தமிழகத்தில் முதல்முறையாக சிடி வடிவில் பள்ளி பாடம்


தமிழகத்திலேயே முதன்முறையாக ஈரோடு அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பள்ளி பாடத்தை சிடி வடிவில் தயாரித்து மாணவர் களுக்கு வழங்கி அசத்தி உள்ளனர்.

         ஈரோடு பெரியார் வீதியில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் துவக்கப்பட்ட இப்பள்ளியில் தற்போது 250 பள்ளி மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வியை கற்று தருவதால் எப்போதும் இப்பள்ளியில் மட்டும் மாணவர் சேர்க்கை அதிகமாக இருக்கும். 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ஆங்கில வழி கல்வியுடன், வாரத்தின் இரண்டு நாட்கள் வீதம் யோகா, கராத்தே போன்ற பாடங்களையும் இப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பயிற்சியாளர்கள் மூலம் கற்று தருகின்றனர்.

அடுத்த கட்டமாக இப்பள்ளி ஆசிரியர் கள் தங்கள் சொந்த செலவில் தமிழகத்தி லேயே முதன்முறையாக முதல்பருவ பாடக்கல்வியை சிடியில் பதிவு செய்து தயாரித்துள்ளனர்.

இதுகுறித்து அரசு தொடக்கப்பள்ளி தலைமைஆசிரியர் முத்துராமசாமி கூறியது:

பள்ளி வகுப்பை முடித்து விட்டு வீட்டிற்கு செல்லும் மாணவர்கள் அதிகமாக டிவியையே பார்ப்பதாக பெற்றோர் புகார் கூறுகிறார்கள். மாணவனுக்கு பிடித்த டிவி மூலமாக பாடம் கற்றுத்தரும் வகையில் எங்கள் பள்ளியின் ஆசிரியைகள் சாந்தி, ஜெனிசெல்வகுமாரி, ரேணுகாதேவி, ஜூலிமெர்சிலீனா, ரேவதி, பூங்கோதை, வசந்தி, சித்ரா ஆகியோர் கொண்ட குழு சிடி வடிவில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான முதல்பருவ பாடங்களை சிடியில் தயாரித்துள்ளனர். அதன்படி பள்ளி மாணவனுக்கு எளிதில் புரியும் வகையில் பாடங்களை, படம் மூலம் காட்டி அதற்கான வார்த்தையை எழுத்தாக எழுதி போட்டு, உச்சரிப்பை ஒலி வடிவில் கூறி ஒவ்வொரு எழுத்துக்கும் அடியிலும் அம்புக்குறி நகர்ந்து கொண்டே செல்லும் வகையில் வடிவமைத்துள்ளோம்.
இதே போல அனைத்து பாடத்திற்கும் சிடி வடிவில் பாடத்திட்டத்தை தயாரித்துள் ளோம். தமிழ், ஆங்கில உச்சரிப்புகளை சிடி மூலம் காட்டி திரும்ப, திரும்ப கேட்கும் வகையில் பயிற்சி அளிப்பதன் மூலம் எழுத்து வடிவத்தை மனதில் ஆழமாக பதிய வைக்க முடிகிறது. சிடியில் பாடத்தை பதிவு செய்து அளிப்பதன் மூலம் பாடத்தை டிவி மூலமாக கற்று கொள்ளும் வாய்ப்பு மாணவனுக்கு கிடைக்கிறது.

கல்வி அறிவு இல்லாத பெற்றோர்களால் வீட்டில் பாடத்தை கற்றுத்தர முடியாது. அவர்களுக்கு இந்த சிடி வரப்பிரசாதமாக அமையும். மாறி வரும் கல்வி முறைக்கேற்ப மாணவனின் மன ஓட்டத்தை அறிந்து கல்வி கற்று கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த புதிய முயற்சியை தமிழகத்திலேயே முதன்முறையாக எங்க ளது அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் செய்துள்ளனர்.

இவ்வாறு தலைமையாசிரியர் முத்துராமசாமி தெரிவித்தார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி