வீடுகளில் பொக்கிஷம் புத்தகங்கள்

            புத்தக கண்காட்சி என்பது ஒரே இடத்தில், நூற்றுக்கணக்கான ஸ்டால்கள் அமைத்து, நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை, லட்சக்கணக்கான வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பது. இது இன்று உலகம் முழுவதும் நடத்தப்படுகிறது.

           சாதாரண கடையில் புத்தகம் வாங்குவதற்கும், புத்தக கண்காட்சியில் வாங்குவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. புத்தக கடையில் சில எழுத்தாளர்களின் புத்தகங்கள் மட்டுமே இருக்கும். கண்காட்சியில் பல்வேறு எழுத்தாளர்கள், பல்வேறு நாடுகள், பல்வேறு வகையிலானபுத்தகங்கள் ஒரே இடத்தில் கிடைக்கின்றன.

நூற்றுக்கணக்கான ஸ்டால்கள் இருப்பதால், ஒவ்வொன்றும் மற்றொன்றை விட வித்தியாசமாக இருக்கும். அதே போல புத்தகங்களுக்கான விலையும் இங்கு குறைவாகவே இருக்கும்.

உருவானது எப்போது

புத்தக கண்காட்சியின் வரலாறு, வெளிநாடுகளில் துவங்குகிறது. உலகின் முதல் புத்தக கண்காட்சி ஜெர்மனியில், 17ம் நூற்றாண்டிலேயே நடந்தது நவீன புத்தக கண்காட்சியும் உலகில் முதன்முதலாக ஜெர்மனியில் தான் (’பிராங்க்பர்ட் புத்தக கண்காட்சி’) 1949ல் தொடங்கப்பட்டது. இதுவே இப்போதும் உலகிலேயே பெரிய புத்தக கண்காட்சியாக இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் ’லண்டன் புத்தக கண்காட்சி’ உள்ளது. மூன்றாவது இடத்தில் இந்தியாவின் ’கோல்கட்டா புத்தக கண்காட்சி’ திகழ்கிறது.

இந்தியாவில் புத்தக கண்காட்சி, 1972ல் டில்லியில் தொடங்கியது. தமிழகத்தில், 1977ல் சென்னையில் முதன்முதலாக புத்தக கண்காட்சி தொடங்கியது. இன்று மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, ஈரோடு போன்ற பிற முக்கிய நகரங்களில் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது.

வீட்டில் நூலகங்கள்

நூலகங்கள் ஆலயங்களுக்கு இணையாக கருதப்படுபவை. கரடு முரடான வாழ்க்கை மேற்கொண்டோரை, சாதுக்களாக மாற்றிய மகத்துவம் மிக்கவை நூல்கள். வீடுகளில் பூஜை அறைக்கு எப்படி முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவிற்கு வீடுகளில் நூலகம் அமைத்து போற்றுவோர் பலர். தனி மனித மனங்களோடு பேசும் ஆற்றல் கொண்ட இந்த புத்தகங்கள் தான் வீடுகளில் பொக்கிஷம். வீடுகளில் எத்தனை அலங்கார பொம்மைகள், பொருட்கள் காட்சிக்காக இருந்தாலும் வீட்டு வரவேற்பறையில் புத்தகம் இருந்தால் அதன் அழகே இனிமை. மதிப்பும் அதிகம். புத்தகங்களின் மீதான ஆர்வத்தால் அவற்றை வாங்கி, வீடுகளில் நூலகங்களை அமைத்திருப்போர் இங்கே பேசுகின்றனர்...

’கிப்ட்’ என்றால் புத்தகம் தான் - செந்தில் (தனியார் நிறுவனம்):

எம்.ஏ., ஆங்கிலம் படித்ததால் கல்லூரி நாட்களிலே புத்தக வாசிப்பு வந்துவிட்டது. கி.ராஜநாராயணன், வைரமுத்து, ஜெயமோகன் படைப்புகள் பிடிக்கும். இந்த புத்தக வாசிப்பால் கவிதை, சிறுகதை எழுதுவேன். எழுதி நானே படித்து, நானே கிழித்துப் போடுவேன். தினமும் 2 மணி நேரம் புத்தகங்களை வாசிப்பேன். எனக்கு பிடித்த பல படைப்பாளிகளின் புத்தகத்தை வாங்கி நூலகமாக வைத்து பாதுகாக்கிறேன். புத்தக வாசிப்பு துவக்கிய பின் விழாக்களுக்கு சென்றால் எனது அன்பளிப்பு புத்தகமாகத் தான் இருக்கும். மற்றவர்களுக்கும் இதை தான் வலியுறுத்துகிறேன்.

புத்தகம் வாங்குவது நல்ல முதலீடு - ரங்கநாதன் (தனியார் நிறுவனம்):

கல்லூரியில் படிக்கும் போது புத்தகங்களை வாங்கும் வசதி இல்லை. தொழில் துவங்கிய பின், நான் விரும்பிய புத்தகங்கள் அத்தனையும் வாங்கி வருகிறேன். அதிலும் நவீன இலக்கியங்கள் மீது ஆர்வம் அதிகம். ஜி.நாகராஜன், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் படைப்புகள் பிடிக்கும். யுவன் சந்திர சேகர், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், சுஜாதாவின் அனைத்து படைப்புகளின் தொகுப்புகள் மற்றும் சாகித்யஅகாடமி விருது பெற்ற அனைத்து புத்தகங்களையும் தொகுப்பாக வைத்திருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் ரூ.10 ஆயிரத்திற்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்கிறேன். இதை செலவாக கருதவில்லை. முதலாகவே நினைக்கிறேன். வீட்டில் நூலகத்தை பார்த்தாலே மனதிற்கு ஒரு அமைதி கிடைத்தது போன்று இருக்கும். கிடைக்கும் ஓய்வு நேரத்தில் புத்தகங்கள் படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளேன்.

கல்வி புத்தகங்கள் படிக்க பிடிக்கும் - முத்துலட்சுமி (பொதுத்துறை நிறுவனப்பணி):

கல்லூரியில் எம்.ஏ., ஆங்கிலம் படித்ததால் கலை, இலக்கிய புத்தகங்களை படிப்பதில் ஆர்வம் வந்துவிட்டது. பொதுத்துறை நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் எனது விருப்பம் ஆசிரியர் தொழில் மீது தான் உள்ளது. அதனால் கல்வி சார்ந்த புத்தகங்களை வாங்கி படிப்பதை இப்போதும் வழக்கமாக கொண்டுள்ளேன். கல்வியாளர்கள் பார்வையில் ஜி.கிருஷ்ணமூர்த்தி, விவேகானந்தர், காந்தி என முக்கிய நபர்கள் குறித்த புத்தகங்களை தொகுப்பாக வைத்திருக்கிறேன்.

ஆன்மிகத்திலும் நம்பிக்கை அதிகம் என்பதால் அது தொடர்பான புத்தகங்களும் ஏராளம் உள்ளன. வீட்டில் கணவர், மகள் இருவரும் என்னைப் போல் புத்தக வாசிப்பாளர்களாக இருப்பதால், புத்தக கண்காட்சிகளில் விரும்பிய பல தலைப்புகளில் வீட்டில் புத்தகங்கள் குவிந்து விடும். புத்தகத்திற்கு செலவிடுவதை பற்றி கணக்கில் வைத்துக் கொள்வது இல்லை. மகள் பாரதி மருத்துவ கல்லூரியில் இப்போது படிப்பதற்கு அடிப்படை காரணமே அவளது புத்தக வாசிப்பு தான். வீட்டில் பள்ளி பாடங்கள் படிக்க பயிற்சிக்கு வரும் சிறுவர்களிடம் படிப்புடன், புத்தக வாசிப்பு குறித்தும் வலியுறுத்துகிறேன்.

மனநிறைவை தரும் புத்தக வாசிப்பு - ஜோசப் பார்ன்ஸ் (மனித வள ஆலோசகர்):

படிப்பு, வேலை என எந்த நிலையிலும் உயருவதற்கு ஏணியாக இருப்பவை புத்தகங்கள். இதை நிராகரித்து விட்டு உயர்வை நினைக்க முடியாது, என்பதை படிக்கும் போதே உணர்ந்தேன். அதனால் புத்தகங்கள் மீது அளவற்ற மதிப்பு இருந்தது.

கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்ததால், இத்துறை சார்ந்த புத்தகங்களை விரும்பி படிப்பேன். தொழில் நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது சட்டம் சார்ந்த புத்தகங்கள் மீது பார்வை திரும்பியது. அது தொடர்பான புத்தகங்களை வாங்கிவிடுவேன். அதிலிருந்து கல்லூரியில் கற்பிக்கும் நிலை வந்த போது கல்வி சார்ந்த புத்தகங்களை அதிகம் படிக்கவும், வாங்கவும் செய்தேன். செய்யும் தொழில் தொடர்புடைய புத்தகங்களை தான் அதிகமாக படித்துள்ளேன்.

என்ன தான் ’இணையம்’ வந்தாலும் புத்தக வாசிப்பில் கிடைக்கும் நிறைவு அலாதியானது. கல்லூரிகளில் மாணவர்களிடம் பாடபுத்தகங்களை விட மற்ற புத்தகங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்பதையும் பல எடுத்துக்காட்டுகளுடன் தெரிவித்து, ஒவ்வொருவரும் வீடுகளில் நூலகங்களையும் அமைத்தால், அதன் ஆயுள் முழுவதும் அது தரும் பயன் குறித்தும் குறிப்பிட்டு வருகிறேன்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி