தமிழக ஆழ்துளைக் கிணறு சட்டம் தேவையா?

குழந்தைகளை மட்டுமல்ல, விவசாயத்தையும் கொல்கின்றன ஆழ்துளைக் கிணறுகள்

ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கும் அதனைப் பாதுகாப்பான முறையில் செயல்படுத்துவதற்குமான சட்ட வடிவமைப்பை, தமிழக அரசு ஆகஸ்ட் 12, 2014 அன்று நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டத்தின் மூலமாக ஆழ்துளைக் கிணறு மட்டுமல்லாமல் வேறு எந்தக் கிணறு அமைப்பதற்கும் மாவட்ட ஆட்சியர் மூலமாக உரிமம் பெற்றாக வேண்டும். இதைக் கடைப்பிடிக்காதவர்களுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்கவும் இந்தச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக ஆழ்துளைக் கிணறு மூலமாக நீர்ப்பாசன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் விவசாய வளர்ச்சி உயர்வதற்குக் கிணறுகள் முக்கியக் காரணமாக இருந்தபோதிலும், சமீப காலமாகப் பெருகிவரும் குழாய்க் கிணறுகளால் விவசாயத் துறையில் மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலிலும் சமுதாயத்திலும் பிரச்சினைகள் ஏற்பட்டுவருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இச்சட்டத்தின் மூலமாக ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்காக அரசால் வழங்கப்படும் அனுமதிச் சான்றைப் பெற விவசாயிகள் அதிகத் தொகை செலவிட வேண்டுமென்றும், இது காலப்போக்கில் விவசாய உற்பத்தியைப் பாதிக்கும் எனவும் சில தமிழக விவசாய அமைப்புகள் கூறிவருகின்றன. இந்தக் கூற்றில் ஏதேனும் உண்மை உள்ளதா என்றும் ஆழ்துளைக் கிணறு போன்ற சட்டங்கள் ஏன் தமிழகத்துக்குத் தேவை என்றும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகிறது.

படுபாதாளத்தில் நீர்மட்டம்

பசுமைப் புரட்சியை இந்தியாவில் அறிமுகப்படுத்திய பிறகு, விவசாய வளர்ச்சிக்கு ஆழ்துளைக் கிணறுகள் முக்கியப் பங்காற்றியுள்ளன என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. 1965-66 ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த நீர்ப்பாசனப் பரப்பில் வெறும் 32 சதவீதமாக இருந்த கிணற்றுப் பாசனத்தின் அளவு, இன்று 63 சதவீதமாக வளர்ந்துள்ளது. ஆனால், காலப்போக்கில் கட்டுக்கடங்காத ஆழ்துளைக் கிணறுகளின் வளர்ச்சியால், விவசாயத்துக்கு மட்டுமல்லாமல் குடிநீருக்காகவும், பிற தேவைகளுக்காகவும் நிலத்தடி நீர் தொடர்ந்து சுரண்டப்பட்டுவருகிறது. இதனால், நிலத்தடி நீர் தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கிடுகிடுவெனக் குறைந்து படுபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘மத்திய நிலத்தடி நீர் வாரியம்’ 2006-ம் ஆண்டு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெள்ளத்தெளிவாக இதைக் கூறியிருக்கிறது.

ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக நிலத்தடி நீரைத் தொடர்ந்து கட்டுப்பாடில்லாமல் உறிஞ்சுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைவது மட்டுமல்லாமல், பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களும் விவசாயிகளுக்கு ஏற்படுகின்றன. உதாரணமாக, நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் குறைந்த ஆழம் கொண்ட கிணறும் ஆழ்துளைக் கிணறுகளும் உபயோகப்படுத்த முடியாமல் போய்விடுகின்றன. தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள ஒரு புள்ளிவிவரப்படி, 2000-01-ம் ஆண்டில் மொத்தமாக 18.33 லட்சம் கிணறுகள் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 1.59 லட்சம் கிணறுகள் ஒன்றுக்கும் பயன்படாமல் போய்விட்டன. இதற்கு முக்கியக் காரணம், ஆழ்துளைக் கிணறுகளே!

விவசாயத்தில் கிடைக்கும் குறைந்த வருமானம் காரணமாகப் பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டுவரும் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கட்டுப்பாடில்லாமல் ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக நீரை உறிஞ்சுவது சுற்றுச்சூழல் பிரச்சினைகளையும் ஏற்படுத்திவருகிறது. 2006-ல் நீலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கைப்படி, தமிழகத்தில் பயன்பாட்டுக்குத் தகுந்த நிகர நிலத்தடி நீரின் அளவு 20.76 பி.சி.எம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் தற்போது 17.65 பி.சி.எம் அளவு நிலத்தடி நீர் உபயோகத்தில் உள்ளது. அதாவது, மொத்த நீரின் அளவில் ஏறக்குறைய 85% நிலத்தடி நீரைத் தற்போது தமிழகம் பயன்படுத்திவருகிறது. இதன்படி, மீதமுள்ள நீரின் அளவு வெறும் 15% மட்டுமே என்பது அதிர்ச்சியான உண்மையாகும்.

இதைவிட அதிர்ச்சி தருவது எதுவெனில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 385 வட்டங்களுள் 240 வட்டங்களில் உறிஞ்சப்படும் நிலத்தடி நீரின் அளவு 70 சதவீதத்துக்கும் அதிகம் என்று மத்திய நீர்ப்பாசன அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுவதால், பல கடலோர மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீரின் தன்மையை மாற்றி விவசாயத்துக்குப் பயன்படுத்த முடியாமல் செய்துவிட்டது. இது போன்ற மோசமான நிலையிலிருந்து மீள்வதற்குக் கடுமையான சட்டங்களை இயற்றி அதனை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில், தமிழகத்தின் விவசாய வளர்ச்சி எதிர்காலத்தில் பாதிக்கப்பட்டுவிடும்.

நிலத்தடி நீரைத் தொடர்ந்து உறிஞ்சுவதால் விவசாயிகளுக்கு மட்டுமல்ல அரசுக்கும் பெரிய அளவில் இழப்பு ஏற்படுகிறது. முதலாவதாக, நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் ஒரு ஏக்கர் நீர்ப்பாசனம் செய்வதற்காக மின்சார மோட்டார்களை அதிக நேரம் இயக்க வேண்டிவரும். இது மின்சாரத்தின் உபயோகத்தைப் பல மடங்கு உயர்த்திவிடும். தமிழகத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் கொடுக்கப்பட்டுவருவதால், இதன்மூலமாக அரசுக்கு ஆகும் செலவு பன்மடங்கு அதிகரிக்க நேரிடும். விவசாயிகளைப் பொறுத்தமட்டில் நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து குறைந்துவருவதால், அவர்களால் பழைய ஆழ்துளைக் கிணறுகளைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும். இதனால் விவசாயிகள் புதிய ஆழ்துளைக் கிணறுகளையோ தற்போது உபயோகித்து வரும் மின்சார மோட்டார்களையோ மாற்ற நேரிடும். இந்த மாற்றங்களால் விவசாயிகளுக்கு, தேவையில்லாச் செலவுகள் அதிகரித்து, பொருளாதாரச் சிக்கல்கள் ஏற்படுகின்றன.

விவசாய உற்பத்தி பாதிக்கப்படுமா?

இந்த ஆழ்துளைக் கிணறு சட்டத்தால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் என்று ஒரு சிலர் கூறிவருகின்றனர். இது உண்மையல்ல. ஆழ்துளைக் கிணறு மூலமாகக் கட்டுப்பாடில்லாமல் எடுக்கப்படும் நிலத்தடி நீரால், திறந்த கிணறு மற்றும் நடுத்தர ஆழமுடைய துளைக் கிணறுகளுள்ள விவசாயிகள் பயிர்ச் சாகுபடி செய்ய முடியாமல் சிரமப்படுகிறார்கள். மேலும், ஆழ்துளைக் கிணற்று நீரை விவசாயிகள் வீணடித்து, திறனற்ற முறையில் சாகுபடி செய்துவருகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், இது போன்ற சட்டங்களைக் கொண்டுவருவதால் மட்டுமே நிலத்தடி நீரின் பயன்பாட்டுத் திறனை அதிகரித்து விவசாய உற்பத்தியைத் தமிழகத்தில் அதிகரிக்க முடியும்.

நிலத்தடி நீரைத் தற்போது யார் உறிஞ்சுகிறார்கள், எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பது புரியாத புதிராகவே உள்ளது. ஆழ்துளைக் கிணறுகளைக் கண்காணிப்பதற்கான சட்டம் இல்லாத காரணத்தைப் பயன்படுத்தி, திருட்டுத்தனமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு சென்னை போன்ற பெருநகரங்களில் கள்ளச்சந்தையில் நல்ல விலைக்கு விற்றுப் பலரும் அதிக வருமானம் ஈட்டிவருகிறார்கள். இது மட்டுமல்லாமல், பன்னாட்டு நிறுவனங்களும், நம் நாட்டுப் பெருநிறுவனங்களும் நிலத்தடி நீரை எல்லையில்லாமல் உறிஞ்சி நல்ல விலைக்கு விற்றுவருகின்றன. இது போன்ற நிலத்தடி நீர்த் திருட்டைக் கண்காணிக்க சட்டம் கொண்டுவரப்படவில்லையென்றால், தமிழக விவசாயிகளின் எதிர்காலம் இருட்டாகிவிடாதா என்பதை, தமிழக ஆழ்துளைக் கிணறு சட்டத்தைத் தற்போது விமர்சிக்கும் விவசாயிகள் சங்கம் உணர வேண்டும். இப்படியாக, சட்டத்துக்குப் புறம்பான நீர்த் திருட்டுகளால் ஏராளமான விவசாயிகள் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், அரசுக்கும் எந்த வருமானமும் கிடைப்பதில்லை.

தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் தற்போதைய மொத்த விவசாயப் பொருட்களின் உற்பத்தியில் நிலத்தடி நீரின் பங்கு ஏறக்குறைய மூன்றில் இரண்டு மடங்காக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நிலத்தடி நீரின் உபயோகத்தைக் கட்டுப்படுத்தி சீரான முறையில் உபயோகப்படுத்த கடுமையான தண்டனைச் சட்டங்களை இயற்ற வேண்டியது அவசியம். வேகமாகக் குறைந்துவரும் நிலத்தடி நீரை முறைப்படுத்த வேண்டிய அவசியத்தை இந்தியாவின் சமீபத்திய தேசிய நீர்க் கொள்கையும் நன்றாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது.

இந்தியாவில் பயன்படுத்தக் கூடிய நீரின் அளவு வேகமாகக் குறைந்துவருகிறது. மத்திய அரசின் தற்போதைய புள்ளிவிவரப்படி, இந்தியாவிலுள்ள மொத்த நீரைப் பயன்படுத்தி அதிகபட்சமாக140 மில்லியன் ஹெக்டேர்களுக்கு நீர்ப்பாசனம் கொடுக்க முடியும். ஆனால், இதில் ஏறக்குறைய 81% நீரை நீர்ப்பாசனத்துக்காக இதுவரை பயன்படுத்திவிட்டோம். மீதமுள்ள பயன்படுத்தக் கூடிய நீரின் அளவு மற்ற பெரிய மாநிலங்களைவிட தமிழகத்தில் மிகவும் குறைவு. குறைந்துவரும் ஆற்றுப் பாசனம், குளத்துப் பாசனத்தின் காரணமாக, நிலத்தடி நீரை நம்பித்தான் இன்றைய விவசாயம் பெரும்பாலும் நடந்துகொண்டிருக்கிறது. எனவே, நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கான இப்படிப்பட்ட சட்டங்கள் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும், விவசாய உற்பத்தியை அதிகரித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கும் உதவியாக இருக்கும் என்பதில் கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

- அ. நாராயணமூர்த்தி, பேராசிரியர், துறைத் தலைவர், பொருளியல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை, அழகப்பா பல்கலைக்கழகம்.


Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி