பாடத்தை கற்பிப்பதுடன் நிற்காமல் மாணவர்களின் வாழ்க்கைக்கு தேவையான கல்வியையும் ஆசிரியர்கள் புகட்டவேண்டும் என்று ஆசிரியர் தினவிழாவில் அப்துல்கலாம் பேசினார்.

பாடத்தை கற்பிப்பதுடன் நிற்காமல் மாணவர்களின் வாழ்க்கைக்கு தேவையான கல்வியையும் ஆசிரியர்கள் புகட்டவேண்டும் என்று ஆசிரியர் தினவிழாவில் அப்துல்கலாம் பேசினார்.


சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆசிரியர்தினவிழா நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தலைமை தாங்கினார்.விழாவில் முன்னாள் ஜனாதிபதியும், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியரும், விஞ்ஞானியுமான ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார். மேலும் அவர் கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர்கள் ஜே.பிரகாஷ், கே.பழனிவேலு, கூடுதல் பேராசிரியர் எஸ்.ஆனந்த குமார், ஏ.சி.டெக். கல்லூரி கூடுதல் பேராசிரியர் எஸ்.கலைச்செல்வம், திண்டுக்கல் அண்ணா பல்கலைக்கழக கல்லூரி உதவி பேராசிரியர் என்.விஸ்வநாதன், கிண்டி என்ஜினீயரிங் கல்லுரி பேராசிரியை (ஆக்டிவ் கன்சல்டன்சி விருது) கே.பி.ஜெயா ஆகிய 6 பேர்களுக்கு தீவிர ஆராய்ச்சியாளர் விருது வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.


விழாவில் அப்துல்கலாம் பேசியதாவது:-


ஆசிரியர் தினவிழாவில் எனக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களை நினைத்துப்பார்க்கிறேன். நான் ராமேசுவரத்தில் ஒரு கூரைப்பள்ளிக்கூடத்தில் படித்தேன். 5-வது வகுப்பு படித்தபோது சிவசுப்பிரமணிய அய்யர் ஆசிரியராக இருந்தார்.


அவர் ஒரு நாள் பறவை பறப்பது போல கரும்பலகையில் தத்ரூபமாக படம் வரைந்தார். பின்னர் பறவை எப்படி பறக்கிறது அதுபோலத்தான் விமானமும் பறக்கிறது. பறவையை பார்த்துதான் விமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று எங்களுக்கு ஊக்கப்படுத்தினார். அவர் அன்று ஊக்கப்படுத்தியதால்தான் நான் சென்னை எம்.ஐ.டி. கல்லூரியில் ஏரோனாட்டிக்கல் படித்து பின்னர் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். எனவே அவரைப்போன்ற ஆசிரியர்கள் தேவை.


மேலும் நான் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படித்தபோது பாதிரியார் சின்னத்துரை எனக்கு வகுப்பு எடுத்தார். அவர் தான் நூலகத்தில் போய் புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை எங்களுக்கு ஏற்படுத்தினார். எந்த பாடத்தையும் மனதில் பதியும்படி பாடம் நடத்தினார்.


ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதுடன் தனது பணி நிறைவடைந்துவிட்டது என்று எண்ணாமல் மாணவர்களின் திறமையை அறிந்து அந்த திறமையை மேம்படுத்துவது நல்லது. பல்வேறு தொழில்நுட்பங்களை மாணவர்களுக்கு புகட்டுங்கள். மாணவர்களின் வாழ்க்கைக்கு தேவையான கல்வியை புகட்டுங்கள். ஆசிரியர்கள் மாணவர்களை ஏற்றிவிடும் ஏணியாக இருக்கவேண்டும். அன்பு காட்டவேண்டும். சாதி, மதம், மொழி வேறுபாடு இன்றி மாணவர்களிடம் பழகவேண்டும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தாயாக, தந்தையாக, சகோதரராக, சகோதரியாக இருங்கள். அனைத்து மாணவர்களையும் சமமாக பாவிக்கவேண்டும். மாணவர்களிடம் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் வளருங்கள். அர்ப்பணிப்பு உணர்வுடன் ஆசிரியர்கள் பணிபுரியுங்கள்.இவ்வாறு அப்துல்கலாம் பேசினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி