பி.எட் கல்வி பயில புரவிஷனல் சான்று கட்டாயம் இணைக்க வேண்டும் என ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பட்டப்படிப்பை தொடர்ந்து ஆசிரியர் பணிக்கு பிஎட் ஒரு வருட பட்டப்படிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் நடப்பு (2014-15) கல்வி ஆண்டிற்கான பிஎட் படிப்புக்கு பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கி உள்ளன. தனியார் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுப்பிரிவு மாணவர் சேர்க்கையும் நடந்துள்ளது . இந்த ஆண்டு முதல் முறையாக மாணவர் சேர்க்கை ஒற்றைச்சாளர முறையில் நடத்தப்பட்டது . கலந்தாய்வு மூலம் மாணவர்கள் கல்லூரிகளை தேர்வு செய்து , சேர்ந்துள்ளனர் . பிஎட் கல்வியில் சேர்ந்துள்ள பல மாணவர்கள் தாங்கள் படித்த பட்டப்படிப்புக்கு உரிய புலச்சான்று ( புரவிஷனல் சர்டிபிகேட் ) இணைக்காமல் மதிப்பெண் பட்டியல் மட்டும் அளித்துள்ளனர் . இது குறித்து பல்வேறு பிஎட் கல்லூரிகளில் இருந்து கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர் . அதில் மாணவர்கள் பயின்ற கல்லூரியின் பல்கலைக்கழகம் புலச்சான்று அளிக்காத நிலையில் புலச்சான்று இல்லாத மாணவர்களை சேர்க்க வழி உள்ளதா என கேட்டுள்ளனர் . உயர்கல்வி சட்ட விதிகளின்படி புரவிஷனல் சான்று இல்லாத மாணவர்களை சேர்க்கக்கூடாது என கல்வியில் பல்கலைக்கழகம் உத்தரவிட்டு , பிஎட் கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது . இது குறித்து , ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியதாவது : பிஎட் கல்வி என்பது ஓராண்டில் படித்து முடிக்கக்கூடியது . கல்வியியல் பல்கலைக்கழக விதிகளின்படி புலச்சான்று மாணவர் சேர்க்கைக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது . எனவே இதை கட்டாயம் இணைக்கவேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம் . பிஎட் பயில விரும்பும் மாணவர்களுக்காக பட்டம் முடித்த மாணவர்களுக்கு புலச்சான்று விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட சில பல்கலைக்கழகங்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளோம் . இவ்வாறு அவர் கூறினார்.