக்கிற குழந்தைத்தனத்தை கொன்றுவிடக்கூடாது என அறிவுறுத்தினார். அப்போது அவர், ‘‘உங்களுக்குள் இருக்கிற குழந்தையை உயிர்ப்பியுங்கள்’’ என்று கூறினார்.

மாணவர்களுடனான கலந்துரையாடலை ஒளிபரப்பிய டி.வி. சேனல்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார்.

மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதை நாட்டில் உள்ள பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் வீடியோ கான்பரன்ஸ் முறையில் ஒளிபரப்பி, பலன் பெறச்செய்தன

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி